Friday, May 8, 2020

மது விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு.

'ஊரடங்கு காலத்தில் மதுக் கடைகளில் அதிக கூட்டம் கூடுவதை தவிர்க்க, 'ஆன்லைன்' அல்லது வீடுகளுக்கே சென்று மது விற்பனை செய்வது ஆகிய நடைமுறை குறித்து பரிசீலிக்கலாமே' என, மாநில அரசுகளுக்கு, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், சமீபத்தில் சில தளர்வுகளை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, வைரஸ் பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் மதுக் கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.

சமூக இடைவெளி:
இதையடுத்து, டில்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மதுக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடை முன்னும், நுாற்றுக்கணக்கில் மது பிரியர்கள் திரண்டு நிற்கின்றனர்.பல இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஏராளமானோர் கூடுவது, கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் என, பொதுமக்களிடையே கவலை எழுந்துள்ளது.

இந்நிலையில், குருசாமி நடராஜ் என்ற வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும், 70 ஆயிரம் மதுக் கடைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக, ஐந்து கோடிக்கும் அதிகமானோர் மது வாங்குகின்றனர். மதுக் கடைகளில், சமூக விலகல் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை; இது, கொரோனா பரவலுக்கு வழி வகுத்து விடும். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக, ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது.

அபாயம்:
இதற்காக, நாட்டு மக்கள் பெரிய விலை கொடுத்துள்ளனர். ஏழைகளின் வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால், வைரஸ் பெரிய அளவில் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிடைத்துள்ள பலன் அனைத்தும், மதுக் கடைகளை திறந்துள்ளதால் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே, மதுக் கடைகளை திறந்து நேரடியாக மது விற்பனை செய்யலாம் என, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

புது நிபந்தனைகளுடன், இது தொடர்பாக புதிதாக வழிகாட்டும் குறிப்பு மற்றும் விதிமுறைகளை வெளியிடும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும். நேரடியாக மது விற்பனை செய்வதன் மூலம், சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான், இந்த மனுவின் நோக்கம். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:

நடவடிக்கை:
மது விற்பனை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய முடியாது. மது விற்பனையை நேரடி தொடர்பு அல்லாமல் மறைமுகமாக மேற்கொள்வது குறித்து, ஏற்கனவே விவாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஆன்லைன் அல்லது வீடுகளுக்கே சென்று, 'டெலிவரி' செய்வது அல்லது நேரடி தொடர்பில்லாமல் மறைமுகமாக விற்பனை செய்வது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்கலாம். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைப்பதாகவும் அறிவித்தனர்.

விற்பனையில் தென் மாநிலங்கள் முன்னிலை:
நாட்டில், மது விற்பனையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, 'கிரிசில்' தெரிவித்துள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை: இந்தியாவின் மது விற்பனையில், தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்களின் பங்கு, 45 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதாவது, நாடு முழுதும் மது குடிப்பதில், சரி பாதி பங்கை, இந்த ஐந்து மாநிலங்கள் பெற்றுள்ளன.

மது விற்பனையில், நாட்டிலேயே தமிழகம், 13 சதவீத பங்குடன் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகா, 12 சதவீதத்துடன், இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகியவை, முறையே, 7, 6, 5 சதவீதத்துடன் அடுத்த மூன்று இடங்களில் உள்ளன.

தென் மாநிலங்களில், மது விற்பனை வாயிலான வரி வருவாயில், தமிழகம், கேரளா ஆகியவை தலா, 15 சதவீத பங்குடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளன. கேரளாவில், 3.30 கோடி மக்கள் தான் உள்ளனர். ஆனால், அங்கு, மதுவுக்கு வரி விதிப்பு அதிகம் என்பதால், விற்பனை குறைவாக உள்ள போதிலும், வருவாய் அதிகமாக உள்ளது.

மது விற்பனையில், டில்லி அரசுக்கு, 12 சதவீத வருவாய் கிடைக்கிறது. ஆனால், தேசிய அளவிலான மது விற்பனையில், இதன் பங்கு, 4 சதவீத அளவிற்கே உள்ளது. கர்நாடகா, ஆந்திரா ஆகியவை தலா, 11 சதவீதமும்; தெலுங்கானா, 10 சதவீத வருவாயும் பெறுகின்றன.

இந்தியாவில், மது விற்பனையில், தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து தென் மாநிலங்களுடன், டில்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய, 12 மாநிலங்களின் பங்கு, 75 சதவீதமாக உள்ளது. இம்மாநிலங்கள், ஊரடங்கு காரணமாக, மது விற்பனை வாயிலான வருவாயை இழந்துள்ளன.

அதே நேரத்தில், தற்போதைய சூழலில், மதுக் கடைகளை திறப்பதிலும் ஆபத்து உள்ளது. ஏனெனில், இந்தியாவில், கொரோனா பாதிப்பில், இந்த, 12 மாநிலங்களின் பங்கு, 85 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது.

இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில், மஹாராஷ்டிராவில் மட்டும், 31.2 சதவீதம் பேர் உள்ளனர். டில்லி, தமிழகம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே, 10, 7.6, 7, 5.9 சதவீதம் பேர் உள்ளனர். கேரளாவில் மட்டும், பாதிப்பு மிகச் சொற்பமாக உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...