Sunday, April 16, 2023

எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட டியூன்களை நிராகரித்த எம்.ஜி.ஆர் .

 இசையமைப்பாளர் எம்.எஸ் விஸ்வநாதனை ஒரு நாள் டெலிபோனில் அழைத்த எம்.ஜி.ஆர் “என்னோட பல படங்களுக்கு நீ இசையமைச்சி இருந்தாலும் எம். ஜி. ஆர் பிக்சர்சுக்கு நீ இதுவரையில் ஒரு படம் கூட பண்ணலையே. இப்போ ஒரு மியூசிக்கல் படத்தை ஜப்பான்,சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் படமாக்கலாம் என்று இருக்கிறேன். நீதான் அந்தப் படத்திற்கு இசையமைக்க வேண்டும்” என்றார். மகிழ்ச்சியோடு அந்த வாய்ப்பை ஏற்றக் கொண்டார் விஸ்வநாதன். அப்போது அந்தப் படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை.

அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு “தினத்தந்தி” பத்திரிகை யில் ஒரு செய்தி வெளியானது.
எம் ஜி ஆர் “உலகம் சுற்றும் வாலிபன்” என்ற பெயரில் வெளிநாடுகளில் ஒரு படத்தை உருவாக்கப் போவதாகவும் அந்தப் படத்திற்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்கள் ஏவி. எம் ஸ்டுடியோவில் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்தச் செய்தியைப் படித்தவுடன் விஸ்வநாதனுக்கு ஏற்பட்ட குழப்பத் திற்கு அளவேயில்லை.
வீட்டில் இருந்த தனக்கு போன் போட்டு “நான் வெளிநாட்டில் ஒரு படம் தயாரிக்கப் போகிறேன். அதற்கு நீதான் இசையமைக்க வேண்டும்” என்று கூறிவிட்டு இப்போது அதே படத்துக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் நான்கு பாடல்களை எம். ஜி. ஆர் பதிவு செய்திருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்ற கேள்வி விஸ்வநாதனின் மண்டையைக் குடைந்தது.
ஆனாலும் தனக்கு வரவேண்டிய வாய்ப்பு பறி போய்விட்டதே என்று விஸ்வநாதன் எந்த கலக்கமும் அடையவில்லை. அதே போன்று “ என்னை ஏன் மாற்றினீர்கள்?” என்று எம். ஜி. ஆரைத் தொடர்பு கொண்டு கேட்கவுமில்லை. வழக்கம்போல தனது வேளைகளில் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டார் அவர்
அந்தச் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு மெஜஸ்டிக் ஸ்டுடியோவில் ஒரு பாடல் ஒலிப்பதிவில் எம்.எஸ். விஸ்வநாதன் இருந்த போது எம். ஜி. ஆரிடம் இருந்து அவருக்கு ஒரு போன் வந்தது..
“விசு. உன் மனசிலே என்ன நினைச்சிக்கிட்டிருக்கே ? இந்தப் பக்கமே உன்னைக் காணோம்?. அது மட்டுமில்லாமல் ஒரு போன் கூட உன்கிட்ட இருந்து வரலே. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கு நீதான் மியூசிக் போடணும்னு எவ்வளவு நாளுக்கு முன்னாலே உங்கிட்ட சொன்னேன். அதை அப்படியே மறந்திட்டியா? என் கம்பெனின்னா நீ ஏன் எப்பவும் இப்படி பொறுப்பில்லாம இருக்கே” என்றார் எம். ஜி. ஆர்.
அவர் பேசப்பேச “தினத்தந்தி” பத்திரிகையில் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்தைப் பற்றிய செய்தியைப் படித்தபோது ஏற்பட்ட குழப்பத்தை விட அதிகமான குழப்பம் விஸ்வநாதனுக்கு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பிறகு தெளிவுக்கு வந்த விஸ்வநாதன்,”அண்ணே நீங்க என்னை எப்படி நினைத்துக் கொண்டாலும் சரி, எவ்வளவு திட்டினாலும் சரி,.என்னால அந்த படத்துக்கு இசையமைக்க முடியாது. என்னை மன்னிச்சிக்கங்க”என்றார்
“விசு, என்ன பேசறோம்னு புரிஞ்சிதான் பேசறியா ?” என்று எம் ஜி ஆர் கேட்டபோது“குன்னக்குடியை வைச்சி நீங்க படத்தை ஆரம்பிச்ச செய்தியையும், உங்க படத்துக்காக அவர் நான்கு பாடல்களை பதிவு செய்திருக்கிற செய்தியையும் “தினத்தந்தி” பேப்பர்ல பார்த்தேன். அவரை வைச்சி ஆரம்பிச்ச படத்தை அவரை வச்சி முடிக்கிறதுதான் சரியாக இருக்கும். நான் இப்படி சொல்றதினால நீங்க கோவிச்சிக்கிட்டு எனக்கு இனிமே படமே கொடுக்கலேனா கூட பரவாயில்லை. “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு மட்டும் என்னால் இசையமைக்க முடியாது” என்று திட்டவட்டமாக பதில் சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார் விஸ்வநாதன்
அவர் போனை வைத்த கொஞ்ச நேரத்தில் விஸ்வநாதன் வீட்டுக்கு வந்த எம். ஜி. ஆரின் சத்யா ஸ்டு டியோ நிர்வாகி குஞ்சப்பன், நடிகர் நாகேஷ் ஆகிய இருவரும் “உங்களை எ
ம் ஜி ஆர் கையோடு அழைத்துக் கொண்டு சொன்னார் “ என்றார்கள்.
எம்.ஜி.ஆருடன் எவ்வளவு கருத்து வேறுபாடு இருந்தாலும் அவரை சந்திக்க விஸ்வநாதன் மறுத்ததே இல்லை.ஆகவே சட்டையை மாட்டிக் கொண்டு அவர்களுடன் உடனே கிளம்பினார்.
அப்போது எம். ஜி. ஆர் “பட்டிக்காட்டு பொன்னையா” படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். அவர் அருகே சென்ற விஸ்வநாதன் எம் ஜி ஆர் பேசுவதற்கு இடமே கொடுக்கவில்லை.
“நீங்க கூப்பிட்டு அனுப்பினால் என்னால் வராம இருக்க முடியுமா ? அதனாலதான் வந்தேன். தயவு செய்து நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்கள்.என்னைப் பொருத்தவரைக்கும் நான் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு பிரபலமாக இருக்கிற ஒரு மியூசிக் டைரக்டர். அவ்வளவுதான். ஆனால் குன்னக்குடி வைத்தியனாதன் ஒரு சங்கீத மேதை. அவரை சினிமாவில் முன்னுக்கு கொண்டு வர்றதுன்னா, அது உங்களாலதான் முறையும். என்கிட்டே வேலை வாங்கற மாதிரி நீங்க குன்னக்குடியிடமும் வேலை வாங்கினா நிச்சயம் அவர் பெரிய மியூசிக் டைரக்டரா வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நீங்க விருப்பப்பட்டா எனக்கு வேற படம் கொடுங்க. நான் நிச்சயமாக வேலை செய்கிறேன்.ஆனா இந்தப்படம் வேண்டாம் “என்று எம்.ஜி.ஆரிடம் மளமளவென்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.
இனி விஸ்வநாதனோடு பேசிப் பயனில்லை என்பதை புரிந்துகொண்ட எம். ஜி. ஆர், விஸ்வநாதனின் அம்மாவுக்கு போன் போட்டார். விஸ்வநாதனின் தாயிடம் அடிக்கடி போனிலே பேசக்கூடியவர் அவர்.
“உங்க பிள்ளை என்ன பண்றார் பாருங்கம்மா?” என்று எம்.ஜி.ஆர் விஸ்வநாதனின் தாயாரிடம் கூறியபோது “விசு எங்கிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டான். அவன் காரணம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். அதனால இந்த ஒரு படத்தில் மட்டும் அவனை விட்டு விடுங்களேன்” என்றார் விஸ்வநாதனின் தாயார்.
ஒரு வாரம் கழிந்தது.
“உலகம் சுற்றும் வாலிபன்” படத்தின் பூஜையில் கலந்து கொள்ளும்படி எம்.ஜி.ஆரிடமிருந்து எம் எஸ் விஸ்வநாதனுக்கு அழைப்பு வந்தது.
அது பூஜைக்கான அழைப்பு அல்ல தனக்காக விரிக்கப்பட்ட வலை என்பது தெரியாமல் அந்த பூஜைக்குப் போனார் விஸ்வநாதன்.
தொடக்க விழாவிலே பங்கேற்க குன்னக்குடி வைத்தியநாதனும் வந்தி ருந்தார்.அவருக்கு தனது வாழ்த்துக்களை விஸ்வநாதன் தெரிவிக்க அவரது கையைப் பிடித்துக் கொண்ட குன்னக்குடி வைத்தியநாதன் விஸ்வநாதனின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவிக்கவில்லை. அதற்குப் பதிலாக”அண்ணா இந்தப் படத்துக்கு நீங்களே இசையமைச்சிக் கொடுங்க அண்ணா.நம்ம ரெண்டு பேர்ல யார் வேலை செஞ்சா என்ன?அது மட்டுமில்லாமல் இந்த படத்துக்காக எம்.ஜி.ஆர் எனக்கு என்ன சம்பளம் பேசினாரோ அந்தப் பணம் மொத்தத்தையும் கொடுத்துட்டார். அடுத்த படத்தில் எனக்கு சான்ஸ் தர்றதாகவும் சொல்லியிருக்கார். அதனால நீங்க இந்த படத்தைப் பண்றதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லே. இன்னும் சரியாகச் சொன்னா நீங்க பண்ணாதான் எனக்கு சந்தோஷம்” என்றார்
எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும்,குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் இடையே இந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லாததைப் போல ஒரு நமட்டு சிரிப்புடன் தூரத்தில் நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்தார் எம். ஜி. ஆர்.
குன்னக்குடி வைத்தியநாதனுக்கு வருத்தம் ஏதுமில்லை என்பதை ஒரு முறைக்கு நூறுமுறை உறுதி செய்து கொண்ட பிறகு “உலகம் சுற்றும் வாலிபன்” படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டார் விஸ்வநாதன்
உலகம் சுற்றும் வாலிபன் படத்தை எம்ஜி.ஆர் ஆரம்பித்தபோது முழுக் கதையும் தயாராகவில்லை. ஆகவே பாடல் இடம் பெறவிருக்கின்ற காட்சிகளையும் அந்தப் பாடல் காட்சிகளைப் படமாக்கப் போகின்ற இடங்களையும் பற்றி எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு சொல்லிவிட்டு அதற்கேற்ப அவரை டியூன் போடச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
எம்ஜிஆர் பிக்சர்சில் தான் பணியாற்றும் முதல் படம் என்பது தவிர வெளிநாடுகளில் படமாக்கப்படப் போகின்ற படம் என்பதால் மிகுந்த உற்சாகத்தோடு அந்தப் படத்துக்கு வேலை செய்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.ஆனால் என்ன காரணத்தாலோ அவர் போட்ட எந்த மெட்டும் எம்.ஜி.ஆருக்குப் பிடிக்கவில்லை.
அவருக்குப் பிடிக்கவில்லையே என்பதற்காக நாள் முழுவதும் உட்கார்ந்து வேறு டியூனை விஸ்வநாதன் போட்டுக் காட்டியபோது “இதுக்கு நேற்று போட்ட டியூனே பரவாயில்லை” என்றார் எம். ஜி. ஆர்.
அப்படி எம்.ஜி.ஆர் தன்னுடைய பாடல்களைக் கடுமையாக விமர்சித்த போதிலும் அதையெல்லாம் மனதிலே வைத்துக் கொள்ளாமல் புதிதாக ஒரு டியூன் போட்ட எம்.எஸ்.விஸ்வநாதன் நூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு அந்தப்பாடலைப் பதிவு செய்தார்.
அந்தப் பாடலைக் கேட்ட அத்தனை பெரும் விஸ்வநாதனைப் பாராட்டினார்கள்.
அந்தப் பாடலைக் கேட்டால் எம். ஜி. ஆர் நிச்சயம் அசந்து போவார் என்று நினைத்த எம்.எஸ்.விஸ்வநாதன் எம்ஜிஆருக்கு அந்தப பாடலைப் போட்டுக் காட்டிவிட்டு அவரது பாராட்டுகளுக்காக காத்துக் கொண்டிருந்தபோது பாடலைக் கேட்ட எம்.ஜி.ஆர் உதட்டைப் பிதுக்கி விட்டுப் போய்விட்டார்
தான் முதலில் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னதால் எம் ஜி ஆர் தன்னை பழி வாங்குகிறாரோ என்ற எண்ணம் கூட ஓரு கட்டத்தில் விஸ்வநாதனுக்கு வந்தது.
அப்படி ஒரு எண்ணம் எழுந்ததற்குப் பிறகும் அவர் எப்படி அந்த படத்தில் தொடர்ந்து பணியாற்றினார் .
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...