குருஷேத்திரப்போர் முடிந்து, தர்மருக்கு முடிசூட்டுவிழா நடந்துக் கொண்டிருந்தது. அப்போது திருதராஷ்டிரன் கிருஷ்ணரிடம், "கிருஷ்ணா நான் குருடனாய் இருந்தபோதிலும், விதுரர் சொல்கேட்டு தர்ம நியாயங்களுடன் அரசாட்சி செய்தேன்.
அந்த அரசன்,மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான்.சைவ நெறிப்படி வாழ்ந்தவன். ஆனால், அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்.அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன்.அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா,அசைவமா என்று கண்டறிய முடியாது.
இந்த ஆசாமிக்கு ஒரு விபரீதமான- கொடூரமான ஆசை வந்துவிட்டது. அதாவது, அசைவ உணவை சைவம் போல் தயாரித்துக் கொடுத்து அரசனைச் சாப்பிட வைக்க வேண்டும்,பின் பல பரிசுகள் பெறவேண்டும் என்பதே.அரசன்,தனது அரண்மனையில் பல அதிசயப் பறவைகளை வளர்த்து வந்தான்.
அவற்றில் ஓர் அன்னப்பறவையும் உண்டு. அது தினமும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து வந்தது.ஒரு நாள்,இந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றை பிடித்து வந்த சமையற்காரன், அசைவ உணவு என்று அறிய முடியாதபடி பக்குவமாகச் சமைத்து மன்னனுக்குப் பரிமாறினான்.
அது அசைவ உணவு என்பதை அறியாத மன்னனும்,"அடடா… பிரமாதம்!" என்றபடி ரசித்து ருசித்து சாப்பிட்டான்.இதைக் கண்ட சமையற்காரன் மகிழ்ந்தான். அரசரையே ஏமாற்ற வைக்கும் தன் திறமையை எண்ணி வியந்தான். இதே போல் அன்னப்பறவையின் நூறு குஞ்சுகளையும், மன்னனுக்குப் பரிமாறினான்.
சமையலில் அவனது கைப்பக்குவத்தைப் பாராட்டிய மன்னன், ஏராளமான பரிசு வழங்கி கௌரவித்தான்."கதையைக் கூறி முடித்த கிருஷ்ணர்,"சக்ரவர்த்தியே, எங்களது சந்தேகம் இதுதான்! மன்னனை ஏமாற்றி, புலால் உணவு சாப்பிடச் செய்த சமையற்காரன் குற்றவாளியா? அல்லது அசைவம் என்று அறியாமல் புலால் உணவு சாப்பிட்ட மன்னன் குற்றவாளியா? இருவரில் தண்டனைக்குரியவர் யார்?” என்று கேட்டார்.
திருதராஷ்டிரர் பதில் கூறினார்: ”கண்ணா,சர்வ வியாபியான உனக்குத் தெரியாத நீதியா?குருக்ஷேத்திரத்தில் அர்ஜுனனுக்கு பரிபூரணமான நீதிநெறிகளை உபதேசித்த நீ, என்னிடம் விளக்கம் கேட்கிறாயே.
சரி, எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன் சமையற்காரன் செய்தது பெரிய குற்றமல்ல.வேலைக்காரர்கள், நேர்மையாகவோ அல்லது ஏமாற்றியோ தங்கள் எஜமானனை திருப்தியடையச் செய்து,பரிசுகள் பெறுவது உலக இயல்பு.ஆகவே, அவன் செய்தது சிறிய குற்றமே.ஆனால்,மன்னனின் நிலை அப்படியல்ல.அவன் தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மிக நுட்பமாக கிரகிக்க வேண்டும்.
தன் பணியாளர்களது செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், எதிரிகளது சூழ்ச்சியால் நாட்டையும்,ஏன் தன் உயிரையே கூட இழக்க நேரிடும். கிருஷ்ணா! கதையில் நீ குறிப்பிட்ட மன்னன் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. ஆக, அவன் கடமை தவறியது முதல் குற்றம்.கண்ணற்றவன் போல் நடந்துகொண்டான்.
சமையற்காரன் ஒருவனிடம் ஏமாந்தது இரண்டாவது குற்றம். புலால் உண்டது மூன்றாவது குற்றம். இவற்றை அவன் அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி. மேலும், பறவையின் கொலையில் மன்னனுக்கு மறைமுகத்தொடர்பு உள்ளதால், அவனே அதிக குற்றங்களைச் செய்தவன் ஆகிறான்.
எனவே, மன்னனுக்கே தண்டனை வழங்கவேண்டும்” என்றார் திருதராஷ்டிரர்.இதைக் கேட்டுப் புன்னகைத்த கிருஷ்ணர்,
"சக்ரவர்த்தி! தங்களிடம் நான் சொன்னது கதையல்ல.உண்மைச் சம்பவம்.இந்தக் கதையின் நாயகன் தாங்களே. முற்பிறவியில செய்த தான-தர்மத்தின் பலனால்,இந்தப் பிறவியில் நல்ல மனைவி, நல்ல மந்திரிகள், வளமான நாடு, நிறைய சந்ததிகள் என்று சகலமும் வாய்க்கப் பெற்றீர்கள்.இதேபோல், பாவத்தின் விளைவால் இப்போது,புத்திர சோகத்தில் தவிக்கிறீர்கள். சமையற்காரன் செய்த உயிர்க்கொலை, தாங்கள் அறியாமல் நடந்தது என்றாலும், அவன் சமைத்த புலால் உணவைச் சாப்பிட்டதால், கொலை செய்த பாவம் தங்களையும் ஒட்டிக் கொண்டது. "மன்னனே குற்றவாளி,அவனுக்கே தண்டனை" என்ற நியாயத்தை தாங்களே சொல்ல வேண்டும் என்று விரும்பினேன்.
'பாவம்' என்பது நெருப்பைப் போன்றது! நாம் அறியாமல் தொட்டாலும் நெருப்பு நம்மைச் சுட்டுவிடும். அதேபோல் அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்.
நீங்களும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகவே, இப்போது புத்திரர்களை இழந்து, பார்வையும் இழந்து தண்டனையை அனுபவிக்கிறீர்கள்” என்று முடித்தார் பகவான் கிருஷ்ணர்.
திருதராஷ்டிரர், தருமர் மற்றும் உடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போயினர்.
கிருஷ்ணார்பணம்

No comments:
Post a Comment