Tuesday, April 11, 2023

சிந்தனை தெளிவு என்று மாறிடுமோ...

 தமிழ்மொழி மூன்று பிரிவுகளாக இருந்து இறைவனை துதித்த மொழி, இயல் இசை நாடகம் எனும் முத்தமிழும் சனாதான தர்மத்தையே போற்றி வளர்த்தன‌

நாடக தமிழ் என்பது இறைவனின் காட்சிகளை நடித்துகாட்டி மக்களுக்கு பக்திவளர்க்கும் நல்ல வழியாக அன்று இருந்தது
அன்று நாடகங்களெல்லாம் ராமன் கதை, கண்ணன் கதை, முருகன் வள்ளி கதை என பக்தி இலக்கியத்தின் நாடக வடிவங்களாய் இருந்தன
அது பின்னாளில் விஞ்ஞான காலத்தில் ஊமைபடங்களாய் வந்த காலத்திலும் பின் பேசும் படங்களாய் வந்த காலத்திலும் அவை இந்து புராண பக்தி படங்களாய் இருந்தன‌
பின்னர் மெல்ல மெல்ல இந்து எதிர்ப்பு கோஷ்டிகளிடம் மக்கள் அறியாமலே சினிமாதுறை சிக்கியது, புரட்சி புண்ணாக்குகள் எனும் பெயரில் விஷம் கலக்கபட்டது ஆனால் அறிவார் யாருமில்லை
1950களில் குபீரென சமூக போராளி படங்கள் வந்தன, இவர்கள் காமெடியான படத்தை சீரியசாக கொடுத்தார்கள்
பராசக்தி படம் அப்படியானது, பர்மாவில் தமிழன் பிச்சைக்காரனோ தமிழ்நாட்டில் தமிழன் பராரியா, வறுமையா? அய்யகோ என அழுத படம் அது
ஆனால் பர்மாவை ஆண்டதும் ஆங்கிலேயன், இந்தியாவினை ஆண்டதும் ஆங்கிலேயன் என எது மூலமோ அதை சொல்லவே மாட்டார்கள், இதுதான் தமிழக சமூக படங்கள்
இது போக அரசர்கதைகள் வந்தன ஆனால் தமிழக அரசர்கள் ரோமாபுரி கிரேக்க மன்னர் போல் குட்டை பாவாடை அணிவார்கள், திறுநீறு பூசமாட்டார்கள்
ஐரோப்பிய கெட்டப்பில் தமிழ் பேசி அசத்துவார்கள் , ஆனால் தமிழக மன்னர்களின் அடையாளமான திருநீறும் கொண்டையும் ருத்திராட்சமும் வராது
பீம்சிங் போன்ற மிகசிறந்த இயக்குநர்களே இப்படி இருந்தனர் என்பதே சோகம், ஆகசிறந்த அவரும் புத்தன், இந்து எதிர்ப்பு என குறியீடுகளை காட்டி தன்னை சமூக போராளியாக காட்டி கொண்டதெல்லாம் சோகம்
இப்படி தமிழ்சினிமா இந்துமத அடையாளத்தையும் இந்துமத சிறப்புக்களையும் மெல்ல மெல்ல மறந்தபொழுதுதான் ஒரு பழைய இந்து ஆத்மா ஒன்று தமிழ் உலகத்துக்கு இயக்குநராய் வந்திருந்தது, அதுதான் காலத்தால் அழியா இந்து தமிழ்படங்களை நமக்கு தந்தது
மறக்கமுடியா அந்த இயக்குநர், பாடல்கள் வழி இறைவனை பாடிய தமிழரில் கோவில் வழி இறைவனை கண்ட தமிழரில் சினிமா வழி இறைவனை காண வைத்த பெருமகன் அவர்தான்
ஏ.பி நாகராஜன், எக்காலமும் தமிழக இந்துக்கள் மறக்கமுடியா பெரும் பக்தன்
அவர் கொங்குமண்டலம் சங்ககிரி பக்கம் அக்கமா பேட்டை பிறந்த‌ ஏழை குடும்ப பிறப்பு, தந்தை பெயர் பரமசிவ கவுண்டர், அவருக்கு 4ம் மகனாக பிறந்தவர் குப்புசாமி. பரமசிவ கவுண்டர் சிறுவயதிலே இறந்துவிட அந்த குடும்பத்தின் வறுமை இவரை நாடக கம்பெனிபக்கம் தள்ளியது
அன்று ஏழை குடும்பங்கள், நிலமோ தொழிலோ இல்லா குடும்பங்களின் குழந்தைகள் நாடக கம்பெனிகளுக்கு வருவது வழமையானது.
சிவாஜி கணேசன் முதல் எம்ஜி ராம்சந்திரன் வரை அப்படித்தான் வந்தார்கள்
இந்த குப்புசாமி டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக கம்பெனியில் சேர்ந்தார், மெல்ல மெல்ல நாடக கலையின் நுணுக்கமெல்லாம் கற்றார், அங்கேதான் நடிப்பு முதல் பல விஷயங்களை செய்து அனுபவம் பெற்றார், ஒருவகையில் பிற்கால புராண படங்களுக்கான விதை அங்குதான் இவரிடம் ஊன்றபட்டது
அங்கு நிறைய குப்புசாமி இருந்ததால் இவர் பெயர் நாகராஜன் என்றானது, வாலிப வயதில் அக்கமாபேட்டை பரமசிவன் நாகராஜன் எனும் பெயர் ஏ.பி நாகராஜனாயிற்று
காலமெல்லாம் திருநீறு பூசி இந்துபெருமை பேசி முழு அடியாராக வலம் வந்த அந்த கலைமகனின் பிறந்த நாள்
நாடகம் சினிமாவானபொழுது மெல்ல சினிமாவுக்கு வந்தார்
1953ல் "நால்வர்" படம் மூலம் தமிழ்சினிமாவுக்கு வந்தார், மார்டன் தியேட்டர்ஸ் கம்பெனி அவரை அரவணைத்தது, முதலில் அந்த படத்துக்குத்தான் வசனமெல்லாம் எழுதிகொண்டிருந்தார், அவர்கள் நல்லதங்காள் போன்ற படங்களை தயாரித்த காலமது
அப்பொழுதுதான் எஸ்.எஸ் வாசனின் "ஓளவையார்" படம் பிரமாண்டமாக இந்துமக்களால் கொண்டாடபட்டது,
வாசன் மிகபெரிய இந்துபணியினை அதில் செய்திருந்தார், சங்க கால அவ்வையாரை மக்கள் முன் நிறுத்தியிருந்தார்
அதிலிருந்து நாகராஜனுக்கு புராண கதை படங்கள் மனதில் நிழலாடின ஆனால் காலம் கனியவில்லை
தொடர்ந்து டவுண்பஸ் போன்ற படங்களுக்கு எழுதினார், "மக்களை பெற்ற மகராசி" படம் அவருக்கு நல்ல பெயரை கொடுத்தது
தமிழ் சினிமாவில் கொங்குதமிழை அவர்தான் முதலில் கொண்டுவந்தார், சிவாஜி கணேசனின் கொங்குதமிழ்தான் அந்த அழகு தமிழை அகிலமெங்கும் முதலில் எடுத்து சென்றது அதற்கு காரணம்
நாகராஜன், இருவரின் நட்பு அப்படி தொடங்கித்தான் பின்னாளில் பெரும் படங்களை கொடுத்தது
1958ல் அவரின் இந்துபணி தொடங்கியது, மார்டர்ன் தியேட்டர்ஸின் பிரமாண்ட தயாரிப்பில் "சம்பூர்ண ராமாயணம்" படம் வந்தது, பெரும் புகழை பெற்றது
ஆந்திராவின் தேவுடா என கொண்டாடபட்ட என்.டி ராமராவ் அதில்தான் உருவானார்
அப்பொழுது சமூக படம், மன்னர் படம் என மாறியிருந்த தமிழ் சினிமாவினை அப்படம் திருப்பிபோட்டது இந்திய அளவில் பெரும் வெற்றிபெற்றது படம்
ராமபிரானின் ஆசியில் அடுத்தடுத்து இந்து படங்களை கொடுத்தார்
