மரண அறிவிப்பு போஸ்டரைப் பார்த்துச் சிரித்தார், ஒரு நாத்திக நண்பர்.
என்ன சிரிக்கிறீர்கள் என்றேன்.
இன்னார் இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.
மரணமடைந்தவர்களை இறைவனடி சேர்ந்தார், சிவலோகப் பிராப்த்தி அடைந்தார், வைகுண்ட ப்ராப்தி பெற்றார் என்பவர்கள்,அவர்களுக்கே அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இல்லை பாருங்கள், இறந்தவர்கள் அப்படி அங்கு செல்கிறார் என்றால் இவர்களெல்லாம் மகிழ்ச்சியல்லவா அடைய வேண்டும், அதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே என்று சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தார்.
நானும் எனது பங்குக்குக் கொஞ்சம் சிரித்துவிட்டு அவரிடம் கேட்டேன், உங்களுக்குப் பெண் இருக்கிறாரா, அவருக்குத் திருமணம் ஆகிவிட்டதா, என்று.
ஆமாம் என் பெண்ணிற்கு திருமணமாகிவிட்டது, எனக்கு தெரிந்த நல்ல இடத்தில் கொடுத்திருக்கிறேன். மாப்பிள்ளை ஒரு சாஃப்ட்வேர் என்ஜீனியர்,நல்ல பையன் ஏன் கேட்கிறீர்கள் என்றார்.
திருமணம் முடிந்து உங்கள் மகள் மாப்பிள்ளை வீட்டுக்குச் சென்றபோது எப்படி உணர்ந்தீர்கள் என்றேன்.
ஒரு பக்கம் மிக சந்தோஷமாக இருந்தால்கூட ஏனோ ஒரு இனம் புரியாத வருத்தம் இருந்தது. யாருக்கும் தெரியாமல் விக்கிவிக்கி அழுதேன் என்று சொன்ன அவரது கண்களில் அப்போதும் ,லேசாக கண்ணீர் வந்தது.
சார் உங்களுக்கு தெரிந்த,நல்ல பையன்,நல்ல குடும்பத்திற்குத்தானே செல்கின்றார்கள்?பின் ஏன் வருத்தப்பட்டீர்கள்?
இப்படித்தான் சார், அவர்கள் இறைவனடி சேர்ந்ததற்கான வருத்தமல்ல,அது மிகவும் சந்தோஷமான விஷயந்தான், ஆனால் இத்தனை நாள் நம்மோடு இங்கு இருந்தவர் இனி இருக்கமாட்டாரே என்ற வருத்தந்தான் என்றேன்.
No comments:
Post a Comment