"பச்சை மலை பவள மலை எங்கள் மலையே"
பச்சை மலைக்கு இணையாக பவளமலை கோபிசெட்டிபாளையத்தின் முக்கிய அடையாளமாக உள்ளது.
பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும்.
பச்சைமலை எப்படி குமரக்கடவுளின் ஆலயமாக அமைந்திருக்கிறதோ, அப்படியே பவளமலையிலும் குமரக்கடவுள் குடிகொண்டிருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
மரங்கள் அடர்ந்த ஒரு அழகிய குன்று. உச்சியில் முருககடவுள் முத்துக்குமாரசாமியாக குடிகொண்டிருக்கும் காட்சியை காண படிக்கட்டுகள் வழியாகவும் செல்லலாம்.
கிரிவல பாதையில் வாகனங்களிலும் செல்லலாம்.
கோவிலில் முத்துக்குமாரசாமி சன்னதி, வள்ளி-தெய்வானை சன்னதிகள், கைலாசநாதர் (சிவன்), இடும்பன், விநாயகர், நவக்கிரகங்கள் என்று தனித்தனி சன்னதிகள் உள்ளன.
இந்த கோவிலும் பச்சைமலையில் முருகக்கடவுளை வைத்து வழிபாடு செய்த துர்சாவ முனிவரால் உருவாக்கப்பட்டது என்றே கூறப்படுகிறது.
ஒரு முறை வாயுபகவானுக்கும், ஆதிசேஷனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அது படிப்படியாக பெரியதாகி, அவர்களில் யார் பெரியவர்? என்ற போட்டி எழுந்தது.
அந்த போட்டி போராக மாறியது. தங்கள் பலத்தையும் சக்தியையும் காட்டி அவர்கள் போர் செய்தனர். யாரும் யாரையும் வெல்ல முடியாத நிலை.
வாயுபகவான் தனது சக்தியை எல்லாம் திரட்டி மேரு மலையை தகர்த்துக்காட்டுகிறேன் என்று சவால் விட்டு மலையுடன் மோதுகிறார். ஆதிசேஷன் மேரு மலையை அழுத்தமாக பிடித்திருந்தும்,
காற்றின் வேகத்தை தாங்க முடியாக மேரு மலையின் சில பாகங்கள் மலையை விட்டு பறந்தன. அதில் விழுந்த ஒரு துளி இடம்தான் பவளமலை என பவளமலையின் ஸ்தல புராணம் கூறுகிறது.
மகேசனாகிய சிவபெருமான் இந்த கோவிலில் குடியிருந்து அவரை நாடி வரும் மக்களுக்கு நல்லாசி வழங்குகிறார்.
இந்த லிங்கமானது, அருகில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் உழவுப்பணி செய்யும்போது சுயம்புவாக தோன்றியது என்றும், அதையே எடுத்து வந்து மலைமீது வைத்து தொன்று தொட்டே வணங்கி வருவதாகவும் ஸ்தல புராணம் கூறுகிறது.
பவளமலை கோவிலில் சிவபெருமானுக்கு ஈடாக முருகபெருமானை கொண்டு நடைபெறும் திரிசத அர்ச்சனை சிறப்பு மிக்கதாகும்.
திரி என்றால் மூன்று, சதம் என்றால் நூறு. திரிசதம் என்பது முந்நூறு. அதாவது முருக பெருமானுக்கு செய்யப்படும் புகழ்மிக்க அர்ச்சனை இது.
ஆறுமுகக்கடவுள் என்று போற்றப்படும் முருகன், பன்னிரு கைகள், ஆறு முகத்துடன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று சிவபெருமானை போன்று ஐந்தொழில்களையும் மேற்கொள்பவராக இருக்கிறார்.
அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது ஒரு முகத்துக்கு 50 அர்ச்சனைகள் வீதம், ஆறு முகங்களுக்கும் சேர்த்து 300 அர்ச்சனைகள் செய்வதே திரிசத அர்ச்சனை.
சூரபத்மனை வதம் செய்து இந்திரலோகத்து தேவர்களை எல்லாம் முருக கடவுள் மீட்டார். எனவே அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் தேவர்களின் அரசன் இந்திரன் தலைமையில் தேவர்களால் செய்யப்பட்ட அர்ச்சனையே திரிசத அர்ச்சனை. எனவே எதிரிகளை வீழ்த்தும் திரிசத அர்ச்சனை என்றும் இது அழைக்கப்பட்டது.
திருமணத்தடை நீங்க, குழந்தை பேறு கிடைக்க, தொழில், அரசியலில் எதிரிகளிடம் இருந்து வெற்றி பெற விரும்புபவர்கள் பவளமலையை தேடி வந்து திரிசத அர்ச்சனையை சிறப்பாக செய்வது வழக்கம்.
பவளமலை கோவில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கிறது. 2004-ம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டு உள்ளது.
பவளமலை முருகனை காண படியேறி சென்றால் அதுவரை பக்தர்களின் எண்ணங்களில் குடிகொண்டிருந்த துன்பங்களும், துயரங்களும் காணாமல் போகும் என்பதே நம்பிக்கை
கோபியில் இருந்து பாரியூர் செல்லும் சாலையில் முருகன்புதூரில் இருந்து கூப்பிடும் தொலைவில் கிராமத்துக்குள் அமைந்திருக்கிறது பவளமலை.
No comments:
Post a Comment