தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, நடிகர் ரஜினியை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியும், கட்சி துவக்கி, நெருக்கடி கொடுக்க உள்ளார் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:நடிகர் ரஜினி கட்சி துவக்கினால், ஆளுங்கட்சிக்கு எதிரான ஓட்டுகள், தி.மு.க., பக்கம் செல்லாமல், ரஜினி பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது. தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஓட்டு சதவீதம் குறைந்தால், தேர்தலில், பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சி அமைப்பது தடுக்கப்படும். இதனால், ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாது.
ரஜினியை தொடர்ந்து, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியும், கட்சி துவக்க உள்ளார். விரைவில், டில்லிக்கு தன் ஆதரவாளர்களை அனுப்பி, தேர்தல் கமிஷனில் கட்சி பெயரை பதிவு செய்வதற்குரிய பணிகளில் ஈடுபட உள்ளார். இம்மாத இறுதிக்குள், கட்சி துவக்கும் அறிவிப்பை அழகிரியும் வெளியிடுவார். இதற்காக, அவர் தன் ஆதரவாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
தன் ஆதரவாளர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்க துவங்கி உள்ளார். ரஜினியை தொடர்ந்து, அழகிரியும் கட்சி துவக்கினால், இருவரும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. எனவே, தி.மு.க.,விலிருந்து ஓரங்கட்டி வைக்கப் பட்டவர்களையும், அதிருப்தியில் இருப்பவர் களையும், ஸ்டாலின் சந்தித்து பேச துவங்கி விட்டார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக, சேலத்தில் நடந்த கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற ஸ்டாலின், ஈரோடு மாவட்ட அதிருப்தியாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கே.பி.ராஜாவை சந்தித்து பேசினார். சேலம் மண், வீரபாண்டி ஆறுமுகம் மண் என, புகழ்ந்து பேசி, வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதர வாளர்களை ஸ்டாலின் அரவணைக்க துவங்கி உள்ளார்.
தி.மு.க., மகளிர் அணி செயலர் கனிமொழிக்கு, தென் மண்டல அமைப்பு செயலர் பதவி வழங்க வில்லை என்ற அதிருப்தி, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் உள்ளது. பெண்களின் ஓட்டுகள் ரஜினி கட்சிக்கு செல்ல விடாமல் தடுப்பதற்காகவும், பெண்களின் மீது, கனிமொழிக்கு உள்ள ஈர்ப்பை, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்திக் கொள்ளவும், அவருக்கு முக்கியத்துவம் வழங்கப்பட உள்ளது.
தொடர்ந்து கோவை, கிருஷ்ணகிரியில் அதிருப்தியிலும், கட்சியிலிருந்து ஒதுங்கியிருக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலரை ஸ்டாலின் நேரில் சந்தித்து, அவர்களின் அதிருப்தியை களைந்து, உற்சாகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment