Saturday, January 2, 2021

பெண்ணின் கேள்வியால் ஸ்டாலின் கூட்டத்தில் சலசலப்பு.

 தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடத்திய, மக்கள் கிராம சபை கூட்டத்தில், நேற்று திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கோவை பெண் கேட்ட கேள்வியால், கடும் கோபம் அடைந்த ஸ்டாலின், 'அ.தி.மு.க., அனுப்பிய ஆள் நீ' என, சாடினார். அங்கிருந்த தி.மு.க.,வினர், அப்பெண்ணை சூழ்ந்து தாக்கியதால், வன்முறையை தடுக்க, போலீசார் களமிறங்கினர்.

ஆத்திரமடைந்த ஸ்டாலின், ''உங்கள் கொட்டத்தை நிறுத்துங்கள்; இல்லையேல், அ.தி.மு.க.,வினரால், எந்த கூட்டத்தையும் நடத்த விடமாட்டோம்,'' என, சவால் விட்டார். 'மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், அ.தி.மு.க.,வை குற்றம் சொல்வதா' என, ஆளும் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.


latest tamil news



கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் அருகே, தேவராயபுரம் ஊராட்சி, பரமேஸ்வரன் பாளையம், கொங்கு திருப்பதி கோவில் எதிரே உள்ள மைதானத்தில், தி.மு.க., சார்பில், மக்கள் கிராம சபை கூட்டம், நேற்று நடந்தது. ஸ்டாலின் பேசுகையில், ''இங்கு வந்திருக்கும் அனைவரும் பேசுவதாக இருந்தால், 10 நாட்களாகி விடும். நாங்களே, 10 பேரை தேர்வு செய்திருக்கிறோம். ஒவ்வொருவராக அழைக்கிறேன்; சுருக்கமாக பேசுங்கள்,'' என்றார்.

என்ன பேச வேண்டும் என, ஏற்கனவே சொல்லிக் கொடுத்ததை, ஒவ்வொருவராக ஒப்பித்தனர். ஆறாவதாக, ஒருவரை அழைத்த போது, ஸ்டாலின் முன், தரையில் அமர்ந்திருந்த ஒரு பெண் எழுந்து, 'என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். எதற்காக, கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்' என, கேள்வி எழுப்பினார். அதனால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


latest tamil news



அருகில் அமர்ந்திருந்த கட்சியினர் எழுந்து, அவரை சூழ்ந்தனர்.அந்த பெண்ணை பார்த்து,''எங்கிருந்து வருகிறீர்கள்,'' என, ஸ்டாலின் கேட்டார்.'மைல்கல்' என, பதிலளித்ததும், 'இந்த ஊராட்சியா' என, மீண்டும் ஸ்டாலின் கேட்க, 'அதெல்லாம் தெரியாமல், எதற்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள்' என, அப்பெண் கேட்டார். கட்சியினர் ஆவேசமடைந்து, ஸ்டாலின் முன்னிலையிலேயே, அவரை தாக்க முயன்றனர்; கையை பிடித்து இழுக்க முயன்றனர்.
அதை கவனித்த ஸ்டாலின், ''யாரும் கை வைக்காதீங்க,'' என, கட்சியினரை கட்டுப்படுத்தி விட்டு, ''அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள்... மேடம், உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. கூட்டத்தை விட்டு, வெளியே போங்க... போலீஸ் வரட்டும்,'' என்றார்.


latest tamil news




கட்சியினரே, அப்பெண்ணை அழைத்து சென்று, அரங்கிற்கு வெளியே அனுப்பினர். அப்போது, 'கொரோனா பரவிய காலத்தில், எங்கே போனீர்கள்; இப்போது, கிராம சபை கூட்டம் நடத்துவது ஏன்' என, அப்பெண் கோஷமிட்டவாறு சென்றார். போலீசார் அழைத்து சென்றபோது, தகாத வார்த்தைகளால் வசைபாடிய கட்சியினர், அவரை தாக்கினர். போலீசாருக்கும், அப்பெண்ணுக்கும், உடன் வந்த இன்னொருவருக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸ் ஜீப்பில் ஏற்றிய பின்னரும், கட்சிக்காரர் ஒருவர், காலால் எட்டி உதைத்தார்.போலீஸ் விசாரணையில், அப்பெண்ணின் பெயர் பூங்கொடி, உடன் வந்தவர் ராஜன் என்பது தெரிந்தது. அவர்களை, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர். பின், கோவை அரசு மருத்துவமனையில், அப்பெண் அனுமதிக்கப்பட்டார்.


