Sunday, August 8, 2021

நவரசா வெப் தொடரின் 9 பகுதிகளும் பார்த்தேன்.

 1. எதிரி - கருணை

விஜய் சேதுபதி, ரேவதி, பிரகாஷ் ராஜ் என்கிற நடிப்பு அரக்கர்களை வைத்துக்கொண்டு பத்தாயிரம் வாலா பட்டாசு வெடிக்க வேண்டிய இடத்தில் கேப் வெடித்திருக்கிறார்கள்.
தண்டிக்க வேண்டிய மனிதனை மன்னித்தால்தான் கருணை. மன்னிக்க எனக்குத் தகுதியில்லை, நானும் குற்றம் செய்தவள் என்று ரேவதி சொல்லும்போது எப்படி கருணையாகும்? விஜய் சேதுபதி கொலை செய்த மனிதன் கெட்டவன் என்றால் அவனுக்கு மனசாட்சியாக வந்து கேள்வி கேட்கும் தகுதியும் இல்லையே..தெளிவில்லை!
2. சம்மர் ஆஃப் 92 - நகைச்சுவை
நியாயமாக இந்தக் கதை அருவருப்பு உணர்ச்சிக்குதான் பொருந்தும். பார்ப்பவர்கள் ஒருவருக்கொருவர் கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டால்தான் சிரிக்க முடியும்.
3. ப்ராஜெக்ட் அக்னி - ஆச்சரியம்
99 சதவிகிதம் ஆங்கிலமும் போனால் போகிறதென்று ஒரு சதவிகிதம் தமிழும் பேசும் படம். தமிழில் சப்டைட்டில் அமைத்துக்கொண்டு பார்த்தாலும் அதி மேதாவிகளுக்கு மட்டும் புரியலாம். விஞ்ஞானப் பின்னணியிலான இந்தக் கதையை மிகவும் எளிமையாகவும் புரியவைக்க இயலும். அதற்கு மிகவும் மெனெக்கெட வேண்டும். சுஜாதா இல்லையே.. என்ன செய்வது?
4. பாயாசம் - அருவருப்பு
மற்ற கதைகள் எல்லாம் சர்வதேசம் செல்வதை மனதில் வைத்துக்கொண்டு யார் யாரோ ரசனைகளுக்குத் தீனி போட முயலும்போது என் கலாச்சாரப் பின்னணியை என் ரசனையுடன் நீ பார் என்று சொல்கிற நல்ல படைப்பு. தி. ஜானகிராமன் எழுதிய சிறுகதையை..ஒரு மனிதனின் மன விகாரத்தை பளிச்சென்று உணர்த்தும் படைப்பு. இயக்குனர் வஸந்த் மற்றும் நடிகர் டெல்லி கணேஷுக்கு பெருமை கூட்டும் படம் இது.
5. பீஸ் - அமைதி
இலங்கை போராளிகளின் போராட்டப் பின்னணியில் மனதில் கொஞ்சமும் ஒட்டாமல் சொல்லப்பட்டிருக்கும் கதை. சிறுவன் தம்பி என்று குறிப்பிட்டது நாயை என்று அறியும்போது மட்டும் அட என்று ஒரு வியப்பு எட்டிப் பார்க்கிறது. மற்றபடி அமைதி என்கிற உணர்வை எங்கே எப்படி பிரதிபலிக்கிறது என்று புரியவில்லை.
6. ரெளத்திரம் - கோபம்
கடன் வைத்துவிட்டு ஓடிப்போன தந்தை. கல்விக் கனவில் மகள். ஸ்போர்ட்ஸ் கனவில் மகன். கக்கூஸ் கழுவும் வேலைக்குப் போகும் தாய். சீரியல் நெடியடித்தாலும் இரண்டு லேயர்களில் வழங்கப்பட்டு கடைசியில் வளர்ந்த மகள் விசாரிப்பது வேறு ஒரு குற்றவாளியை என்று காட்டும் டிவிஸ்ட் எடுபடுகிறது. தன் தாய் தடம் மாறியதற்கு அவள் காரணமில்லை என்பதை உணர்ந்து மகன் அதற்கான காரணகர்த்தா மீது சரியான கோபத்தைக் காட்டும்போது..மகளால் மட்டும் ஏன் புரிந்துகொள்ள இயலவில்லை என்கிற கேள்வி வருகிறது. நடிகர் அரவிந்தசாமியின் இயக்கதில் முதல் படைப்பு எனும்போது ஊக்கப்படுத்தவே தோன்றுகிறது.
7. இன்மை - அச்சம்
இஸ்லாமியர் வாழ்க்கைப் பின்னணியில் சொல்லப்பட்டிருக்கும் பேய்க்கதை மாதிரியான கதை. சொன்ன விதத்தில் ஆங்காங்கே கொஞ்சம் அச்சமூட்டத் தவறவில்லை. ஆங்காங்கே கொஞ்சம குழப்பமூட்டவும் தவறவில்லை.
