வித்யா மூவிஸ் 'சூர்யகாந்தி' 1973-இல் வெளிவந்த ஒரு கருப்பு வெள்ளைப் படம். 100 நாட்கள் ஓடிய வெற்றிச் சித்திரம்.
இசை 'மெல்லிசை மன்னர்'. பாடல்கள் கவிஞர் கண்ணதாசன்.
தயாரிப்பு வேணுகோபால். இயக்கம் முக்தா ஸ்ரீனிவாசன்.
கணவன் தன்னைவிட அதிகம் சம்பாதிக்கும் தன் மனைவிக்கு சமூகத்தில் அவளுக்குக் கிடைக்கும் மதிப்பையும், அங்கீகாரங்களையும் கண்டு அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்.
தன் தாழ்நிலையை எண்ணி குமுறுகிறான். தன் வீட்டார் கூட தன் மனைவியைத் தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவதை அவனால் பொறுக்க முடியவில்லை.
இறுதியில் கணவனின் ஈகோ வென்றதா அல்லது மனையாளின் பொறுமை வென்றதா என்ற கருத்தை அழகாக வலியுறுத்திய படம்
கணவன் மனைவி சரிசம உறவே சாலச் சிறந்தது என்ற கருத்தை போதிக்கும் இப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா பிரதான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கால்பந்து வீரர்கள் உடையணிந்து முத்துராமனும், ஜெயலலிதாவும் ஆடிப் பாடும் இந்த டூயட் பாடலை டி.எம்.எஸ்ஸும், ஜெயலலிதாவும் இணைந்து அற்புதமாகப் பாடியிருந்தனர்.
சற்றே வயது முதிர்ந்திருந்தாலும் கிளாமரில் நான்தான் ராணி என்று ஜெயா இப்பாடலில் மீண்டும் நிரூபித்திருந்தார்.
இப்படத்தின் அபாரமான வெற்றி சரிந்திருந்த ஜெயலலிதாவின் மார்கெட்டை மீண்டும் சரி செய்தது.
இதே மாதிரி கதையமைப்பில் சில படங்களை முத்துராமன், ஜெயலலிதா இணைந்து நடிக்க இப்படம் மூல காரணமானது.
(கணவன் மனைவி, அன்புத் தங்கை)
1973ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் நடிகை என்று பிலிம்பேர் பத்திரிகை அவார்ட் தந்து ஜெயா மேடத்தை கௌரவித்தது.
அதுமட்டுமல்லாமல் கவிஞரே ஒரு காட்சியில் தோன்றி நடித்து காலத்தால் அழிக்க முடியாத
'பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது' பாடலைத் தந்து இப்படத்திற்கு மேலும் பெருமை சேர்த்தார்.
எஸ்.பி.பி மற்றும் ஜெயலலிதா இருவரும் இணைந்து பாடிய
'நானென்றால் அது அவளும் நானும்' பாடலை யார்தான் மறக்க முடியும்?
இப்படத்தில்
'தெரியாதோ நோக்கு' என்று ஆச்சி பாடிய ஐயராத்து மாமி பாடல் அப்போது மிகவும் பிரசித்தம்.
சூரியகாந்தி' படம் வெற்றிகரமாக ஓடி 100வது நாள் விழாவில் தந்தை பெரியார் அவர்கள் கலைஞர்களுக்கு வெற்றிக்கேடயம் வழங்கினார்.
பின்னர் இரண்டு நாட்கள் கழித்து முக்தா சீனிவாசன் ஜெயலலிதா அவர்களுக்கு சம்பளமாக ரூபாய் நாற்பதாயிரத்துக்கு செக் கொடுத்தார். அதைப்பார்த்த ஜெயலலிதா "நான் ஒரு ரூபாய்தானே கேட்டேன்" என்று தமாஷாகச்சொல்ல,
முக்தாவும் தமாஷாக "மீதி 39,999 ரூபாய் அடுத்த படத்துக்கான அட்வான்ஸாக வச்சுக்குங்க அம்மு" என்று சொல்ல அந்த சூழ்நிலையே மிகவும் சந்தோஷமாக இருந்தது.
No comments:
Post a Comment