'கொட்டத்தை அடக்குங்கள்'



கூட்டத்தில், ஸ்டாலின் பேசியதாவது: எனக்கு நேற்றே தெரியும். கூட்டம் நடக்காமல் தடுக்க, திட்டமிட்டு, இக்காரியத்தை செய்திருக்கின்றனர். நீங்கள் நடத்தும், எந்த கூட்டத்தையும், நாங்களும் நடத்த விட மாட்டோம். கட்டுப்பாடான இயக்கம் என்பதால், எந்த பிரச்னையுமின்றி, அனுப்பி வைத்திருக்கிறோம். அமைச்சர் வேலுமணி அவர்களே... இதோடு உங்கள் கொட்டத்தை அடக்குங்கள். இதுமாதிரி நடந்தால், நீங்கள் மட்டுமல்ல; உங்கள் முதல்வரும் எங்கும் கூட்டம் நடத்த முடியாது. நாங்கள் இறங்கினால், என்னாகும் என, எங்களுக்கு தெரியும். இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.நாளைக்கு நீங்கள் கூட்டம் போடுகிறீர்களே; நடிகை கூட்டிட்டு வர்றீங்க; 'ரிக்கார்டு டான்ஸ்' போடுவீங்க. அது, உங்கள் பண்பாடு; கலாசாரம்; நடத்துங்க; வேண்டாமென சொல்லலை.

இந்த கூட்டத்தில், தி.மு.க., தொப்பியை அணிந்து ஏன் வரணும்; தைரியமிருந்தால், அ.தி.மு.க., என சொல்லிட்டு உட்கார்ந்திருக்கணும். தி.மு.க., என கூறி அமர்ந்திருப்பது, கலவரத்தை ஏற்படுத்துவதற்கானமுயற்சி.இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.


கே.பி.முனுசாமி பதிலடி



latest tamil news



இதற்கு பதிலளித்த, அ.தி.மு.க., துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், ''இதுபோன்ற கூட்டங்களில், மக்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தான், ஸ்டாலின் கேட்க வேண்டும்; அவர்களின் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல வேண்டும்.
''அதை செய்ய முடியாத ஸ்டாலின், ஆளும் கட்சி வேலை என்பதும், கூட்டம் நடத்த விட மாட்டோம் என எச்சரிப்பதும் ஏன்,'' என, கேள்வி எழுப்பியுள்ளார்.


சாலை மறியல்


ஸ்டாலினை எதிர்த்து கேள்வி கேட்ட பெண்ணை, தி.மு.க.,வினர் தாக்கிய தகவல் அறிந்ததும், தொண்டாமுத்துாரில், அ.தி.மு.க.,வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போலீசார் தடுத்து, அவர்களை கைது செய்தனர். இத்தகவல், மக்கள் கிராம சபை கூட்டம் நடந்த இடத்துக்கு தெரிய வந்தது. ஸ்டாலின் செல்லும் வாகனத்தை மறிக்க, அ.தி.மு.க.,வினர் திட்டமிட்டு, தொண்டாமுத்துாரில் சாலை மறியல் செய்வதாக, 'மைக்'கில் அறிவிக்கப்பட்டது. இதனால், தி.மு.க.,வினரும் மறியல் போராட்டத்தில் இறங்க, போலீசார் கைது செய்து, தனியார் கல்யாண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


'கெடுதல் வந்திடும்'



ஸ்டாலின் மேலும் பேசுகையில், ''பத்திரிகை நிருபர்கள், தொலைக்காட்சி நிருபர்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்பவாவது, செய்தி போடுவர் என நினைக்கிறேன். 'இதுதான் நல்ல நிகழ்ச்சி. மக்களுக்கான நிகழ்ச்சி' என, நிற்கிறீர்கள். அமைச்சர் வேலுமணி பற்றி, செய்தி வெளியிடுங்கள். இல்லேன்னா, உங்களுக்கு கெடுதல் வந்துடும். ஏன்னா, நீங்கள் செய்தி போட்டாலும், போடாவிட்டாலும், சமூக வலைதளங்களில் வரப் போகுது,'' என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...