கன்னியாகுமரி மாவட்டம், அருமனை பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது விவகாரம் தொடர்பாக, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமியின் மருமகள் மெர்சி செந்தில்குமார், திண்டுக்கல் சர்ச் ஒன்றில் பேசியது, அரசியல் வட்டாரத்தில், அடுத்த புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இரங்கல் கூட்டம்
சமீபத்தில் இறந்த ஸ்டேன் சாமியின் அஸ்தி, சில நாட்களுக்கு முன், திண்டுக்கல் நகருக்கு எடுத்து வரப்பட்டு, அங்குள்ள உள்ள பெஸ்சி சர்ச்சில், அஞ்சலிக்காக வைக்கப்பட்டது; இரங்கல் கூட்டமும் நடந்தது.இதில் மெர்சி செந்தில்குமார், 'பாதிரியார்களையோ, கிறிஸ்துவ கன்னியாஸ்திரிகளையோ கைது செய்வதற்கு, எவனுக்கும் அதிகாரம் கிடையாது.'இவர்களை கைது செய்ய வேண்டும் என்றால், வாடிகனில் இருக்கும் போப்பிடம் அனுமதி வாங்க வேண்டும்' என, பேசியது சர்ச்சையாகி விட்டது.
இது குறித்து திண்டுக்கல் தி.மு.க.,வினர் கூறியதாவது: மெர்சி, தனியார், 'டிவி' சேனலில் வேலை பார்த்தார். அப்போது, சென்னை சென்ற பெரியசாமி மகன் செந்தில்குமார், அவரை பார்த்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் உருவானது. முக்குலத்தோர் இனத்தை சேர்ந்த பெரியசாமி, இவர்களின் திருமணத்திற்கு அனுமதி தரவில்லை.
நெருக்கடி
நீண்ட இழுபறிக்கு பின் திருமணம் நடந்தது. சில காலத்திற்கு பின், குடும்பம் ஒன்று சேர்ந்தது. ஆனால், மாமனார் பெரியசாமி ஒதுங்கியே இருந்தார். பின், 2016ல் பழநி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு, செந்தில்குமார் வெற்றி பெற்றார்; தொடர்ந்து, இந்த ஆண்டும் எம்.எல்.ஏ.,வானார். ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் பெரியசாமியும், செந்தில்குமாரும், அமைச்சர் பொறுப்பை எதிர்பார்த்தனர்.
ஆனால், மூத்தவர் என்ற முறையில், கூட்டுறவு துறை ஒதுக்கப்பட்டு, பெரியசாமி மட்டும் அமைச்சர் ஆக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு சாப்பாடு வழங்கும் அனுமதியை தன், 'ஆதவன் புட்ஸ்' நிறுவனத்துக்காக மெர்சி, அதிகாரத்தை பயன்படுத்தி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆதவன் என்பது, அவரது மகன் பெயர். ஆனால், வேறு யாரோ ஒப்பந்தம் பெற்று, சப்ளை செய்தனர். 'அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை' என, மெர்சி மறுத்தார்.இருந்தாலும், இந்த விஷயம் காட்டுத் தீயாக பரவி, பத்திரிகைகளிலும் செய்தி வெளிவர, அமைச்சர் பெரியசாமிக்கு, அரசியல் ரீதியில் நெருக்கடி ஏற்பட்டது.
உத்தரவு
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது குறித்து, கட்சியினர் யாரும் பேச வேண்டாம் என, தி.மு.க., தலைமை மறைமுகமாக உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், மெர்சியின் சர்ச்சை பேச்சு, பெரியசாமிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தன் இயல்பான பேச்சை எதிர்க்கட்சியினரும், பா.ஜ.,வினரும் பெரிதுபடுத்துகின்றனர் என்று, மெர்சி கூறி வருகிறார். ஆனால், இவை மெர்சியால் திட்டமிட்டு செய்யப்படுபவை. இவ்வாறு, திண்டுக்கல் தி.மு.க.,வினர் கூறினர்.
'சொல்ல வந்த கருத்து!'
மெர்சியின் கணவரும், பழநி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்குமார் கூறியதாவது: என் மனைவி மெர்சி, சர்ச் ஒன்றில் பேசியதாக வெளியாகி இருக்கும் வீடியோவில், சில சித்தரிப்புகள் இருக்கின்றன. தன் பேச்சில், எந்த இடத்திலும், அவர் தமிழக அரசை குறை கூறி பேசவில்லை. பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அதை அவர்களுக்கு மேல் இருக்கும் நபர்களிடம் தெரிவித்து விட்டு, முறையாக செய்து இருக்கலாம் என்பது தான், மெர்சி சொல்ல வந்த கருத்து.
இதை தான், தமிழக அரசையும், போலீசையும் குற்றஞ்சாட்டி பேசியிருப்பது போல, திரித்து பரப்புகின்றனர். அவரது பேச்சில், எந்த உள்நோக்கமும் கிடையாது. அதோடு மெர்சியின் பேச்சை, குடும்பத்தில் பிரச்னை இருப்பது போலவும் சித்தரித்து, தகவல் பரப்புவது, அரசியல் எதிரிகளின் நோக்கமாக உள்ளது. எங்கள் குடும்பத்துக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அமைதியாக, எங்கள் வாழ்க்கையை தொடருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment