இன்று சகல சௌபாக்கியகளையும், மாங்கல்ய பலத்தையும் பெருக்கித் தரும் ஆடிப்பெருக்கு!
சிறப்பு: ஆடிப்பெருக்கு
(ஆடி 18, ஆக 3/8/2021)
இன்று பிலவ வருடம் செவ்வாய்க்கிழமை மாங்கல்ய பலத்தை நிலைக்க செய்யும் ஆடி பதினெட்டாம் பெருக்கு விழா.ஆடிப்பெருக்கு அன்று செய்யும் எந்த ஒரு காரியமும் பன்மடங்கு பெருகும் என்பது நியதி.
ஆடிப்பெருக்கன்று செய்யும் செயல்கள் பல்கி பெருகும் என்பது ஐதீகம். அன்றைய தினம் அனைவரும் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கலாம். தங்கம், வெள்ளி வாங்கலாம். மஞ்சள், கல் உப்பு வாங்கலாம் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.
மாங்கல்ய பலத்தை நிலைக்க செய்யும் ஆடி பதினெட்டாம் பெருக்கு திருமாங்கல்யத்தை மாற்றிக் கொள்வதற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இன்று அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வீட்டில் வழிபடுவது மிகவும் விசேஷம். கோவிலுக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்து விட்டு வருவதும் வீட்டில் சுபீட்சத்தை நிலைநாட்ட செய்யும்.
எந்த பொருளை இந்த நாளில் புதிதாக வாங்கினாலும் அது மேலும் மேலும் நீங்கள் வாங்க கூடிய யோகம் பெருகி வரும் என்பதைக் குறிப்பது தான் ஆடிப்பெருக்கு.
காவிரி தாயின் மடியில் குடும்பத்துடன் சென்று நீராடி பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து குடும்ப நன்மைக்காகவும், வியாபாரம், தொழில் செழிப்புடன் இருக்கவும் வணங்கி வழிபடுவது வழக்கம்.
வீட்டிலேயே காவிரி தாயாக பாவித்து பித்தளை அல்லது செம்பு கலசம் ஒன்றில் தண்ணீரை வைத்து அதில் பச்சை கற்பூரம், மஞ்சள் தூள், துளசி இலைகள், ஏலக்காய் சேர்த்து தீர்த்தம் வைக்க வேண்டும்.
எல்லாவற்றையும் தயார் செய்து வைத்த பின் ஐந்து முக குத்து விளக்கில் நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இலையில் அகல் விளக்கு வைத்து நெய் தீபம் ஏற்றுங்கள். தாலி சரடு மாற்றிக் கொள்ள நினைப்பவர்கள் நல்ல நேரம் பார்த்து அன்றைய நாளில் தாலி சரடை மாற்றிக் கொள்வது வழக்கம். அப்படி அல்லாதவர்கள் மஞ்சள் கயிறை கட்டிக் கொண்டு மாங்கல்ய பலம் நிலைக்க தங்கள் தங்க சரட்டை அந்த இலையில் வைத்து தீர்த்தம் தெளித்து பூஜை முடிந்த பின் அணிந்து கொள்வார்கள். பூஜைகள் முடிந்த உடன் குடும்பத்துடன் அமர்ந்து நைவேத்தியங்கள், காப்பரிசி, ஆடிப் பால் ஆகியவற்றை பகிர்ந்து உண்ணக் கொடுக்க வேண்டும்.
இந்நாளில் அம்பாளுக்கு உரிய மந்திரங்கள் வாசிப்பது அல்லது ஒலிக்க விடுவது மிகவும் முக்கியம். ஆடி பதினெட்டாம் பெருக்கு வீட்டிலேயே எளிமையாக இப்படி முறையாக கொண்டாடி அனைவரும் பலன் பெறலாம்!
No comments:
Post a Comment