Monday, April 17, 2023

தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் நிறுவனம் - டாஸ்மாக் (TASMAC) - ஒரு பார்வை.

 

தற்போது, தமிழ்நாட்டில் 5,400 மது விற்பனைக் கூடங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாக இருக்கின்றன. ஆனால், அனுமதி பெறாத கடைகளையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை 8,000-ஐத் தாண்டும் என்று ஒரு கணக்கு தெரிவிக்கிறது.

இந்த விற்பனைக் கடைகள் செயல்படும் நேரம் 'மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை' என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் பல இடங்களில் இவை காலை 9 மணி முதல் இரவு 11 அல்லது 12 மணி வரை கூடத் திறந்துள்ளன. இது அரசுக்குத் தெரிந்தே நடக்கிறது. காவல் துறையும் அதைக் கண்டு கொள்வதில்லை.

தவிர, ஆங்காங்கே பெட்டிக் கடைகளில் டாஸ்மாக்கில் விற்பனை ஆகும் மது, கூடுதல் விலைக்கு ரகசியமாக விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு, அரசாங்க அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் உடந்தை என்று சொல்கிறார்கள்.

ஒரு வருடத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு 17 நாள்கள் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாள்கள் ஆகும். இருப்பினும், அவை பல விடுமுறை நாள்களிலும் செயல்படுவது கண்கூடு. ஏனெனில், விடுமுறை நாள்களில் தான் உச்ச பட்ச விற்பனை நடக்கும்.

சரி, இப்போது விஷயத்துக்கு வருகிறேன்.

என்னைப் பொறுத்தவரை எதிர்காலத்தில் 'பூரண மதுவிலக்கு' கொண்டு வருவது நடவாத காரியம். ஆகவே, அவற்றின் செயல்பாடுகளை இவ்வாறு ஒழுங்குபடுத்தலாம்.

1. கடைகளின் எண்ணிக்கையை, ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு (Panchayat Union/Block) 10 ஆகக் குறைக்க வேண்டும். தற்போது, தமிழ்நாட்டில் இருக்கும் ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 385 ஆகும். ஆகவே, மாநிலம் முழுவதும் உள்ள கடைகளின் மொத்த எண்ணிக்கை, 5,400-ல் இருந்து 3,850 ஆகக் குறையும்.

2. இதன் மூலம், அடுத்த 3 மாதங்களுக்குள் 1,550 கடைகள் படிப்படியாக மூடப்படும்.

3. சட்ட விரோதமாக நடைபெறும் கடைகள் அனைத்தும் தயவு தாட்சணியம் கொஞ்சமும் இல்லாமல் மூடப்படுதல் வேண்டும்.

4. அனுமதி இல்லாமல் மதுக்கடைகளோடு இணைந்த குடிக்கும் வசதிகள் (Bars) கொண்ட இடங்கள் கண்டறியப்பட்டால், அவை உடனே மூடப்படல் வேண்டும்.

5. இனிவரும் காலத்தில், புதிய கடைகள் எதுவும் அரசாங்கத்தால் திறக்கப்படக் கூடாது.

6. இப்பொழுது முதல், ஒவ்வொரு ஆண்டும் 100 கடைகளை மூடிக் கொண்டே வர வேண்டும்.

7. மதுக்கடைகள் அமைந்திருக்கும் இடங்கள், குடியிருப்புப் பகுதிகள் (Residential Areas), பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள், முதியோர் விடுதிகள் (Old Age Homes) ஆகியவற்றில் இருந்து, 200 மீட்டருக்கு அப்பால் இருக்க வேண்டும்.

8. மதுக்கடைகள் செயல்படும் நேரமும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அவை மாலை நான்கு மணி முதல் இரவு பத்து மணி வரை (4-00 P.M. to 10-00 P.M.) மட்டுமே செயல்பட வேண்டும்.

9. விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மது பாட்டிலுக்கும், கணினி மூலம் விற்பனைச் சீட்டை வழங்க வேண்டும்.

10. அதில், அந்த பாட்டிலின் விவரங்கள் முழுதுமாக இருக்க வேண்டும். மதுவின் பெயர், அதைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர், கொள்ளளவு எவ்வளவு, பாட்டிலில் அடைத்த நாள், அதன் காலாவதி நாள், விற்பனை விலை ஆகியவற்றோடு, விற்பனை வரி எவ்வளவு என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

11. அனுமதிக்கப்படாத மற்றும் உடல்நலத்துக்குத் தீங்கை விளைவிக்கும் எந்தப் பண்டங்களும், மதுவோடு சேர்த்து விற்பனை செய்யக் கூடாது.

12. 18 வயது நிரம்பாதவருக்கு மது விற்பனை செய்யக்கூடாது. அதே போல, 80 வயதுக்கு மேற்பட்டவருக்கும் மதுவை விற்கக் கூடாது. இந்த இரண்டும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும்.

13. அரசால் அங்கீகரிக்கப்பட்ட மது உற்பத்தித் தொழிற்சாலைகளில் இருந்து மட்டுமே மது கொள்முதல் செய்யப்பட வேண்டும். அதுவும், அனுமதிக்கப்பட்ட வகைகள் (Labels) மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும்.

14. மதுக்கடைகளிலும், மொத்த இருப்புக் கிடங்குகளிலும் இருப்பு வைத்திருக்கும் சரக்குகளுக்குச் சரியான கணக்கு வைத்திருக்க வேண்டும்.

15. மதுக்கடைகளிலும், இருப்புக் கிடங்குகளிலும் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல், திடீர் சோதனை அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்.

16. மேற்சொன்ன விதிமுறைகள், விவரங்கள் எல்லாம் தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (TASMAC) அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட வேண்டும்.

17. மது குறித்த அரசின் கொள்கை முடிவுகளிலும், விற்பனை விலைகளிலும், வரி விகிதத்திலும் ஒவ்வொரு தடவை மாற்றம் செய்யும் போதும், அதைத் தெளிவாக இணையதளத்திலும், ஊடகங்கள் வாயிலாகவும் பொது மக்களுக்கு தெரியப்படுத்துதல் அரசின் கடமை ஆகும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...