Saturday, January 16, 2021

தை அமாவாசை ஸ்பெஷல் !

 பல வருடங்களுக்கு முன் மருத்துவக்குடி சென்றிருந்தேன். அங்கு செல்லும்போதெல்லாம் அருகில் உள்ள இலந்துறை கிராமத்துக்குச் சென்று, அங்கு கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீசுந்தரேஸ்வர ஸ்வாமியை தரிசிப்பது வழக்கம். ஸ்ரீஅபிராமியிடம் எனக்கு ஓர் ஈடுபாடு உண்டு. அந்த க்ஷேத்திரத்துக்கு தட்சிண பத்ரிகாஸ்ரமம் என்ற பெயரும் உண்டு.

மருத்துவக்குடிக்குத் தெற்கே உள்ள விட்டலூரைத் தாண்டி, வயல்களின் வழியே நடந்து சென்றால், இரண்டரை கி.மீ. தூரத்தில் இலந்துறை. சாலை மார்க்கமாகச் சென்றால், 5 கி.மீ. தொலைவு. நான் பெரும்பாலும் விட்டலூர் வழியில் செல்வதே வழக்கம்.
மாலை நான்கு மணிக்கு நானும் மனைவியும் இலந்துறைக்குப் புறப்பட் டோம். அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்யச் சொல்லி, தரிக்க வேண்டும் என்பது சங்கல்பம். நாங்கள் இலந்துறையை அடைந்தபோது சந்தியா காலம் ஆகியிருந்தது. கோயில் வாசலில் சிவப் பழமாக நின்றிருந்தார் அர்ச்சகர் தட்சிணாமூர்த்தி சிவாச்சார்யர். எங்களைப் பார்த்ததும், ‘‘வரணும்… வரணும். ஒங்களுக்கு அனுக்கிரகம் பண்ண, அம்பாள் அபிராமி உள்ளே தயாரா காத்துண்டுருக்கா. புஷ்கரணில கால் அலம்பிண்டு உள்ளே வாங்கோ’’ என்று கூறிவிட்டு சந்நிதிக்குள் சென்றார்.நாங்கள், ஆலய புஷ்கரணியில் கால்களைச் சுத்தம் செய்து கொண்டு கோயிலுக்குள் நுழைந்தோம். எல்லாச் சந்நிதிகளையும் தரிசித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்தோம். நான் தயங்கியபடி, ‘‘குருக்களே… முன்னேற்பாடு இல்லாம திடீர்னு சொல்றேனேனு நெனச்சுக்கப்டாது. நேக்கு ஓர் ஆசை. நீங்க சகஸ்ரநாமம் சொல்லி அம்பாளுக்கு அர்ச்சனை பண்றதை தரிசிச்சு ரொம்ப நாளாறது. இன்னிக்கு அந்த பாக்கியம் கிடைக்கணும்!’’ என்றேன்.
தட்சிணாமூர்த்தி சிவாச்சார்யர், லலிதா சகஸ்ர நாமத்தை ஒரு நாமாவளி கூட விட்டு விடாமல், காதுக்கு
இனிமையாக
உச்சரித்து அர்ச்சிப்பார். சில நாமாவளிகளைச் சொல்லும்போது அவர் கண் கலங்கி விடுவார். அப்படியரு பக்தி சிரத்தை! (இப்போது அவர் இல்லை. சிவசாயுஜ்ய பதவி அடைந்து சில வருடங்களாகிறது.)
உடனே சிவாச்சார்யர், ‘‘அவசியம் பண்ணிடுவோம்! ஆனா ஒண்ணு. சகஸ்ரநாமார்ச்சனை பண்ணணும்னா நிவேதனத்துக்கு சர்க்கரைப் பொங்கலும், உளுத்தம் வடையும் அவசியம் வேணும். அதுக்கு வேண் டிய பொருட்கள் இருக்கானு மொதல்ல கேட்டுக்கறேன்’’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
திரும்பி வந்தவர், ‘‘ஒங்க அதிர்ஷ்டம் பாருங்கோ! சர்க்கரைப் பொங்கல், கொஞ்சம் வடை, புளியஞ்சாதம் பண்றதுக்கு மாத்திரம்தான் பொருட்கள் கைவசம் இருக்கு! சரி, நிவேதனம் தயாராகிற வரைக்கும் சித்த இப்டி ஒக்காந்து பேசுவோமே’’ என்றார்.
உட்கார்ந்தோம். அப்போது என் மனசிலிருந்த ஒரு சந்தே கத்தை அவரிடம் கேட்டேன்: ‘‘குருக்களே… இவ்ளவு பக்தி சிரத்தையா, ஆசாரம் குறையாம நித்ய பூஜை பண்ணிண்டு வரேளே! இதையெல்லாம் ஒங்களுக்கு குரு ஸ்தானமா இருந்து சொல்லி வெச்சது யாரு?’’
‘‘பேஷா’’ என்ற சிவாச்சார்யர் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘இதுக்கெல்லாம் காரணம் என் அத்திம்பேர் (அக்கா புருஷன்) காலஞ்சென்ற கங்கா ஜடேச சிவாச்சார்யர்தான். அவர் பொண்ணையே நேக்கு கல்யாணம் பண்ணி வெச்சார். அவர் ஸ்ரீவித்யா உபாசகர். அவர் காலமாறதுக்கு சில நாட்கள் முன்னால, ஒரு வெள்ளிக்கிழமை. மிக மதுரமாக லலிதா சகஸ்ர நாமாவளியை அவர் சொல்ல, என்னை அம் பாளுக்குக் குங்குமார்ச்சனை பண்ணச் சொன்னார். அர்ச்சனை முடிந்ததும் அருகில் அழைத்து என் இரண்டு கைகளையும் புடிச்சுண்டு, ‘தட்சிணாமூர்த்தி! இந்த அம்மா அபிராமிய ஒங்கிட்ட ஒப்படைக்கிறேன். பேசற தெய்வம்டா இவ… மடி, ஆசாரம், பக்தியோட காலந்தவறாம பூஜை பண்ணிண்டு வா. நோக்கு நெறய ‘தன’த்த (பணம்) கொடுக்கிறாளோ இல்லையோ… நல்ல ஞானத்தைக் கட்டாயம் குடுப்பா’னு சொல்லிப்ட்டு, அம்பாளின் ரண்டு திருவடிகளையும் தொட்டு, கண்களில் ஒற்றிக் கொள்ளச் சொன்னார். அப்படியே செய்தேன். அந்த நேரத்துல என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியல. அத்திம்பேரோட ரண்டு கால்களையும் புடிச்சுண்டு அழ ஆரம்பிச்சுட்டேன். அவர் சமாதானம் பண்ணினார்.
அவர் எத்தனையோ நல்ல விஷயங்கள எனக்குச் சொல்லிக் கொடுத்துட்டுப் போயிருக்கார். அதுல ஒண்ணு… கர்ப்பக்கிரகத்துக்கு உள்ளேர்ந்து பூஜை முடிச்சுண்டு வெளில வரச்சே ஸ்வாமி- அம்பாளுக்கு நம்ம பின்புறத்த காமிச்சுண்டு வரப்படாதுங்கறது. அம்பாள பாத்துண்டே பின்புறமா நடந்து வரணும்பார். அதை இன்னி வரைக்கும் கடைப் புடிச்சுண்டு வரேன்!’’ என்று சொல்லி முடித்த சிவாச்சார்யரின் கண்கள் பனித்தன.
நிவேதனங்கள் தயாராகி விட்டன. அர்ச்சனைக்கு எழுந்தார் சிவாச்சார்யர். சகஸ்ரநாமார்ச்சனை முடிய ஒரு மணி நேரமாயிற்று. தீபாராதனை முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்டோம். இரவு பத்து மணி. ‘இரவு தங்கிவிட்டுக் காலையில் ஊர் திரும்பலாமே’ என்றார் சிவாச்சார்யர். நான் மறுத்து விட்டேன்.
வயல் வரப்பு வழியாக ஊருக்கு நடையைக் கட்டினோம். நல்ல நிலா வெளிச்சம்! திடீரென நிலவைப் பெரிய மேகம் ஒன்று மறைக்க வெளிச்சம் குறைந்தது. தட்டுத் தடுமாறி நடந்தோம். நெடு நேரம் ஆகியும் விட்டலூர் கிராமம் வந்த பாடில்லை. பிறகுதான், திசை மாறி வந்து விட்டது தெரிந்தது. மனைவி அழுதே விட்டாள். வேறு வழியின்றி அங்கேயே அமர்ந்தோம். நான் துக்கத்தை அடக்கியபடி, ‘அபிராமி… ஒன்ன தரிசனம் பண்ணிட்டு வர்றப்ப, எங்களை இப்படித் தவிக்க விடலாமா? சரியான பாதையைக் காட்டும்மா!’ என்று பிரார்த்தித்தேன். அபிராமி மனமிரங்கினாள் போலும்!
திடீரென பெருங்காற்று. மேகக் கூட்டம் வேக வேகமாக விலக… நிலவு வெளிப் பட்டது. எங்களுக்கு நேர் எதிர் திக்கில், தெரு விளக்கின் ஒளி. ஆம், அது விட்டலூர் கிராமம்தான்! உடனே அந்த திசை நோக்கிப் பயணித்து, மருத்துவக்குடிக்கும் வந்து சேர்ந்தோம். மறு நாள் காலை மீண்டும் இலந்துறை சென்று அம்பாளுக்கு சகஸ்ரநாமார்ச்சனை நடத்தி வர வேண்டும் என்ற சங்கல்பத்துடன் இரவு கண்ணயர்ந்தோம்!
மறு நாள். நாங்கள் இலந் துறையை அடைந்தபோது காலை 9:30 மணி. கோயில் வாசலில் சிவாச்சார்யர் கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தார். அவரிடம் முதல் நாள் இரவு நிகழ்ந்த சம்பவங்களை விவரித்தேன். பிறகு, ‘‘குருக்களே… ஏன் ஒரு மாதிரி இருக்கேள்?’’ என்று தயக்கத்துடன் கேட்டேன்.
அவர் சற்று துக்கம் தோய்ந்த குரலில், ‘‘மனசு சரியால்லே! நேத்திக்கு இந்த ஊர்ப் பையன் ஒருத் தன்கிட்ட ரூவாயக் கொடுத்து மளிக சாமான் வாங்கிண்டு வரச் சொல்லிருந்தேன். நேத்திக்குப் போனவன் இன்னும் வந்து சேரலை. இப்போ ஸ்வாமி நிவேதனத்துக்கு ஒரு மணி பச்சரிசிகூட இல்லே!’’ என்று கண் கலங்கினார். அவரைச் சமாதானப் படுத்தி ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றோம். அப்போது நடுத்தர வயதுடைய ஒருவர், சாக்கு மூட்டை ஒன்றைத் தூக்க முடியாமல் தூக்கியபடி உள்ளே வந்தார். அம்பாள் சந்நிதிக்கு முன் அந்த மூட்டையை இறக்கி வைத்தார். நாங்கள் முகத்தில் கேள்விக்குறியோடு அவரைப் பார்த்தோம். அவர் பேச ஆரம்பித்தார்: ‘‘எனக்கு கும்பகோணம். ஹரிஹரன்னு பேரு. எனக்குத் தெரிஞ்ச ஒருத்தர் மூலம் இந்தக் கோயில் மகிமையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அதான் இன்னிக்குக் காத்தால கிளம்பி னேன். விட்டலூர் வழியா வந்துண் டிருந்தேன். வழியில் அம்பது வயசு மதிக்கத் தக்க பெண் ஒருவர் இந்த மூட்டைய தூக்க மாட்டாம தூக்கிண்டு வந்தார். அவர் என்னிடம், ‘ஐயா… ஒங்களப் பாத்தா எலந்துற கோயிலுக்குப் போறாப்ல தெரியுது. நானும் அங்கதான் வாரேன். இந்த மூட்டைக்காக குருக்களய்யா கோயில்ல காத்துட்டிருப்பாரு! இவ்ளோ தூரம் தூக்கியாந்துட்டேன். தல கனக்குது. எனக்காக இதக் கொஞ்சம் கோயில் வரைக்கும் சொமந்துகிட்டு வர முடியுமா’னு கேட்டாள். என்னால தட்ட முடியல. அந்தம்மா மாநிறம். நெத்தியில ஒரு முழு ரூவா அளவு குங்குமப் பொட்டு. அடர்ந்த கூந்தல்ல மல்லிப் பூவும், தாழம்பூவும் வெச்சுண்டிருந்தா. மூட்டையை என் தலைல ஏத்தி விட்டுட்டு, ‘நீங்க முன்னால போய்ட்டேருங்க… நா பின்னாலயே வர்றேன்’னு சொன்னா!’’ என்றார் ஹரிஹரன்.
மூட்டையைப் பிரிக்கச் சொன்னார் குருக்கள். அதில் பொன்னி பச்சரிசியுடன் நிறைய வெல்லம், உளுந்து, பயறு, முந்திரி, திராட்சை, மிளகு, கடுகு, சீரகம், நல்லெண்ணெய், சுத்தமான நெய் ஆகியவை தனித் தனி பாக்கெட்டுகளில் இருந்தன. உடனே ஸ்வாமி- அம்பாளுக்கு நிவேதனம் தயார் பண்ண திருமடப்பள்ளிக்கு விரைந்தார் சிவாச்சார்யர்.
இதற்குள், முன் தினம் சிவாச்சார்யரிடம் பணம் வாங்கிச் சென்ற நபரும் மளிகைச் சாமான்களோடு வந்து சேர்ந்தார்! நாங்கள், மூட்டையைக் கொடுத் தனுப்பிய அந்தப் பெண்ணின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். கடைசி வரை அவள் வரவேயில்லை. பிறகு வெயில் தாழ நாங்கள் கிளம்பினோம். புறப்படும் போது அந்தப் பெண்மணி கொடுத்தனுப்பிய கோணிப்பை என் கண்ணில் பட்டது. அதில், ‘அபிராமி அரிசி மண்டி’ என்று கொட்டை எழுத்து களில் பொறிக்கப்பட்டிருந்தது!
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !
Image may contain: 1 person, sky

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...