8.துணிந்த பின்.. - வீரம்
நக்சலைட்டுகளைப் பிடிக்க காட்டுக்குள் செல்லும் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ் வீரர்களில் பலர் சுடப்படுகிறார்கள். சரி. நக்சலைட் கூட்டத்தின் தலைவன் ஹீரோவிடம் சிக்குகிறான். சரி. அவனை கையில் விலங்கிட்டு ஜீப்பில் அழைத்து வரும் ஹீரோவிடம் பேச்சுக் கொடுக்கிறான் அவன். சரி. ஹீரோவின் கர்ப்பிணி மனைவி தன் கணவனைத் தேடி ஒப்படைக்கச் சொல்லி போலீசில் புகார் கொடுக்கிறாள். சரி. நக்சலைட் தலைவன் புத்திசாலித்தனமாக ஹீரோவுக்கு சவால் விட்டு தப்பிச் செல்கிறான். சரி. அவனை சுடவோ, மடக்கவோ கையில் துப்பாக்கியுடனிருக்கும் ஹீரோவுக்கு வாய்ப்பிருந்தும் கோட்டை விட்டுவிட்டு தப்பிச் செல்லும் தலைவன் ஜீப்பின் பின்னால் உன்னைக் கொன்றே தீருவேன் என்று வெறித்தனமாக கத்தியபடி ஓடி காட்டுக்குள் மறைகிறான் ஹீரோ. சரி. அவன் மனைவி குழந்தை பெற்று அந்தக் குழந்தையுடன் அவனுக்காகக் காத்திருக்கிறாள். சரி. இதில் வீரம் எந்த இடத்தில் காட்டப்பட்டுள்ளது என்பது மட்டும்தான் கேள்வியாகவே இருக்கிறது.
9. கிதார் கம்பி மேலே நின்று.. - சிருங்காரம்
லண்டனில் மட்டும்தான் இசை இருப்பதாகவும், அங்கே போகவேண்டும் என்றும் துடிப்புடனிருக்கும் இளம் இசையமைப்பாளர் விளம்பரப் பாடல் பாட வரும் இளம்பெண்ணை பார்த்தவுடன் மையல் கொள்கிறான். அவள் நடை, உடை, பாவனை, பேச்சு, புத்திசாலித்தனம் எல்லாம் ஈர்க்க கொஞ்ச நேரத்தில் அவளை மீண்டும் சாலையில் சந்திக்கும்போது தன் பைக்கில் லிஃப்ட் தருகிறான். பிறகு அவர்கள் முற்றுப் புள்ளியே இல்லாமல் பேசிப்பேசிப்பேசி காதலிக்கிறார்கள். ஏற்கெனவே ஒரு காதல் அனுபவம் உள்ள ஹீரோவின் இந்த இரண்டாம் காதலும் எந்த காரணத்தாலோ கைகூடாமல் ( காரணம் சொல்லப்படவில்லை.) ஆனால் நினைத்தபடி லண்டனுக்கு வந்து பாட்டு பாடியபடி தன் அனுபவத்தைப் பகிர்கிறான் ஹீரோ. இசையாலும், காதல் தோய்த்த வசனங்களாலும் நிரப்பப்பட்ட கதையில் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்.. அது .. ஜீவன்!
9 கதைகளில் ஒரே நாளில் 7 கதைகளும் மறுநாள் இரண்டு கதைகளுமாக இடைவெளி விட்டுப் பார்த்தும் ஒரு அயர்ச்சி மேலிட்டது நிஜம்.
ஒரு வேளை தினம் ஒரு கதையாகப் பார்த்திருக்க வேண்டுமோ என்றும் தோன்றுகிறது. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஒன்பது படைப்புகள் என்பதால் அட்லீஸ்ட் ஒரு நாளைக்கு மூன்று என்கிற அளவிலாவது பாருங்கள்.
மாறுபட்ட ரசனைகள் கொண்ட ரசிகர்களுக்கு என் சில கருத்துகள் ஏற்க முடியாமலும் இடறலாம். என் கருத்துகள் என் ரசனை சார்ந்தவை மட்டுமே. எந்தப் படைப்பையும் எழுத்தாளன் என்கிற போர்வையைக் கழற்றி வைத்துவிட்டு ரசிகனாக மட்டுமே பார்த்து விமரிசிக்கிறேன் என்கிற டிஸ்க்ளைமருடன் முடிக்கிறேன்..
May be an image of 8 people, beard and text that says 'A NETFLIX SERIES NAVA RASA'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...