சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 19-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அன்று காலை 6 மணிக்கு மேல் காலை 7 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு அபிஷேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், இரவு 8 மணிக்கு மரகேடயத்தில் அம்மன் வீதிஉலாவும் நடைபெறுகிறது.
இதுபோல் தினமும் காலையில் பல்லக்கில் அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து 2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை முறையே சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம், ரிஷப வாகனம், யானை வாகனம், வெள்ளி சேஷ வாகனம், வெள்ளி குதிரை வாகனம் ஆகியவற்றில் இரவு 8 மணிக்கு அம்மன் திருவீதி உலா நடைபெறும்
திருவிழாவின் 9-ம் நாளான 27-ந்தேதி(புதன்கிழமை) காலை 10 மணிக்கு பல்லக்கில் அம்மன் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு அம்மன் தெப்பத்தில் எழுந்தருளி காட்சிஅளிக்கிறார். பின்னர் இரவு 11 மணிக்கு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார்.
திருவிழாவின் 10-ம் நாளான 28-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.31 மணிக்கு மேல் காலை 8.30 மணிக்குள் தைப்பூசத்திற்காக கோவிலிலிருந்து கண்ணாடி பல்லக்கில் அம்மன் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருள்கிறார். பின்னர் நொச்சியம் வழியாக வடதிருக்காவிரிக்கு சென்றடைகிறார். அங்கு மாலையில் தீர்த்தவாரி கண்டருள்கிறார். பின்னர் இரவு 10 மணிக்கு மேல் இரவு 11 மணி வரை ஸ்ரீரங்கம் ெரங்கநாதரிடம் சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகாஅபிஷேகம் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து அதிகாலை 3 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
29-ந்தேதி(வெள்ளிக்கிழமை) வடதிருக்காவிரியிலிருந்து அம்மன் கண்ணாடி பல்லக்கில் எழுந்தருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வழிநடை உபயங்கள் கண்டருளி இரவு 11 மணிக்கு ஆஸ்தான மண்டபம் சென்றடைகிறார். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று கொடிமரத்திற்கு அம்மன் புறப்பாடாகி கொடிபடம் இறக்கப்படுகிறது. இரவு 12 மணிக்கு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வந்து கோவிலை சென்றடைகிறார். தொடர்ந்து நடை சாத்தப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் கோவில்பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment