மணிமாலா: பல்வேறு தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்படங்களில் கதாநாயகியாகவும் சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் திகழ்ந்தவர். இவர் பிரபல நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் துணைவியாவார். கலைக்கோயில், போலீஸ்காரன் மகள், கவரிமான், நிலவே நீ சாட்சி, எதிரிகள் ஜாக்கிரதை, பெரிய இடத்துப் பெண், ஜஸ்ரிஸ் விஸ்வநாத், கல்யாண ஊர்வலம், அன்புள்ள ரஜினிகாந்த், அன்புக்கரங்கள், கற்பூரம், காக்கும் கரங்கள், தாழம்பூ, சிந்து பைரவி போன்ற 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார். நகைச்சுவையில் தன்னை வளர்த்துக்கொண்டிருந்த மூர்த்தி 1965 ஆம் ஆண்டில் நடிகை மணிமாலாவை ஒரு படப்பிடிப்பில் சந்தித்தார். நடிகர் – நடிகை என்ற முறையில் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டார்கள். அடுத்தடுத்த சந்திப்புகள் யதார்த்தமாய் அமைய நட்பு ஆனது. 5 ஆண்டுகள் தொடர்ந்த இந்த நட்பு திருமணத்தில் முடிந்தது. 1970 ஆம் ஆண்டில் மணிமாலாவை கரம் பற்றினார் மூர்த்தி.
மணிமாலாவைத் திருமணம் செய்த விவரத்தை இலங்கையிலிருந்து வெளிவரும் தினகரன் நாளிதழில் வெண்ணிற ஆடை முர்த்தி இப்படிக் கூறியுள்ளார்.
[ http://www.thinakaran.lk/2013/06/04/?fn=f1306046 -லிருந்து எடுக்கப்பட்டது]
‘பலரையும் பார்க்கிறோம். பேசுகிறோம், சிலர்தான் மனதில் நிற்கிறார்கள்.
மணிமாலா அப்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தார். இருந்தும் எந்தவித பந்தாவும் இன்றி இருந்தார். அவரிடம் பழக ஆரம்பித்த பின்பு ஒருநாள் ‘இப்படி அம்பும் பண்பும் அமையப் பெற்ற பெண் வாழ்க்கைத் துணையானால் எதிர்காலம் சிறப்பாக இருக்குமே’ என்று தோன்றியது. ஆனாலும் உடனே அதை வெளிப்படுத்தவில்லை. எங்களுக்குள் எந்தவித ‘ஈகோ’வும் இருந்ததில்லை. அதனால் ‘நாம் வாழ்வில் இணைந்தால் நன்றாக இருக்கும்’ என்று நான்தான் என் எண்ணத்தை வெளிப்படுத்தினேன்.
மணிமாலா தரப்பிலும், என் மாதிரியான எண்ண ஓட்டம் இருந்ததால், பழக ஆரம்பித்த 5வது வருடத்தில் எங்கள் திருமணம் இரு குடும்பத்தின் பரிபூரண சம்மதத்துடன் நடந்தது.
திருமணத்துக்கு முன்னதாக எங்கள் நட்பை காதல் வரை வலுப்படுத்த ஒரு சம்பவம் நடந்தது. மதுரையில் நட்சத்திர கிரிக்கெட் நடத்தினார்கள், நடிகர்கள் ஜெமினி கணேஷ், ஸ்ரீராம் வந்தார்கள் நடிகைகளில் மணிமாலா வந்திருந்தார். நானும் கிரிக்கெட் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அந்த நட்சத்திர டூரில் நாங்கள் மனம் விட்டுப் பேசுவோம்.
நாங்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் மற்றவர்கள் எங்கள் உரையாடலில் கலந்து கொள்ள மாட்டார்கள். இப்படியாக வளர்ந்த நட்பும் அன்பும் காதலாகி எங்களை நட்சத்திர தம்பதிகளாகவும் ஆக்கியது.
திருமணத்துக்குப் பிறகு மணிமாலா படங்களில் நடிக்காமல் குடும்பத்தை மட்டுமே நிர்வகித்து வந்தார். எங்களுக்கு ‘மனோ’ என்று ஒரே மகன் என்ஜினீயரிங் முடித்த மனோ இப்போது திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் பணியில் இருக்கிறான். மனோ மூலம் எங்களுக்கு ஒரு பேரக் குழந்தையும் உண்டு.
மனோவின் மனைவி சபிதா, கம்ப்பியூட்டர் என்ஜினியர். அதோடு பரத நாட்டியமும் தெரிந்தவள். நடனப்பள்ளி நடத்திக்கொண்டு வேலையையும் தொடர்கிறார்.
மகன் மனோவைப் பொறுத்தமட்டில் எனது நல்ல நண்பன். அப்பா – மகன் மாதிரி இல்லாமல் நண்பர்களாக அத்தனை விஷயங்களையும் பரிமாறிக்கொள்வோம். நான் கிழித்த கோட்டை இப்பவும் கூட மனோ தாண்டமாட்டான். பள்ளியிலும், கல்லூரியிலும் படிக்கிறபோது கூட ஒரு சின்ன தப்புகூட அவனைப் பற்றி வந்தது கிடையாது. அதனால் அவனை நான் கண்டிக்கிறதுக்கான வாய்ப்பு கடைசி வரைக்கும் வந்தது கிடையாது. கேட்க ஆச்சரியமாக இருக்கும். கோபத்துக்காக அவன் மேல் என் விரல்கூட பட்டது இல்லை. படிக்கிற சமயங்களில் வீட்டுக்கு வர தாமதமானால்கூட உடனே போன் பண்ணி ‘இப்ப இந்த இடத்துல இருக்கிறேன். இவ்வளவு நேரத்தில் வந்துடுவேன்’ என்று சொல்லிவிடுவான். இதனால் அவன் பத்தின ஒரு சின்ன டென்ஷன்கூட எனக்கும், மணிமாலாவுக்கும் ஒருபோதும் இருந்ததில்லை.
மனோ அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதால், வருடத்தில் 3 மாதம் அவனோட தங்கி விட்டு வருவோம். சமீபத்தில் இப்படி போயிருந்தப்ப என்னிடம், ‘அப்பா அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கே பையனா பொறக்கணும்ப்பா’. என்றான் எனக்கு மனசு நெகிழ்ந்து விட்டது ‘அடுத்த ஜென்மம்னு மட்டுமில்லப்பா எல்லா ஜென்மத்திலும் நாங்களே உனக்கு பெற்றோரா அமையணும்’ என்றேன். நான் இப்படிச் சொன்னபோது அவனும் கண் கலங்கிவிட்டான்.
திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த மணிமாலாவை டைரக்டர் கே. பாலசந்தர் ‘சிந்து பைரவி’ படத்தில் நடிக்க அழைத்தார். அந்த அழைப்பை தட்ட முடியாமல் மணிமாலா நடிச்சாங்க. படத்தில் சுஹாசினிக்கு அம்மாவா வாற கேரக்டர். அதுல நடிச்சதுக்கு அப்புறமா பாலச்சந்தரின் ‘சஹானா’ சீரியலிலும் நடிச்சாங்க இப்ப நடிச்சது போதும் என்கிற மன நிறைவோட என்னோட கலைப்பணிக்கு உதவியா இருக்கிறாங்க’
இவ்வாறு வெண்ணிற ஆடை மூர்த்தி கூறினார்.
No comments:
Post a Comment