மார்க்கெட்டில் கிலோ ரூ30/- க்கு விற்கப்படும் முட்டைக்கோசை மொத்த வியாபாரிகள் கிலோ ரூ1/- விலைக்குக் கேட்டதால் மனம் உடைந்த ஒரு விவசாயி தன் நிலத்தில் விளைந்த முட்டைக்கோஸ் பயிரை டிராக்டர் வைத்து அழித்தார் என்கிற செய்தி வலித்தது.
அதெப்படி மனசாட்சியே இல்லாமல் அத்தனைக் குறைவான விலைக்குக் கேட்டார்கள்?
இந்த மாதிரி சூழ்நிலையில் அந்த விவசாயிக்கு நியாயமான விலை கிடைக்க உதவ வேண்டியது யார் பொறுப்பு?
அந்த விவசாயி தனக்கு நியாயம் கிடைக்க அத்தனை வழிகளையும் மேற்கொண்ட பின்னர்தானே விரக்தியின் எல்லையில் அப்படி ஒரு முடிவெடுத்திருக்க வேண்டும்?
அல்லது எந்த முயற்சிகளும் செய்யவில்லையா?
பயிர் காப்பீட்டில் நியாயமான விலை கிடைக்கவில்லை என்பதற்காக ஈடு கேட்க வாய்ப்புள்ளதா? (ஒரு வேளை..அவர் பயிரைக் காப்பீடு செய்திருந்தால்தான்)
அடுக்கடுக்காக இப்படி பல கேள்விகள் மனதில் எழுகின்றன.
கொஞ்ச நாள்களுக்கு முன்பாக இதேப் போல நியாயமான விலை கிடைக்கவில்லை என்று தக்காளிகளைக் கொட்டினார்கள். பல சமயங்களில் பால் கொட்டப்பட்டுள்ளது.
அவர்களின் வலிகளின் புரிதலுடன் ஒரு கேள்வி: பிரச்சினைகளுக்குத் தீர்வாக தற்கொலை செய்வது போல கஷ்டப்பட்டு உருவாக்கிய விவசாயப் பொருள்களை அழிப்பது தார்மீக ரீதியில் சரிதானா?
கோடி பேர் சத்துணவின்றி இருக்கும் நாட்டில்.. உணவுப் பொருள்களை எந்தக் காரணத்திற்காகவும் யாருக்கும் உபயோகமின்றி அழிப்பதை சட்டம் எப்படிப் பார்க்கிறது?
எத்தனையோ ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள் நம்மைச் சுற்றி எப்போதுமே பொருளாதாரத் தேவைகளுடன் இயங்கிவருகையில்..
இந்த மாதிரியான சூழ்நிலையில் அவர்களுக்குத் தகவல் கொடுத்தால் வந்து எடுத்துச்சென்று பயன்படுத்துவார்களே..
வீட்டிலும், விருந்துகளிலும் உணவை வீணாக்கக் கூடாது என்றுதானே எல்லோரும் கருதுகிறோம்.
அப்படியிருக்க..விவசாயிகள் தங்கள் கோபத்தை, விரக்தியை வெளிப்படுத்தும் செயலாக இருப்பினும்.. உணவுப் பொருள்களை அழிப்பது நியாயமற்ற செயலாகத்தான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment