'சென்னை, எர்ணாவூரை தலைமையிடமாக வைத்து பதிவாகியுள்ள, 'மக்கள் சேவை கட்சி' தான், ரஜினி துவங்கும் கட்சி; அதற்கு தான், 'ஆட்டோ ரிக் ஷா' சின்னத்தை தேர்தல் கமிஷன் ஒதுக்கியுள்ளது' என, தகவல்கள் பரவி வருகின்றன. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில், 'அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை, அனைவரும் காத்திருக்க வேண்டும்' என,
ரசிகர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
'தமிழகத்தில் அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம்; இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை' என்ற, 'பஞ்ச்' வசனத்தோடு, நடிகர் ரஜினி, அரசியல் களத்தில் குதித்துள்ளார். அடுத்த மாதம் புதியக் கட்சியைத் துவக்க உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு, வரும், 31ம் தேதி வெளியிடப்படும் என, ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
'ஆட்டோ ரிக் ஷா'
'ஆன்மிக ஜனதா கட்சி' என்ற பெயரில், ரஜினி கட்சி துவங்கப் போவதாக, மன்றத்தினர் வாயிலாக தகவல்கள் பரவின. இதற்கான விண்ணப்பம் கொடுத்ததாகச் சொல்லப்பட்டாலும், ரஜினி தரப்பிலிருந்து அதற்கு மறுப்பு ஏதும் இல்லை. அதே சமயம், கட்சியைத் துவக்க விண்ணப்பிக்கும்போது, அதற்கான நடைமுறைகளைப் பின்பற்றி, கட்சி அங்கீகாரம் கிடைக்க, மாதக் கணக்கில் நேரம் தேவைப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், தேர்தல் நெருங்குவதால், கட்சியை விரைவாக பதிவு செய்து, களத்திற்கு வர ரஜினி தயாராகி வருகிறார். இந்நிலையில், இந்திய தேர்தல் கமிஷன், நேற்று முன்தினம், தமிழகத்தில், ஒன்பது கட்சிகளுக்கான சின்னம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
அதில், தினகரனின் அ.ம.மு.க., கட்சிக்கு, குக்கர்; கமலின், மக்கள் நீதி மையம் கட்சிக்கு, புதுச்சேரியில் மட்டும், 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்தப் பட்டியலில், 'மக்கள் சேவை கட்சி' என்ற பெயரும், அதற்கு, 'ஆட்டோ ரிக் ஷா' சின்னமும் ஒதுக்கப்பட்டிருந்தது.
இக்கட்சி, சென்னை, எர்ணாவூர் பாலாஜி நகரை தலைமையிடமாக்கி, பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன், கட்சிப் பதிவில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது ரஜினியின் கட்சி தான்; 'பாபா' விரல் முத்திரை சின்னமாக கிடைக்காத நிலையில், ஆட்டோ சின்னம் பெறப்பட்டுள்ளது என்ற, தகவல்கள் பரவின.இதையடுத்து, கட்சி பதிவு முகவரியான, எர்ணாவூர் பாலாஜி நகரில், பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர் நேற்று குவிந்தனர். கட்சியைப் பதிவு செய்த, அந்தோணி ராஜா என்ற, ஸ்டாலின் ராஜா அங்கு இல்லை; அவரது வீடு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. கட்சிப் பதிவில் உள்ள அவரது மொபைல் போன் எண்ணும், தொடர்பு கிடைக்காத வகையில், முடக்கி வைக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் நெருக்கம்
சென்னை மணலி மற்றும் எண்ணுாரில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில், ஸ்டாலின் ராஜா கான்ட்ராக்டராக செயல்பட்டு வந்துள்ளார். அப்போது, எர்ணாவூர் பாலாஜி நகரில் வசித்துள்ளார்; அந்த முகவரியில் தான் கட்சியைப் பதிவு செய்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில அரசியல் பிரமுகரின் மகளை திருமணம் செய்துள்ள ஸ்டாலின் ராஜா, ரஜினி மக்கள் மன்றத்தில், துாத்துக்குடி மாவட்டச் செயலராக உள்ளார்.
ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவுக்கு, மிகவும் நெருக்கமானவர். அவரது பல்வேறு தொழில் நிறுவனங்களையும், இவர் தான் கவனித்து வருகிறார் என, அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர். 'மன்றத்தின் மாவட்டச் செயலராகவும், தங்கள் குடும்பத்தினருடன் நெருக்கமாகவும் உள்ளவர் என்பதால், அவர் பதிவு செய்து வைத்திருந்த, மக்கள் சேவை கட்சியை, ரஜினி தேர்வு செய்திருக்கலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற சூழல் ஏற்படலாம் என்பதால், ரஜினியின் அண்ணன் ஆலோசனைப்படி, ஸ்டாலின் ராஜா, கட்சியை பதிவு வைத்திருக்கலாம்' என்றும் கூறப்படுகிறது. புதிய கட்சி துவங்குதல், பதிவு செய்தல் போன்றவற்றில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அரசியல் நிபுணர்கள் அறிவுரைப்படி, ஏற்கனவே பதிவு செய்திருந்த கட்சியில், நிர்வாகத்தை மாற்றி, ரஜினி தரப்பினர் தேர்தல் ஆணைய ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
'காத்திருங்கள்!'
'மக்கள் சேவை கட்சி தான் ரஜினியின் கட்சி; ஆட்டோ தான் அவரது சின்னம்' என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், ரஜினி மக்கள் மன்றம் இதை மறுக்கவில்லை; அதே நேரம், முறையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்கும்படி, ரசிகர்களை அறிவுறுத்தி உள்ளது.இது தொடர்பாக, ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் நேற்று வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையை மேற்கோள்காட்டி, அதில் இடம் பெற்றிருந்த ஒரு கட்சியின் பெயரும், சின்னமும், ரஜினி மக்கள் மன்றத்தினுடையது என, சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.தலைமையில் இருந்து, அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் வரை, நம் ரஜினி மக்கள் மன்ற காவலர்கள், காத்திருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.வரும், 31ல் கட்சி துவங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடும்போது, இது பற்றிய அனைத்து விவரங்களும் வெளியாகும்.
No comments:
Post a Comment