புதுடெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் வைக்கும் முடிவுக்கு பின்னணியில் பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் இருந்துள்ளார்.....
கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு சுதந்திரம் அடைந் தது. பிரிட்டிஷாரிடம் இருந்து இந்தியர்களிடம் ஆட்சியை ஒப்படைக்கும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 14-ம் தேதி இரவு நடைபெற்றது. இரவு 12 மணிக்கு நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம், மவுண்ட் பேட்டன் செங்கோல் வழங்கி ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்தினார். அந்த செங்கோல் சுதந்திர போராட்ட வீரர் ராஜாஜிகூறியபடி, திருவாவடுதுறை ஆதீனம் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டது. அந்தச் செங்கோல் அலகாபாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் 28-ம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி டெல்லியில் திறந்து வைக்கிறார். அந்த கட்டிடத்தில் அந்த செங்கோல் வைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை எடுப்பதற்கு பின்னணியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம் இருந்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சுதந்திரத்தின் போது வழங்கப்பட்ட செங்கோல் குறித்து கடந்த 2021-ம் ஆண்டு மே 5-ம் தேதி 'துக்ளக்' தமிழ் இதழில் ஒரு விரிவான கட்டுரை வெளியாகி இருந்தது. அந்த கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த வரலாற்று சம்பவங்களை பொதுமக்களிடம் முறையான வகையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனவே, துக்ளக் இதழில் வெளியான கட்டுரை முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். அத்துடன் ஒரு கோரிக்கை கடிதத்தையும் வைத்து பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தேன். நமது நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது இந்த வரலாற்று சிறப்பு மிக்க செங்கோல் பற்றி மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு எனக்கு எந்த பதிலும் உடனடியாக வரவில்லை. ஆனால், இந்திய ஜனநாயகத்தின் கோயிலாக விளங்கக் கூடிய நாடாளுமன்றத்தில் அந்த செங்கோல் நிரந்தரமாக வைக்கப்படும் என்ற அறிவிப்பை கேட்டு தற்போது கொண்டாட்டம் என்பதையும் தாண்டி, நான் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன்.
நாடாளுமன்றத்தில் நிரந்தரமாக செங்கோல் வைப்பது சுதந்திரத்தின் சின்னம், நீதியின் சின்னம், ஆட்சியாளர்களுக்கு நெறிமுறைகளின் சின்னமாக விளங்கும். இதனால் நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன். தமிழகத்தின் ஒருசிறப்புமிக்க ஒரு பொருள் நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவது, ஒவ்வொரு இந்தியருக்கும், ஒவ்வொரு தமிழருக்கும் மிகவும்பெருமை தரக் கூடியது..... பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியம்...
No comments:
Post a Comment