சத்ரபதி சிவாஜி, வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற ‘சிவாஜி’ மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது.
நதியில் இறங்கி சிவாஜி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது…
ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார்.
மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார்.
அங்கே ஓரிடத்தில்…
சிவாஜி கண்ட காட்சி, அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம்? அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன.
அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன.
மறுநாளும்…
சிவாஜி அந்த ஞானியைத் தரிசிக்கப் போன போது ஞானி வழக்கப்படி இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.
அவரைச் சுற்றிக் கூடியிருந்த காட்டு விலங்குகள் எல்லாம் கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன.
மஹாஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட இராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன.
அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார்.
அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார்.
அது மட்டுமன்று. ஒப்பற்ற அந்த சீலரையே தம் மானசீக குருவாகவும் ஏற்கத் தொடங்கி விட்டார் சிவாஜி.
ஒரு நாள்.
அந்த மஹா ஞானி தனிமையில் இருந்தார். சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். “குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள்!” என வேண்டினார்.
அப்போதுதான் அந்த ஞானியின் திருநாமம் ‘சமர்த்த இராமதாசர்’ என்பதை சிவாஜி அறிந்து கொண்டார்.
தகுதி உள்ளவர்கள் வந்து உபதேசம் செய்யும்படி கேட்டால் அதை மறுக்கக் கூடாது. உபதேசம் செய்ய வேண்டும்.
அதனால் சமர்த்த இராமதாசர் சிவாஜிக்கு இராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் இராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார்.
ஒரு நாள்.
சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த இராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார்.
அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான்.
இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார்.
அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள்.
சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.
சமர்த்த இராமதாசர் கற்றுக் கொடுத்த இராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து..
ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.
அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு இராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார்.
எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில்…
அந்த இரவு நேரத்தில்…
காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன.
முகலாயப் படை திகைத்தது. “இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது?” என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது.
சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ‘ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார்.
அதனால் விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த இராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறினார்.
மஹா ஞானியான சமர்த்த இராமதாசரின் மகிமையை விளக்கும் மற்றொரு நிகழ்ச்சியும் நடந்தது. ஆனால் இது நடந்தது காட்டில் அன்று!
வீர சிவாஜி மன்னரின் அரண்மையில் நடந்தது. ஒரு சமயம்…
வீர சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த இராமதாசர் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில்…
சமர்த்த இராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த இராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு.. “நானே பறித்துத் தருகிறேன்” என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த இராமதாசர்.
அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது.
அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள், “இவர் பெரிய ஞானிதாம். ஆனால் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே!” என்று பரவலாகப் பேசினார்கள்.
அதைக்கேட்ட சமர்த்த இராமதாசர் இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடினார்.
பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார்.
அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது.
ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப் பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை.
கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற இராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப் போக்க வல்லதாக இருக்கிறது.
சமர்த்த இராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது.
அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது.
அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்.
அப்படிப்பட்ட அந்த மன்னன்தான் சமர்த்த இராமதாசரைப் பணிந்து “என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள்!” என வேண்டினான்.
சமர்த்த இராமதாசரும் பார்த்தார். ‘இந்த மன்னனை நல்வழிப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பு’ என்று எண்ணிய அவர்…
மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற இராகத்தில் இராம பஜனை செய்தார்.
மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள்.
அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர்.
முகலாய மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். ஹிந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் முறையிட்டான்.
இராமதாசர், “மக்கள் ஒருவரை ஒருவர்சந்தித்துக் கொள்ளும்போது ‘ ராம்ராம்!” என்று சொல்லிக் கொள்ள வேண்டும்” எனக் கேட்டார்.
அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொண்டார்கள்.
மஹாஞானியான சமர்த்த ராமதாசரின் நல்லிசையால் அவர் பெற்ற இராம பக்தியால் நம்தேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.
No comments:
Post a Comment