புகழ்பெற்ற ஒரு பள்ளிக்கூட வாசலில் கல்லூரி மாணவர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.
பள்ளி முடிந்த மணி அடித்ததால் மாணவர்கள் பேசிச் சிரித்தபடியே வெளியே வந்தார்கள். அப்படித்தான் பிளஸ் 2 படிக்கும் அந்த மாணவியும் வெளியே வந்தாள். அவள் வந்ததும், கல்லூரி மாணவர்கள் சுறுசுறுப்பானார்கள்.
ஏனென்றால் அப்பள்ளியிலும் சரி, அந்த பகுதியிலும் சரி, அவளையே மிக அழகான பெண்ணாக அவர்கள் நினைத்தார்கள். எப்படியாவது அவளை ஈர்த்து தன்னைக் காதலிக்க வைக்க வேண்டும் என்று பெரும் கூட்டமே காத்திருந்தது.
இரண்டு பேர் ரத்தத்தில் கடிதம் எழுதிக் கொடுத்தார்கள். சிலர் கோயிலுக்குச் சென்று பிரசாதம் எடுத்து வந்தனர். இப்படி ரகம் ரகமாய், விதம் விதமாய் அவளை ஈர்க்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
அம்மாணவியோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தாள். அவள் அமைதியாய் இருக்க இருக்க, தொல்லைகளும் அதிகமாகின.
அன்றும் அப்படித்தான் அவள் வரவை எதிர்பார்த்து இளைஞர்கள் காத்திருந்தார்கள். வழக்கமாக கண்டுகொள்ளாமல் செல்லும் அந்த மாணவி, அன்று அவர்களை நோக்கி வந்தாள். அவ்வளவு அழகான பெண் தங்களை நோக்கி வருவதால் மாணவர்கள் பரபரப்பானார்கள்.
அவள் அருகில் வந்து, ‘‘பேசலாங்களா?’’ என்றாள்.
மாணவர்கள் திணறி, ‘‘சொல்லுங்க’’ என்றனர்.
‘‘நான் வந்தது உங்க கிட்ட ரெண்டு ஆல்பம் காட்டுறதுக்குத்தான்!’’
‘‘என்ன ஆல்பம்?’’
அவள் அங்கே இருந்த மரத்தடி நிழலில் நடுவில் அமர்ந்து கொண்டு, கல்லூரி மாணவர்களை வட்டமாக அமரச்செய்தாள். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.
முதலில் அவள் பாட்டியின் கல்யாண ஆல்பம் காட்டினாள். மொத்தம் ஆறு போட்டோக்கள் உள்ள கல்யாண ஆல்பம். அனைவரும் பார்த்தார்கள். அடுத்து அவள் அம்மா அப்பாவின் கல்யாண ஆல்பம் காட்டினாள். அதில் மொத்தம் 25 போட்டோக்கள் இருந்தன. அதையும் அனைவரும் பார்த்தார்கள்.
கல்லூரி மாணவர்களுக்கு ஏன் இந்தப் பெண் அவளாக வந்து பேசி, அவள் பாட்டி மற்றும் பெற்றோரின் கல்யாண ஆல்பங்களைக் காட்டுகிறாள் என்று குழப்பம். இப்போது அவள் பேச ஆரம்பித்தாள்.
‘‘என் பாட்டி கல்யாண ஆல்பம் பாத்தீங்க. எவ்ளோ சின்ன குழந்தையா பாட்டி இருக்கிறாங்க பாத்தீங்களா? என் பாட்டிக்கு படித்து முன்னேறனும்னு ரொம்ப ஆசை. வீட்ல அழுது புரண்டு ஆறாம் வகுப்பு வரைக்கும் படிச்சிருக்காங்க.
அப்போ பக்கத்து பள்ளிக்கூடத்துல படிச்ச பெரிய பையன், பாட்டி நடந்து போகும்போது ஒரு ரோஜாப்பூவை மேல வீசி இருக்கான். அதை பாட்டி வந்து வீட்ல சொல்லி இருக்காங்க. உடனே வீட்ல இருந்தவங்க, ‘நீ படிச்சது போதும்’னு சொல்லி நிச்சயதார்த்தம் செய்துட்டாங்க. அப்புறம் சில வருஷம் கழிச்சி கல்யாணம் செய்து வச்சாங்க.’’
‘‘கல்யாணம் செய்யும்போது உன் பாட்டிக்கு என்ன வயசு?’’ மாணவர்கள் கேட்டார்கள்.
‘‘15 வயசு. 17 வயசுல எங்க அம்மா பிறந்தாங்க. அம்மாவுக்கும் படிக்கணும்னு ரொம்ப ஆசை. பாட்டிக்கும் அம்மாவ படிக்க வைக்கணும்னு ஆசை. அம்மா ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருக்கும்போது, ஊர் சுவத்துல அம்மாவையும் கூட படிக்கிற இன்னொரு பையனையும் இணைச்சி வைச்சி யாரோ எழுதி வச்சிட்டாங்க.
அதைப் பார்த்த தாத்தா, அம்மா எவ்வளவோ கெஞ்சியும் பொருட்படுத்தாம அம்மாவோட படிப்ப நிறுத்தி அம்மாவுக்கு பதினேழு வயசுல கல்யாணம் செய்து வைச்சிட்டாங்க. அம்மாவோட 19 வயசுல நான் பிறந்தேன்.’’
கல்லூரி மாணவர்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
‘‘15 வயசுல கல்யாணம் ஆன பாட்டி, 17 வயசுல கல்யாணமான அம்மா, அவங்க வழியில எனக்கும் அப்படி ஆகிடக் கூடாது. எனக்கு 15 வயசு நடக்குது. எனக்கு நிறைய படிக்கணும்.
அப்துல் கலாம் மாதிரி விஞ்ஞானி ஆகனும்னு ரொம்ப ஆசை. என் பாட்டியை ஒரு ஆண் கிண்டல் செய்தார். அதனால அவங்க படிப்பு நின்னுது. என் அம்மாவை ஒரு ஆண் கிண்டல் செய்தார். குடும்பத்துல இருக்கற ஆண்கள் சேர்ந்து அவங்க படிப்பையும் நிறுத்தினாங்க.
இப்படிப் பெண்களுக்கு பாதுகாப்பு கேடு கொடுக்கிறதும் ஆண்கள்தான். அவங்களை பாதுகாக்குறேன்னு படிப்பை நிறுத்துற கேட்டைச் செய்றதும் ஆண்கள்தான்.
தலைமுறை தலைமுறையா இப்படி டீஸ் பண்ற ஆண்களால எங்கள் படிப்பு, எதிர்காலம் எல்லாமே நாசமாத்தான் போகணுமா?
இந்த சூழ்நிலையில நான் மேலும் மேலும் படிக்க ஆசைப்படுறேன். நான் மேல படிக்கலாமா வேண்டாமான்னு நீங்கதான் யோசிச்சி சொல்லணும். சரியா? உங்க முடிவு எதுனாலும் நான் ஏத்துக்கிறேன்’’ என்று சொல்லி அவள் விடைபெற்றாள்.
மறுநாள் அவள் பள்ளிக்கு வரும்போது, ரோஜாக்களோடு ஒரு கல்லூரி மாணவன் கூட அங்கே நிற்கவில்லை.
No comments:
Post a Comment