நடிகர் வி. கே. ராமசாமியுடன் இணைந்து, ஸ்ரீலக்ஷ்மி பிக்சர்ஸ் எனும் கம்பெனியினை தொடங்கி தயாரிப்பாளர் ஆனார், அப்படி தயாரிக்கபட்டதுதான் பெரும் பக்தி படங்கள், அப்படி வந்ததுதான் அழியா இந்து படங்கள்
"திருவிளையாடல்",
"சரஸ்வதி சபதம்"
"கந்தன் கருணை"
திருவருட்செல்வர்"
"திருமலை தெய்வம்"
"நவராத்திரி"
எனும் மாபெரும் பக்தி படங்கள்,அதை அவர்தான் தயாரித்தார்
ஆம், அவர்தான் காலத்தால் அழியா வகையில் ரசனையாக பக்தியாக அதை கொடுத்தார், அதில் மிக சிறந்த பாடலும் நடிப்பும் இசையும் கதையம்சமும் நடிகர்களும் வருமாறு பார்த்து பார்த்து செய்தார்
உண்மையில் அது படம் அல்ல, வெறும் இருமணி நேர காட்சி அல்ல அது ஒரு இந்து உணர்வு
நாயன்மார்கள் உருகி பாடிய காட்சியும் அன்று தமிழகம் கண்ட பக்தியின் மெய்சிலிரிக்க வைக்கும் விஷயங்களையும் திரையில் பதியவைத்த இந்து தொண்டு
நேற்றல்ல இன்றல்ல நாளையல்ல தமிழ் சினிமா உள்ளவரை இந்து அடையாளத்தை அழுத்தமாக பதியவைத்த வித்தை அது
கல்லிலும் பனை ஓலையிலும் சிலையாகவும் பாடலாகவும் இருந்த இந்துபெருமைகளை செல்லுலாய்டில் அவர்தான் பதியவைத்தார், அந்த சேவை அக்கால அடியார்கள் யாருக்கும் குறைந்ததல்ல‌
தொடர்ந்து "திருமலை தெய்வம்" போன்ற படங்களையும் கொடுத்தார், திருப்பதி பெருமாளுக்கான காணிக்கை அது
"அகத்தியர்" என அம்மாமுனியின் புராணத்தை சீர்காழி கோவிந்தராஜன் எனும் மகா கலைஞனை கொண்டு
சரியாக கொடுத்தார்
"திருவருட் செல்வர்" எனும் படமே நாயன்மார்கள் கதையினை தாங்கிவந்த படம், சிவாஜிகணேசன் எனும் மகாநடிகனை அப்பர்சாமிகளாக அப்படியே மாற்றியிருந்தார் நாகராஜன்
"ராஜராஜசோழன்" எனும் மாபெரும் சிவபக்த மன்னனின் வரலாற்றை அற்புதமாக கொடுத்தவரும் அவரே
சிவாஜிகணேசனின் அற்புதமான நடிப்பை இந்துமத பாத்திரங்களுக்கு மிக சரியாக வாங்கியவர் நாகராஜன், அவர் அளவு இன்னொரு இயக்குநர் சிவாஜி கணேசனை பயன்படுத்தவில்லை
"அருட்பெரும் ஜோதி" எனும் படமும் மறக்க முடியாதது, வள்ளலாரின் வாழ்வினை திரைசித்திரமாக்கியிருந்தார் நாகராஜன்
பக்தி படங்களை தாண்டி, ஆனந்த விகடனில் தொடராக வந்த "தில்லானா மோகனப்பாள்" எனும் அழகான கதையினை சினிமாவாக மாற்றி வெற்றிபெற்றார்
பொதுவாக சில புத்தக கதைகளை சினிமாவாக மாற்றும்பொழுது சரிவராது, ஜெயகாந்தனின் அழகான கதைகள் அப்படித்தான் தோற்றன, ஆனால் தில்லானா மோகனம்பாள் படத்தை எக்கால தலைமுறையும் ரசிக்கும்படி அற்புதமாக செதுக்கினார் நாகராஜன்
"கிருஷ்ண லீலா" படத்தை இயக்கிய அவர் இன்னும் பல பக்திபடங்களை தருவார், ஒவ்வொரு இந்து தெய்வங்களையும் அடியார்களையும் கண்முன் நிறுத்துவார் சினிமாவில் பதிந்து வைப்பார் என எல்லோரும் எண்ணியபொழுதுதான் 49ம் வயதிலே மறைந்தார்
ஆம், தெய்வீக இயக்குநர், அருட்செல்வர் என அழைக்கபட்ட அந்த அற்புதமான இறையடியார் இயக்குனர் அந்த வயதிலே தன் கடமை முடித்து கர்மத்தை நிறைவு செய்தார்
இன்று அவரின் பிறந்தநாள்
வெறும் நாடக கம்பெனி சிறுவனாக இருந்த அவரை பெரும் தயாரிப்பாளர் வரை உயர்த்தியது அவரின் பக்தி அளப்பறிய பக்தி
அந்த ஆன்மா சாதாரணம் அல்ல, என்றோ முற்பிறவியில் தமிழில் இறைவனை போற்றி பாடியோ இல்லை சிலையோ கலையோ செய்தோ சனாதான தர்மம் வளர்த்துகொண்டிருந்த ஆன்மா அது அதை முடிக்காமலே அதன் ஆயுள் முடிந்தது
மதுரை தமிழ்சங்கத்தில் இருந்த ஆன்மாக்களில் ஒன்று அது.
இறைவன் மிக சரியானவன் அல்லவா? அதனால் சரியான காலத்தில் மிக சரியான வழியில் அந்த ஆத்மாவினை அதன் பணியினை தொடரவைத்தான், அதுவும் தமிழருக்கு அழியா பக்திபடங்களை கொடுக்க வைத்தான்
சிவபெருமான், முருகபெருமான், அன்னை சக்தி என எல்லோரையும் நம் கண்முன் அந்த ஆன்மாவின் தவிப்பும் உழைப்பும்தான் சினிமாவில் நிறுத்திகாட்டியது
அத்தோடு 49ம் அகவகையிலே அது பிரிந்தும்விட்டது, இனி சரியான நேரம் மறுபடியும் வரும்
நிச்சயம் தமிழ் சினிமாவில் இந்துமதத்துக்கு பெரும் சேவை செய்த அடியார் யாரென்றால் ஏ.பி நாகராஜனுக்கும் நிச்சயம் இடம் உண்டு, அந்த இடம் பெரும் இடம்
அந்த இயக்குநருக்கு பெரும் விருது உண்டா, அடையாளம் உண்டா என்றால் இல்லை, அவனை நினைத்து பார்க்கவும் யாருமில்லை, இந்துக்களின் பெரும் வீழ்ச்சி இது
கலைவாணர் அரங்கம், அண்ணா அரங்கம் என்றும் கருணாநிதி, ராமசந்திரன், ஜெயலலிதா அடையாளம் என்றும் சினிமாக்காரர்களுக்கு அடையாளமுள்ள தமிழகத்தில் தூய இந்துவாக வாழ்ந்து சேவை செய்த அந்த உத்தம தொண்டனுக்கு ஒரு அடையாளமில்லை
அவன் பெயரில் விருதுமில்லை
ஏன் இல்லை? அதுதான் தமிழக சினிமாவில் மர்மபிடி, தந்திரமான பிடி
இங்கு ஆத்திகம் பேசிய கலைஞர்களெல்லாம் சரிக்கபட்டதும், நாத்திகம் பேசியோரெல்லாம் என்.எஸ்.கே போல் கொண்டாடபட்டதெல்லாம் சாதாரணம் அல்ல‌
நாத்திக கட்சியில் இருந்து ஆத்திகராக ஜொலித்த ராமசந்திரனே பின்னாளில் தன் ஆட்சிகாலத்தில் இவர்களுக்கு கடிவாளமிட்டார் எனினும் அவரின் காலம் 1977லதான் தொடங்கிற்று அதுவரை அவரும் பகிரங்கமாக ஆத்திக வேடம் தாங்கவோ, நீறு பூசவோ , தன்னை ஒரு இந்து என சொல்லிகொள்ளவோ யோசிக்கத்தான் செய்தார்
இவ்வளவுக்கும் சின்னப்பதேவர், ஏவிம் செட்டி என எத்தனையோ இந்து தயாரிப்பாளர்கள் இருந்தாலும் மக்களை நெருங்கும் சக்தி கொண்ட கலைஞர்களை ஒரு சக்தி அடக்கித்தான் வைத்தது
இதுதான் ஏபி நாகராஜன் எனும் இந்து தெய்வீக இயக்குநர் வரலாற்றில் புறந்தள்ளபட்ட மர்மம் அன்றி வேறல்ல‌
தமிழக அரசு ஒருநாள் மாறும், அன்று ஏ.பி நாகராஜனின் பெயரில் விருதும் பெரும் அடையாளமும் ஏற்படுத்தபடும், சினிமாவில் இந்துசேவை செய்யும் கலைஞர்களுக்கு அது வழங்கபடும் இது நடக்கும்
இன்றும் இந்துபண்டிகைகள் , வழிபாடுகளின் பொழுதோ, ஏன் இந்து ஆலயங்களை நோக்கும் பொழுதோ பல இடங்களில் அவரின் படத்தின் காட்சிகள் நினைவுக்கு வரும்
அவரின் மிக கூர்மையான உருக்கமான பக்தி வசனங்கள் சிவாலயத்தில், வைணவத்தில்,முருக பெருமான் வழிபாட்டில் நம் காதுகளுக்கு வராமல் போகாது
அதுதான் அந்த மகா கலைஞனின் வெற்றி , தமிழும் இந்துமதமும் இருக்கும்வரை நிலைத்துவிட்ட அழியா புகழ் பெற்றுவிட்ட இந்து கலைஞனின் மாபெரும் வெற்றி
இன்றும் இந்து ஆலயங்களிலும் பண்டிகை விழாக்களிலும் பெரும்பாலும் ஒலிப்பது, ஏன் அனுதினமும் வானொலி டிவி வீடுகளிலும் அதிகாலை ஒலிப்பதில் அவர் படத்தின் பாடல்களே
அந்த அளவு அழகான உருக்கமான பாடல்களை தன் படத்தில் அவர் உருவாக்கினார், அந்த அளவில் அவர் எக்காலமும் வணங்கபட வேண்டிய பெருமகன்
கொடும் நாத்திக காலத்தின் உச்சியில் தமிழகம் சிக்கியபொழுது, நாத்திகவாத கும்பல் கொடும் ஆட்டம் ஆடியபொழுது தனி மனிதனாக தன் எதிர்காலம் கருதாமல், தன் பணம் பெருக்க வழி தேடாமல், இதர கதைகளை எடுத்து தன்னை இலக்கியவாதி, ரசனைவாதி, தனித்துவமானவன், நிரம்ப உலக இலக்கியம் படிப்பவன்., தலைகீழாய் யோசிப்பவன், 8ம் அறிவு கொண்டவன் என்றெல்லாம் தன்னையும் தன் புகழையும் வருமானத்தையும் கருதாமல் இந்து மதம் ஒன்றே தன் தர்மம் என்றும் அதை தன் தொழிலில் சினிமாவில் வசனத்தில் பரப்பி நிலைக்கவைத்து அதன் புகழ்பாடுவதே தன் சுயதர்மம் என்றும் கடைசிவரை நின்ற அந்த நாகராஜன் தமிழக கலைஞர்களிலே அதி உன்னதமானவர் அதில் ஒரு காலமும் சந்தேகமில்லை
கலை என்பது ஒரு வரம், அந்த வரத்தை தன் தொழிலை இறையனாருக்கு செய்வேன் என்பது உன்னத ஆத்மா ஒன்றிலே எழும் பெரும் பக்தி, அந்த பக்தி
ராஜராஜசோழனை போல வெகுசிலருக்கு இருந்தது
அதுதான் ஏ.பி நாகராஜனுக்கும் இருந்தது, அதில்தான் தமிழக இந்துக்கள் பெரும் புண்ணியம் பெற்றனர்
"திருவிளையாடல்" படத்தில் தருமி நாகேஷுடன் நக்கீரராக நடித்த அந்த ஏ.பி நாகராஜனை மறக்கவே முடியாது
இன்றும் மதுரை ஆலயத்தை நினைத்தால் அன்னை மீனாட்சி வருவாள், அப்படியே சிவபெருமான் வருவார்
இன்னும் பாண்டிய மன்னர்களும், தமிழ்சங்க அகத்தியரும் முருகனும் அவ்வையும் வள்ளுவனும் இன்னும் யார் யாரெல்லாமோ குமரகுருபரர் காலம் வரை வருவார்கள்
அவர்களில் நிச்சயம் நக்கீரராக நடித்த ஏ.பி நாகராஜன் நினைவு வரும் நிச்சயம் வரும்
அதுதான் அந்த தெய்வீக இயக்குநர் , அருட்செல்வரின் மிகபெரிய வெற்றி, இந்து தர்மத்துக்காய் தன் கலைவாழ்வினை கொடுத்த அந்த அடியார் இயக்குநருக்கு சிவன் கொடுத்த மிகபெரிய ஆசி
"அருட்பெரும் ஜோதி" எனும்படத்திலும் அவர் நடித்திருந்தார், நல்ல நடிகரும் கூட ஆனால் நடித்த இரு காட்சியிலும் இறை அடியாராக மட்டும் வந்தார்
மறக்கமுடியா அந்த தெய்வீக இயக்குநருக்கு , சிவன் அனுப்பிய அடியாருக்கு இன்று பிறந்த நாள் , தமிழ் பேசும் இந்துக்கள் எக்காலமும் அவனுக்கும் அவன் தொண்டுக்கும் நிரம்ப கடன்பட்டுள்ளோம்.
அவ்வகையில் அந்த கலைமகனுக்காய் நிச்சயம் ஆலயங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்த வேண்டும், நன்றியுள்ள தமிழ் இந்துக்களாய் இருந்தால் அதை அவசியம் செய்தல் வேண்டும்
குப்புசாமி நாகராஜன் என்றானது விசித்திரமல்ல‌, நாகம் படமெடுப்பது போல அந்த நாகராஜன் சனாதான தர்ம படங்களை எடுத்து குவித்தததுதான் அவர் பெயருக்கும் சினிமாவுக்குமான ஆச்சரிய தொடர்பு
சிவனின் கழுத்தில் இருக்கும் நாகமே இந்த நாகராஜனாக வந்து படமெடுத்ததோ அதில் சிவன் தெரிந்தாரோ என எண்ணவைக்கும் அளவு அற்புதமான தொடர்பு
சினிமாவில் இந்துமதத்தையும் அழகு தமிழையும் எக்காலத்துக்கும் நிலைக்கும் பக்தி பாடல்களும் நிலைக்க இந்த மானிதனே முக்கிய காரணம், அந்த சுத்தமான இந்துவுக்கு தமிழக இந்துக்கள் எக்காலமும் நன்றிகடன் கொண்டிருக்கின்றார்கள், அவன் கட்டிவைத்த செல்லுயாட் கோபுரமும் கருவறையும் அப்படியானது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...