தொகுதி ஒதுக்கீடு, தனிச் சின்னம் தொடர்பாக, தி.மு.க., கூட்டணிக் கட்சிகளிடம் கலகக்குரல் எழுந்துள்ளது.தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க., ஏற்கனவே பலமுறை, 'உள்ளே வெளியே' ஆட்டம் நடத்தியிருக்கிறது. சட்டசபையில் பிரதிநிதித்துவம் இல்லாத அக்கட்சி, தன் அங்கீகாரத்தை காப்பாற்ற, வரும் தேர்தலில், 15க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறது.
ஆனால், தி.மு.க., மேலிடத்தில் இருந்து, சாதகமான பதில் வரவில்லை என, தெரிகிறது. இதனால், வைகோ அதிருப்தி அடைந்துள்ளார். இதுகுறித்து, ம.தி.மு.க., மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
எங்களது நியமன கோரிக்கைக்கு, தி.மு.க.,விடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால், வைகோவுக்கு ரொம்பவே வருத்தம். மற்றவர்கள் ஆட்சியமைக்க, ஏணியாக இருக்கும் நாங்கள், எங்கள் கட்சியின் அங்கீகாரத்தையும் காப்பாற்ற வேண்டும். இதை புரிந்து கொள்ளாமல், எங்களை கறிவேப்பிலையாக பயன்படுத்தினால் எப்படி?
முன்னர், இதேபோல் எங்களின் கோரிக்கையை ஏற்காமல் இழுத்தடித்து, கடைசி நேரத்தில், தி.மு.க., கைவிட்டுள்ளது. இந்த கசப்பான அனுபவம், மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை, வைகோ சந்தித்து பேசியது, தி.மு.க., மேலிடத்திற்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.ம.தி.மு.க.,வை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், அங்கீகாரத்தை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தொகுதி பங்கீட்டில், இரட்டை இலக்க எண்ணை வலியுறுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க., மேலிடம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை.இதுகுறித்து, அக்கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், 'தி.மு.க., எங்களுக்கு எஜமானராக இருக்க விரும்பலாம். ஆனால், நாங்கள் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை. எங்களை உதாசீனப்படுத்தினால், தி.மு.க.,வுக்கு தான் இழப்பு' என்றார்.
'தி.மு.க., கூட்டணியில், ஆறு தொகுதிகளில், தனிச் சின்னத்தில் போட்டியிட உறுதி அளித்தால், கூட்டணியில் இருப்போம். இல்லையென்றால், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி' என, பாரிவேந்தரின், இந்திய ஜனநாயக கட்சியும் போர்க்கொடி துாக்கி உள்ளது.காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும், குறைந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய, தி.மு.க., திட்டமிட்டிருப்பதால், அக்கட்சிகளும் குழப்பத்தில் உள்ளன.எனவே, தொகுதி பங்கீடு எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வமாக, தி.மு.க., அறிவிக்கும் வரை காத்திருக்க கூடாது. முன்கூட்டியே பேசி முடிவெடுக்க வேண்டும் என, கூட்டணிக் கட்சிகள் குரல் கொடுக்கத் துவங்கி விட்டன.
No comments:
Post a Comment