போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி சட்டை போடமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்.
ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால், அங்கும் மரியாதை கிடைக்காது.
கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் உண்டு.
பள்ளி செல்லும் போது "அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன்" என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவன் கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான்.
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.
பாதிரியை பார்த்து மற்ற கிறிஸ்தவர்கள் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும், கருப்பு ஆடை அணிந்து, தன்னை மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர். 'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.
மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'தீவிரவாதி..' என்று கிறிஸ்தவ நாடுகள் பார்த்தாலும், இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.
ஒரு முல்லாவை பார்த்து, இன்னொரு இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகத்திற்கு ஏற்றவாறு ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன் (விபரன்) நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான்.
இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிந்துவா? கிறிஸ்தவனா? என்று நினைக்கும் அளவுக்கு அடையாளம் இல்லாமல் அலைய, அதுவே, மத மாற்றத்துக்கும் இடம் கொடுத்து விடுகிறது.
பெண்கள் பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
இஸ்லாமிய பெண்களுக்கு முகத்தை காட்டவே அனுமதி இல்லை என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.
"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றி இட்டுக்கொண்டு உள்ளதே! உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க நினைக்கிறான்.
"தன் செயலை பார்த்து தான் வழிபடும் தெய்வம் மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து 'சுய மரியாதை' என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட அற்ப வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.
கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
போலீஸ் வேலை சேர்ந்தால், 'போலீஸ் ஆடை அணிய' எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
ஆஃபீஸ் சென்றால், 'அதற்கான ஆடை அணிய' எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
கூர்க்கா வேலை செய்தாலும் 'அதற்கான ஆடை அணிய' எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
மற்ற மதத்தவன் 'அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்',
தான் கோவிலுக்கு செல்லும் போது,
"நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்?
நான் ஏன் புடவை அணிய வேண்டும்?
இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.
ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள், "கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..
'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, தன் பேடித்தனத்தை மறைக்க, லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறார்கள்.
உலக கிண்டலுக்காக தான் கெட்டது போதாதென்று, கோவிலையும் கெடுக்க முயல்கிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயல்கிறான்.
கோவிலில் உள்ள "மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன" என்று கேட்கிறான்?
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரகஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத இவன், பொறாமை மட்டுமே கொண்டுள்ளதால், "நான் கோவிலில் உள்ள சிவபெருமானை ஏன் தொட கூடாது?" என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறான்.
இப்படி பேசுபவனை மற்ற ஹிந்துக்கள் கடுமையாக கண்டிப்பதும் இல்லை.
"கோவில் விக்ரகத்தை நானும் தொடுவேன்" என்று இவன் இப்படி பேசுவது பக்தியாலா? பொறாமையாலா?
பக்தி தான் காரணம் என்றால், சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் உண்மையில் அனுகிரஹம் கூட செய்யுமே...
பொறாமையே இவர்களுக்கு லட்சியமாக இருப்பதால், காலம் காலமாக உள்ள ஆச்சாரத்தை கெடுக்க நினைக்கின்றனர்.
தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது?
இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
'தன்னை யாரும் கேலி செய்வார்களோ!' என்று நினைத்து கொண்டும், இவன் தகப்பனார் வரை காத்து வந்த அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.
இப்படி கோவிலுக்கு வரும் பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான்.
அர்ச்சகனுக்கு வேதம் தெரிந்து இருக்க வேண்டும்.
சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் 'ருத்ரம், நாயன்மார் பாசுரம்' தெரிந்து இருக்க வேண்டும்.
பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத பக்தி வேண்டும்.
பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
நாவடக்கம் வேண்டும்.
இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
குடுமி வைத்து இருக்க வேண்டும்.
கச்சம் கட்டி இருக்க வேண்டும்.
வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்
என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.
அபசாரம் செய்து, குடுமி, கச்சம் இல்லாமல், வேதம் கற்காமல், ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது, அர்ச்ச அவதாரத்தில் உள்ள தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்.
அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, தன் சுய மான-அவமானத்திற்காக செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை இந்த அர்ச்சகர்கள் இருக்கும் காலத்திலேயே அனுபவிக்க செய்கிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?
வேதம் அறியாமல் தொட்டால் என்ன?' என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தையும் பழிக்கிறார்கள்.
மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.
இன்றோ, கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.
இருவருக்குமே, "தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும்" என்றும் எண்ணமும் இல்லை.
ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.
ஹிந்துக்கள் சிந்தனைக்கு...
No comments:
Post a Comment