Saturday, April 15, 2023

ஓ.ஏ.கே.தேவர்.

 அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

தமிழ் திரையுலகில் பருத்த ஆஜானுபாகுவான உடல்வாகுடன் கம்பீரமான தெளிவான தமிழ் உச்சரிப்புடன் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தவர் ஓ.ஏ.கே.தேவர் அவர்கள்.
எடிட்டர் ஆர்.எஸ்.மணி அவர்கள் தயாரித்து இயக்கிய "மாமன் மகள்" (1950) திரைப்படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் ஓ.ஏ.கே.தேவர் அறிமுகப்படுத்தப்பட்டார். வீராச்சாமி என்கிற அடியாள் வேடத்தில் சிறப்பாக நடித்ததால், அடுத்தடுத்து ஒன்றிரெண்டு படங்களிலும் அதேமாதிரியான ரோலிலேயே நடிக்கும் வாய்ப்பு ஓ.ஏ.கே.தேவருக்கு கிடைக்க, தனக்கு இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் எந்த வேடமும் கிடைக்கவில்லையே என்ற சலிப்பு ஏற்பட்டு மீண்டும் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களிடம் சென்று முறையிட, அப்போது என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் "மதுரை வீரன்" திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப்படத்தில் மன்னன் திருமலை நாயக்கர் ரோலில் ஓ.ஏ.கே.தேவர் நடிக்க எம்.ஜி.ஆரிடம் சிபாரிசு செய்தார் கலைவாணர்.
கணீர் என்று அழுத்தம் திருத்தமாக ஓ.ஏ.கே.தேவர் பேசும் வசனங்களும், அவரது கம்பீரமான தோற்றமும் மன்னன் திருமலை நாயக்கர் வேடத்துக்குப் பொருத்தமானவர் இவர்தான் என்று எம்.ஜி.ஆர் உட்பட அனைவராலும் முடிவு செய்யப்பட்டு அந்த ரோல் தேவருக்கு வழங்கப்பட்டது.
மதுரை வீரன் மேல் களங்கம் கற்பிக்கப்பட்டு, தீர ஆலோசிக்காமல் மன்னன் திருமலை நாயக்கர் அவனுக்கு மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடும் காட்சியாகட்டும், அதன்பின் வெள்ளையம்மாள், பொம்மி இருவரும் மன்னனிடம், வீரன் குற்றமற்றவன், நிரபராதி. நீங்கள் தீர விசாரிக்காமல் அவனுக்கு கடுமையான தண்டனையை வழங்கியதன் மூலம் நீதி தவறி விட்டீர்கள், என்றெல்லாம் சொன்ன பின்பு, மிகப்பெரிய தவறு செய்து விட்டேன் என்று சொல்லி வீரனைக் காப்பாற்ற மன்னன் செல்வதற்கு முன், வீரனுக்கு அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டு விடும் காட்சி என ஓ.ஏ.கே.தேவர் மிகச் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
மதுரை வீரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் ஓ.ஏ.கே.தேவருக்கு ஏற்பட்ட நட்பு, மகாதேவி திரைப்படத்திலும் தொடர்ந்தது. இதில் சிறப்பு என்னவென்றால், மேற்குறிப்பிட்ட இரண்டு படங்களிலும் வசனங்கள் எழுதியது கவியரசு கண்ணதாசன் அவர்கள்.
"வாள் பிடிக்கத் தெரியாத பேடியிடம் போய் சொல் இந்த வார்த்தையை" என்று ஓ.ஏ.கே.தேவர் கர்ஜிக்கும் வித்தத்தில், அந்தப்படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்திருந்த பி.எஸ்.வீரப்பாவுக்கு நிகராக தானும் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருந்தார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் விக்கிரமாதித்தன் படத்தில் மந்திரவாதியாக நடித்து அசத்தியிருப்பார் தேவர். மேலும் எம்.ஜி.ஆருடன் சர்வாதிகாரி, தாய் மகளுக்கு கட்டிய தாலி, நான் ஆணையிட்டால், பறக்கும் பாவை, கண்ணன் என் காதலன், தாய்க்குப்பின் தாரம், ராமன் தேடிய சீதை, தலைவன், அடிமைப் பெண் படங்களிலும் நடித்திருந்தார்.
மாடர்ன் தியேட்டர்ஸில் தேவர் நடித்தபோதே கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் நெருக்கம் ஏற்பட்டது. கலைஞர் வசனம் எழுதிய குறவஞ்சி, பூம்புகார் போன்ற திரைப்படங்களில் ஓ.ஏ.கே.தேவர் சிறப்பாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சிவாஜி மன்றம் வழங்கிய வீர சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நாடகங்கள் சிலவற்றில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் மிகச்சிறப்பாக நடித்தவர் தேவர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் கட்டபொம்மனாகவே வாழ்ந்து காட்டிய திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன். அதில் தேவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை என்று தெரிந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவர்கள் தனக்கு வழங்கப்படிருந்த ஊமைத்துரை வேடத்தை ஓ.ஏ.கே.தேவருக்கு வழங்கினார் என்றால், நாடகமாக அது பலமுறை அரங்கேறிய போது நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து தேவரும் அதில் எவ்வளவு சிறப்பாக நடித்திருப்பார் என்று தானே நினைக்கத் தோன்றுகிறது.
சம்பூர்ண ராமாயணம் படத்தில் விபீஷணன்,
கப்பலோட்டிய தமிழன் படத்தில் வடுகுராமன் என்ற பெயரில் சிறப்புத் தோற்றம்,
திருவிளையாடல் படத்தில் தட்சன்,
கர்ணன் படத்தில் கனக மகாராஜா (கர்ணனுக்கு மாமனாராக) என சிறப்பாக நடித்திருந்த தேவர்
தங்கச்சுரங்கம் படத்திலும் சிறப்பான வில்லனாகத் தோன்றினார். படித்தால் மட்டும் போதுமா படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வக்கீலாகவும், கல்யாணியின் கணவன் படத்தில் காவல்துறை அதிகாரியாகவும், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த நானே ராஜா, ராஜா ராணி, படத்திலும் நடித்திருந்தார்.
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் சின்னஞ்சிறு உலகம், ஆதிபராசக்தி (சும்பன் என்ற அசுரன்) வாழையடி வாழை, குறத்தி மகன், கண்கண்ட தெய்வம் போன்ற படங்களில் ஒன்று அல்லது இரண்டு சீன்களில் வந்து போனாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
மேலும் சாது மிரண்டால் படத்தில் இடைவேளைக்குப் பிறகு தோன்றும் காட்சிகளில் பிணமாகவே நடித்து அசத்தியிருந்த தேவர் அவர்கள் பி.ஆர்.பந்துலுவின் கங்கா கௌரி படத்தில் சனி பகவானாகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
முக்தா வி.சீனிவாசன் அவர்களின் இயக்கத்தில் பொம்மலாட்டம் மற்றும் மஹேஸ்வரி, பட்டத்து ராணி, மூன்றெழுத்து, கங்கா, சி.ஐ.டி.சங்கர், பூக்காரி, பிள்ளை செல்வம், மனசாட்சி, நான்கு சுவர்கள், மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, நான் யார் தெரியுமா, ராமு, அன்பு வழி, உலகம் இவ்வளவு தான், எதிர்நீச்சல், நீயும் நானும், வீரக்கனல், பொற்சிலை, தாயின்மேல் ஆணை, காலம் வெல்லும், அருட்செல்வர் ஏ.பி.நாகராஜன் அவர்களிடம் பல்வேறு திரைப்படங்களில் அஸோஸியேட் டைரக்டராகப் பணியாற்றிய கே.கே.ஸம்பத்குமார் அவர்கள் இயக்கிய சிசுபாலன், வசனகர்த்தா, அருணாச்சலம் ஸ்டுடியோ உரிமையாளர் ஏ.கே.வேலன் அவர்கள் தயாரித்து இயக்கிய கைதியின் காதலி, தேவர் கடைசியாக நடித்து அவர் இறந்த பின் வெளியான பாக்தாத் பேரழகி ஆகியவை ஓ.ஏ.கே.தேவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள்.
May be an image of 1 person
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...