Saturday, December 5, 2020

சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றலாம்!

 ரேஷன் கடைகளில், இலவச அரிசி பெறும் வகையில், சர்க்கரை கார்டு வைத்திருப்போர், அதை, அரிசி கார்டாக மாற்றம் செய்ய, வரும், 20ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில், 2.09 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 2.02 கோடி அரிசி; 5.80 லட்சம் சர்க்கரை கார்டுகள். மீதி உள்ளவை, எந்த பொருளும் வாங்காத, ‛என்' கார்டுகள். ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, இலவச அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. சர்க்கரை கார்டுதாரர்களுக்கு, அரிசி தவிர்த்து, மற்ற பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும், அரிசி கார்டுதாரர்களுக்கு, அரசின் இலவச திட்டங்கள் மட்டுமின்றி, 1,000 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நிலையில், கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, ஏப்ரலில், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. இதனால், சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களையும் அரிசி வகைக்கு மாற்றம் செய்யுமாறு, தமிழக அரசுக்கு, கோரிக்கை விடுத்து வருகின்றனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் சலுகைகள் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தற்போது, சர்க்கரை கார்டுதாரர்கள், அரிசி வகைக்கு மாற, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அமைச்சர் காமராஜ், நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பொது வினியோக திட்டத்தில், தற்போது, 5.80 லட்சம் சர்க்கரை கார்டுகள் உள்ளன. அவற்றை வைத்திருப்போரில் பெரும்பாலானோர், அரிசி பெறும் கார்டாக மாற்றம் செய்து தர வேண்டும் என்று, கோரிக்கை விடுத்து வந்தனர். அதை ஏற்று, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

சர்க்கரை கார்டுதாரர்கள், தங்களின் கார்டை, அரிசி கார்டாக மாற்றம் செய்ய விரும்பினால், அதற்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன், தங்களுடைய ரேஷன் கார்டின் நகலை இணைத்து, இன்று முதல், வரும், 20ம் தேதி வரை, 'www.tnpds.gov.in' என்ற இணையதள முகவரியிலும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அதிகாரிகள், உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம்.அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள், உடனே பரிசீலனை செய்யப்பட்டு, சர்க்கரை கார்டுகள், தகுதியின் அடிப்படையில், அரிசி கார்டாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



4.50 லட்சம் பேர் பயன்!



தமிழகத்தில், 2019 அக்., நிலவரப்படி, 10.19 லட்சம் சர்க்கரை கார்டுகள் இருந்தன. அதில், விருப்பம் உள்ளவர்களிடம், அந்த ஆண்டு நவ., இறுதியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 4.51 லட்சம் கார்டுகள், அரிசி வகைக்கு மாற்றப்பட்டன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...