இந்து மதத்தில், நவ கிரகங்களை அறியாதவர்கள் இருக்க முடியாது என்று நம்புகிறோம்? நவ கிரகங்கள் யார் என்று கேட்டால் பலர், சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது ஆகிய இவர்கள் தான் நவ கிரகங்கள் என்று சொல்லி விடுவோம்.
○ சூரியன்..
சிம்ம ராசிக்கு அதிபதி. அவரது தானியம் கோதுமை. அவருக்குப் பிடித்த பூ ‘செந்தாமரை’. சூரியனின் உலோகம் தாமிரம் அல்லது தம்பாக்கு ஆகும். சூரியனின் ரத்தினம் மாணிக்கம். நவகிரகங்களில் சூரியனுக்கு சிவப்பு வஸ்திரம் அல்லது Bright ரெட் கொண்ட வஸ்திரத்தை சாற்றுவது விசேஷம். சூரியனுக்கு சந்தனம் சாற்றுவது விசேஷம். சூரியனுக்கு சாஸ்திரப்படி ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் தான் வாகனம். சூரியன் கார்ப்பு சுவைக்கு அதிபதி. சூரியனின் திசை கிழக்கு. சூரியனின் அதிதேவதை சிவ பெருமான். சூரியன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சாரம் செய்வார். அதைக் கொண்டே தமிழ் மாதங்கள் தீர்மானிக்கப்படுகிறது. உதாரணமாக சூரியன் சித்திரை மாதத்தில் மேஷத்தில் சஞ்சரிப்பார்.
○ சந்திரன்...
கடக ராசிக்கு அதிபதி. அவரது தானியம் நெல். அவருக்குப் பிடித்த பூ ‘வெள்ளெலி’. சந்திரனின் உலோகம் ஈயம். சந்திரனின் ரத்தினம் முத்து. நவகிரகங்களில் சந்திரனுக்கு முத்து வெண்மை கொண்ட ஆடையை அணிவிப்பது விசேஷம். சந்திரனுக்கு சாம்பிராணி காட்டுவது விசேஷம். சந்திரனின் வாகனம் முத்து விமானம். சந்திரன் உப்பு சுவைக்கு அதிபதி. சந்திரனின் திசை வட மேற்கு. சந்திரனின் அதிதேவதை அம்பாள் அல்லது பார்வதி தேவி. சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டே கால் நாள் சஞ்சாரம் செய்வார்.
○ செவ்வாய்..
மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய இரு ராசிகளுக்கு அதிபதி. அவரது தானியம் துவரை. அவருக்குப் பிடித்த மலர் ‘சண்பகம் அல்லது செண்பகம்’. செவ்வாயின் உலோகம் செம்பு. செவ்வாயின் ரத்தினம் பவளம். நவகிரகங்களில் செவ்வாய்க்குப் பவள நிறம் கொண்ட ஆடையை அணிவிப்பது விசேஷம். செவ்வாய்க்கு ‘குங்கிலியம்’ காட்டுவது விசேஷம். செவ்வாய் முருகனின் அம்சம். அதனால் அவருக்கு சேவல் தான் வாகனம். செவ்வாய் உறைப்பு அல்லது எரிப்பு சுவைக்கு அதிபதி. செவ்வாயின் திசை தெற்கு. செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமான். செவ்வாய் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள் சஞ்சாரம் செய்வார்.
○புதன்..
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி. அவரது தானியம் பச்சைப்பயிறு. அவருக்குப் பிடித்த மலர் ‘வெண்காந்தல்’. புதனின் உலோகம் பித்தளை. புதனின் ரத்தினம் மரகதம். நவகிரகங்களில் புதனுக்கு நல்ல பச்சை ஆடையை அணிவிப்பது விசேஷம். புதன் பகவானுக்கு கற்பூரம் காட்டுவது விசேஷம். புதனுக்கு குதிரை வாகனம். புதன் உவர்ப்பு சுவைக்கு அதிபதி. புதனின் திசை வடக்கு. புதனின் அதிதேவதை மகா விஷ்ணு. புதன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சாரம் செய்வார்.
○வியாழன் அல்லது குரு பகவான்... தனுசு மற்றும் மீன ராசிக்கு அதிபதி. அவரது தானியம் கடலை அல்லது கொண்டைக்கடலை. அவருக்குப் பிடித்த மலர் முல்லை. குருவின் உலோகம் தங்கம். குருவின் ரத்தினம் கனக புஷ்பராகம் அல்லது புஷ்பராகம். நவகிரகங்களில் குருபகவான் அல்லது வியாழ பகவானுக்கு பொன்னிறமான துணி அல்லது மஞ்சள் கொண்ட துணியை சாற்றுவது விசேஷம். குரு பகவானுக்கு ஆம்பல் மலர் சாற்றுவதும் விசேஷம். குரு பகவானுக்கு யானை தான் வாகனம். குரு பகவான் இனிப்பு சுவைக்கு அதிபதி. குரு பகவானின் அதிதேவதை பிரம்மா அல்லது தக்ஷிணாமூர்த்தி. குரு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு வருடம் சஞ்சாரம் செய்வார். குருவின் திசை வட கிழக்கு.
○வெள்ளி அல்லது சுக்கிர பகவான்.... ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி ஆகிறார். அவரது தானியம் மொச்சை. அவருக்குப் பிடித்த மலர் வெண் தாமரை. சுக்கிரனின் உலோகம் வெள்ளி. சுக்கிரனின் ரத்தினம் வைரம். சுக்கிரனின் திசை தென்கிழக்கு. நவகிரகங்களில் சுக்கிர பகவானுக்கு பட்டு போன்ற வெள்ளாடையை அணிவிப்பது விசேஷம். சுக்கிர பகவானுக்கு லவங்கம் அர்ப்பணித்து வழிபடுவது என்பது விசேஷம். சுக்கிர பகவானுக்கு குதிரை வாகனம். சுக்கிர பகவான் புளிப்பு சுவைக்கு அதிபதி. சுக்கிர பகவானுக்கு மகா லட்சுமி அதிதேவதை. சுக்கிர பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம் சஞ்சாரம் செய்வார். ராசிக் கட்டத்தில் குருவை விட அதிக இடங்களில் சுப பலன்களை வழங்குபவர் சுக்கிரன் மட்டுமே. எனினும், அவர் அரக்கர்களின் குரு என்பதால் முக்கால் பங்கே அவர் சுப கிரகம் என்பதாக சொல்லப்படுகிறது. தேவ குரு பிரகஸ்பதி அல்லது வியாழ பகவான் அல்லது குரு பகவானும், சுக்கிரனும் சகோதர உறவு கொண்டவர்கள். ஆனால், பங்காளிகள். அதனால் தான் இருவரும் பகை கிரகங்களாக இருக்கின்றனர். குரு பிரகஸ்பதி தேவர்களுக்கு அதிபதியாக இருக்கிறார்.
சனி பகவான்...
மகரம் மற்றும் கும்ப ராசிக்கு அதிபதி ஆகிறார். அவரது தானியம் எள்ளு. அவருக்குப் பிடித்த மலர் கருங்குவளை. சனியின் உலோகம் இரும்பு. சனி பகவானின் ரத்தினம் நீலம் அல்லது கருநீலம். நவகிரகங்களில் சனி பகவானுக்கு கறுப்பு நிற ஆடையை அணிவிப்பது விசேஷம். சனி பகவானுக்கு யாகத்தில் ‘கருங்காலி’ சமித்து அர்ப்பணித்து வழிபடுவது என்பது விசேஷம். சனி பகவானுக்கு காக்கை வாகனம். சிலர் கருடன் என்றும் கூறுவர். சனி பகவான் கசப்பு சுவைக்கு அதிபதி. சிலர் கைப்பு என்றும் கூறுவர். சனியின் திசை மேற்கு. சனி பகவானுக்கு பைரவர் அதிதேவதை. சிலர் யமன் என்றும் கூறுவர். சிலர் சாஸ்தா அல்லது ஐயப்பன் என்றும் கூறுவர். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சாரம் செய்வார். கிரகங்களில் இவர் மட்டுமே ஒரு ராசியில் அதிக காலம் தங்குவார். அதே சமயத்தில் ஒரே பாச்சலில் மூன்று ராசிகளை பீடிக்க வல்லவர். நவ கிரகங்களில் மிகவும் வலிமையான கிரகம். அதனால் தான் மரங்களில் பலம் பொருந்திய “கருங்காலியை” இவருக்கு சமித்தாகக் கொடுத்து இருக்கின்றனர். “கருங்காலியை” கொண்டு தான் “கோடாலியின்” கைப்பிடியை செய்வார்கள். அப்போது கருங்காலியின் பலத்தை அறிந்து கொள்ளுங்கள் வாசகர்களே!.. “கோடாரிக் காம்பு” என்பார்கள் “தனது இனத்தில் பிறந்து தனது இனத்தையே அழிப்பதால் ‘கருங்காலிக்கு’ அவப் பெயர் வந்து விட்டது. இப்போதும் கூட காட்டிக் கொடுப்பவர்களை சிலர் “கருங்காலி” என்று திட்டுவது உண்டு. எல்லோரும் ஒதுக்கிய ஒன்றை சனி பகவான் தன்னுடைய சமித்தாக ஏற்றுக் கொண்டு கௌரவம் தந்து உள்ளார் என்பதை கூடுதல் தகவலாக இங்கு சொல்ல வேண்டி உள்ளது.
●மற்றபடி, சனியை விட சக்தி வாய்ந்த கிரகம் ராகு. ராகு பகவானுக்கு ஆட்சி வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த வீட்டில் நம் ஜாதக கட்டத்தில் அமர்ந்து இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி தரும் பலனைத் தருவார்.
○ராகு பகவானின் தானியம் உளுந்து. அவருக்குப் பிடித்த மலர் மந்தாரை. ராகுவின் உலோகம் கருங்கல். ராகு பகவானின் ரத்தினம் கோமேதகம். நவகிரகங்களில் ராகு பகவானுக்கு கறுப்புடன் சித்திரங்கள் கூடிய வஸ்திரத்தை அல்லது ஆடையை அணிவிப்பது விசேஷம். ராகு பகவானுக்கு கடுகு அர்ப்பணித்து வழிபடுவது என்பது விசேஷம். ராகு பகவானுக்கு ஆடு வாகனம். ராகு நவ கிரகங்களில் சனியை போலப் பலன் தருபவர். அந்த வகையில் அவர் கைப்பு அல்லது கசப்பு சுவைக்கு சொந்தக்காரர். ராகுவின் திசை தென்மேற்கு. ராகு பகவானின் அதிதேவதை ‘துர்கா தேவி’. சிலர் ‘காளி’ என்றும் ‘கருமாரி அம்மன்’ என்றும் கூறுவர். ராகு பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம் சஞ்சாரம் செய்வார். எப்போதுமே ராகு இருக்கும் இடத்தில் இருந்து எண்ணி ஏழாம் இடத்தில் கேது இருப்பார்.
○கேது பகவானுக்கு ஆட்சி வீடு என்று எதுவும் இல்லை. அவர் எந்த வீட்டில் நம் ஜாதக கட்டத்தில் அமர்ந்து இருக்கிறாரோ அந்த வீட்டின் அதிபதி தரும் பலனைத் தருவார். கேது பகவானின் தானியம் கொள்ளு. அவருக்குப் பிடித்த அல்லது உகந்த மலர் செவ்வல்லி. கேதுவின் உலோகம் துருக்கல். கேது பகவானின் ரத்தினம் வைடூரியம். நவகிரகங்களில் கேது பகவானுக்கு புள்ளிகளுடைய சிவப்பு நிற வஸ்திரத்தை அல்லது ஆடையை அணிவிப்பது விசேஷம். கேது பகவானுக்கு செம்மரம் சமித்தாக யாகத்தில் அர்ப்பணித்து வழிபடுவது என்பது விசேஷம். கேது பகவானுக்கு சிங்க வாகனம். கேது பகவான் நவ கிரகங்களில் செவ்வாயை போலப் பலன் தருவார். அந்த வகையில் அவரது சுவை உறைப்பு ஆகும். கேதுவின் திசை வட மேற்கு. கேதுவுக்கு அதிதேவதை விநாயகர். சிலர் சண்டிகேஸ்வரர் என்றும் கூறுவர். கேது பகவான் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம் சஞ்சாரம் செய்வார். எப்போதுமே கேது இருக்கும் இடத்தில் இருந்து எண்ணி ஏழாம் இடத்தில் ராகு இருப்பார். அதாவது, ராகு / கேதுக்கள் ஒரே நேரத்தில், ஒரே சமயத்தில் பெயர்ச்சி ஆவார்கள்.
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment