நீங்கள் பிறந்தபோது, உங்கள் உடலின் அளவு எவ்வளவு இருந்தது? இப்போது எவ்வளவு இருக்கிறது? இடையில் அது வளர்ந்து, விரிவடைய என்ன செய்தீர்கள்? உணவு கொடுத்தீர்கள்!
உங்கள் சாப்பாடு எங்கேயிருந்து கிடைத்தது? இந்த மண்ணிலிருந்து. நீங்கள் சாப்பிட்ட ஒவ்வொரு தாவரமும், தானியமும் இந்த மண்ணாலும், நீராலும்தானே தயாராயின?
நீங்கள் அசைவமென்றால், நீங்கள் சாப்பிட்ட ஆடும், கோழியும்கூட, இந்த மண்ணில் இருந்தவற்றை உண்டுதான் வளர்ந்தன. பின்னர், உங்கள் பசியைத் தீர்த்தன.
ஆக, அடிப்படையில் எப்படியும் இந்த மண்ணால்தான் உங்கள் உடல் உருவாகி இருக்கிறது. உங்கள் உடலில் மண் சேரச் சேர, அதை ‘நான்’ என்று ஏற்றுக்கொண்டீர்கள்.
ஒரு குவளையில் தண்ணீர் இருக்கிறது. அதுவும், நீங்களும் ஒன்றா? இல்லை என்பீர்கள். அந்தத் தண்ணீரை எடுத்துக் குடித்துவிடுங்கள். அது உங்கள் உடலில் கலந்ததும், அதை என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் என்றுதானே?
அதாவது, உங்கள் உணர்ச்சி எல்லைக்குள் வருவதைத்தான் நீங்கள் என்று உணர்வீர்கள். வெளியில் இருக்கும்வரை அது வேறு, நீங்கள் வேறு என்று நினைத்தீர்கள்.
வெளியே இருக்கும் தண்ணீரும், மண்ணும், காற்றும், வெப்பமும் கொண்டுதான் நீங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்கிறீர்களா? அவை உங்களில் ஒரு பகுதியான பின், அவற்றைத் தனித்தனியே வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியவில்லை. மொத்தமாக ‘நான்’ என்று அடையாளமிட்டு உணர்கிறீர்கள்.
உங்களுடைய மூதாதையர்கள் எங்கே போனார்கள்? புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டாலும் இந்த மண்ணுக்குள்தான். அவர்கள் மீதுதான் நீங்கள் தினமும் நடைபோட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை மறக்காதீர்கள். நீங்கள் மட்டும் எங்கே போகப் போகிறீர்கள்? உங்கள் மூலப் பொருளான இதே மண்ணுக்குள்தான்.
கொஞ்சம் மண் உங்கள் வடிவத்தில் மூச்சுவிட்டுக் கொண்டு இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மண், உங்கள் தோட்டத்தில் ஓங்கி வளர்ந்து மரமாகி இருக்கிறது. மேலும் கொஞ்சம் மண், நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலியாகி இருக்கிறது.
இதே மண்தான் சுழற்சியில் மா மரமாக, வேப்ப மரமாக, புல்லாக, பூவாக, மண் புழுவாக, மனிதனாக… இப்படிப் பலப் பல வித்தியாசமான அவதாரங்களை எடுத்துக் கொண்டு இருக்கிறது.
குடத்தில் பிடித்து வைத்தாலும், சிறு குவளையில் பிடித்து வைத்தாலும், அதைத் தண்ணீர் என்றுதானே அழைப்பீர்கள்? அதே நியாயம்தானே உங்களுக்கும்?
சேகரிக்கப்பட்ட பாத்திரங்கள் வெவ்வேறாயினும், எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் மூலப்பொருள் இதே மண்தானே? இதே தண்ணீர்தானே? இதே காற்றுதானே? இதே வெப்பம்தானே?
எனவே, ஒவ்வொன்றிலும் நீங்கள் இருக்கிறீர்கள், அல்லவா?
சுருக்கமாகச் சொன்னால், இந்தப் பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு பகுதி என்பது போல், இந்தப் பிரபஞ்சமும் உங்களில் ஒரு பகுதி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறதா?
இந்த மூளையை வைத்துப் புரிந்துகொண்டால் வியக்கலாம், அவ்வளவுதான்.
மாறாக, உங்கள் உள்ளுணர்வில் இது மலர்ந்துவிட்டால், உங்களுக்குள் பெரும் மாற்றம் வெடிக்கும்.
இதுதான் உண்மையான ஆன்மீகம்!
மற்றபடி, ஆன்மீகம் என்றால் கோயில்களுக்குச் சென்று தேங்காய் உடைப்பதல்ல. மெழுகுவர்த்தி ஏற்றி வைப்பதல்ல. மண்டியிட்டுத் தொழுவது அல்ல.
இதைப் புரிந்துகொண்டால், கடவுளை எதிர்பார்க்காமல், உங்கள் சொர்க்கத்தை நீங்களே தீர்மானித்துக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment