'பேனர், போஸ்டர்களில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யாருடைய படமும் இடம் பெறக்கூடாது' என்ற, அக்கட்சி தலைமை அறிவிப்பை, இளைஞர் அணி செயலர் உதயநிதி அலட்சியப்படுத்தி வருகிறார்.
'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற கோஷத்துடன், தி.மு.க., தரப்பில், தேர்தல் பிரசாரம் துவக்கப்பட்டு உள்ளது. இளைஞரணி செயலர் உதயநிதி உட்பட, 20 பேர், பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.'மக்கள் கிராம சபை' என்ற பெயரில், ஸ்டாலின் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கன மழை காரணமாக, அமைச்சர்கள் தொகுதியில் நடத்த வேண்டிய கிராம சபை கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பிரசார கூட்டங்களுக்கான, 'பேனர், போஸ்டர்'களில், ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யாருடைய படமும் இடம்பெறக் கூடாது என, டிச., 22ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த உத்தரவை ஏற்று, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள்,எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் படங்களை, பேனர், போஸ்டரில் இடம்பெறாமல் பார்த்துக் கொண்டனர்.
ஆனால், உதயநிதிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர் பங்கேற்ற, திருச்சி கூட்டத்திற்கு தடபுடல் விளம்பரங்கள் செய்யப்பட்டு, பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது, மூத்த தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:கட்சி தலைமையின் தடை அறிவிப்பு, உதயநிதியிடம் மட்டும் எடுபடவில்லை. கட்சி நிர்வாகிகளிடம், உதயநிதி தரப்பில் இருந்து, 'கட்சி அறிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம். போஸ்டர், பேனர் எல்லாவற்றிலும் உதயநிதி படம் இருக்க வேண்டும்' என, வலியுறுத்தப்படுகிறது.
சமீபத்தில், திருச்சி சென்ற உதயநிதிக்கு, விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில், உதய நிதியின் படங்களே அதிகளவில் இடம் பிடித்தன. கட்சியின் தாரகமந்திரமான, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் காணாமல் போய் விட்டதாக, மாவட்ட செயலர்கள் புலம்புகின்றனர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.
அழகிரி சொன்னது நடக்குமோ!
தமிழக பா.ஜ., கலை, இலக்கிய அணி தலைவர் நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை:தி.மு.க., தலைமை, ஒரு அறிவிப்பு வெளியிடுகிறது. அதன்படி, ஸ்டாலின் படத்தை தவிர, வேறு யார் படமும், தி.மு.க., பேனர்களில் இடம் பெறக்கூடாது. அந்த உத்தரவு, மற்ற தலைவர்கள் பிரசார பயணத்தில் கடைப்பிடிக்கப்பட்டு, அவர்களின் படங்கள் நீக்கப்படுகின்றன.
ஆனால், திருச்சிக்கு சென்ற உதயநிதிக்கு மட்டும், அந்த அறிக்கை செல்லுபடியாகவில்லை. மூத்த நிர்வாகிகள் சலிப்படைந்துள்ளனர்.உதயநிதி, கட்சியில் செய்யும் நடவடிக்கைகளை பார்த்தால், அழகிரி சொன்னது போல, ஸ்டாலின் என்றைக்குமே வருங்கால முதல்வர் தான்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment