Saturday, August 21, 2021

“எப்படிப்பா” ..

 அது ஒரு ஞாயிறு மதியம், குடும்பமாக சாப்பிட்டு முடித்திருந்தோம். அவியல், எலுமிச்சம்பழம் ரசம் ஸ்பெஷல்.

பிள்ளையிடம் டிவி ரிமோட் மாட்டிக்கொண்டிருந்தது. டோராவோ, தலைவா ஜாக்கியோ அலறிக்கொண்டிருந்தது.
பெண் சமர்த்தாக போனை நோண்டிக்கொண்டிருந்தாள்.
மனைவி பேஸ்புக்கில் அவியல் போட்டோ போட்டு பாராட்டுக்களை அள்ளிக்கொண்டிருந்தாள். ஒருத்தி போனில் கூப்பிட்டு ரெசிபி கேட்டுக்கொண்டிருந்தாள்.
என் பெயர் அடிபடுகிறதா என்று காதை தீட்டிவைத்துக்கொண்டேன், ம்ஹூம். மறந்தும் சொல்லவில்லை.. எல்லா புகழும் இறைவனுக்கே.. எல்லா பாராட்டும் அவளுக்கே..
என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா..சொல்கிறேன்..காலையில் மார்க்கெட்டுக்கு ஓடி, அவியல் காய்களை தேடி (லிஸ்ட் மேலிடம்), அலம்பி.. ஒரு மணிநேரம் நறுக்கி அழகாக எடுத்து வைத்தால்.. அன்னபூரணி அடுப்பை ஏற்றுவாள்….
“ஹஸ்பண்டா..” ..போனில் மனைவி….நண்பி கேட்டிருப்பாள் போலே.. கூர்மையானேன்
“சே சே…அவருக்கெங்கே இதுக்கெல்லாம் டைம் இருக்கப்போகுது..”… பஞ்சரானேன்…நெல்லுக்கு பாய்ந்தது கொஞ்சம் புல்லுக்கு…ம்ம்ஹூம்..
விளம்பர இடைவெளி, பிள்ளை சேனல் மாற்றிக்கொண்டிருந்தான்..
புலி முருகன் ட்ரைலர் – மோகன்லால் தன் எண்பத்தைந்து கிலோ உடலை எப்படியோ தூக்கி ஒரு பல்டி அடித்துக்கொண்டிருந்தார்..
ரசித்துப்பார்த்து கொண்டிருந்தவன்..”அப்பா, புலிய ஈஸியா அடக்கலாமா”.. கேட்டான்..
“உங்கம்மாவை அடக்கறதை விட ஒன்னும் கஷ்டமில்லை…” சொல்வேனா..சொல்லியிருந்தால் கதை எழுத கை இருக்குமா..
“புலி வேட்டையை விட எலி வேட்டை கஷ்டம்டா” சொல்லி வைத்தேன்..
“உனக்கெப்படி தெரியும்..நீ புலிவேட்டைக்கு போயிருக்கியா?”
“ஹஹஹஹ” பின்னால் சிரிப்பு சப்தம்…போன் பேசி முடித்தாகிவிட்டது..
“இல்லை”
“அப்போ எலி வேட்டை?” ..விடமாட்டான்..
“ம்ம்”
“எப்போ”
“எனக்கு ஒரு 12 -13 வயசிருக்கும்..”
“காட்லயாப்பா”
“ஹஹஹஹ” வேதாளம் மீண்டும் எள்ளி நகையாடியது..இருக்கட்டும்…வச்சிக்கறேன்..
“இல்லடா வீட்லே”..
“இப்போ இருக்கோமே இந்த வீடாப்பா?”
“இல்லடா..இங்க எலியே கிடையாது..”
“எப்படிப்பா “..
காளியை கேலி செய்ய துணிந்தேன்..”ஒரு நாள் உங்கம்மா பண்ண வடையை எலி சாப்ட்டுச்சா…ரோடுக்கு ஓடி போய் லாரிக்கு அடியில தலையை வெச்சு சூசைட் பண்ணிக்கிச்சி…ஹா ஹா ஹா..” நான் மட்டும் சிரித்துவைத்தேன்..
சாயந்தரம் லேஸ் பாக்கெட் கட்டாகாமல் தப்பிக்க பையன் சிரிக்கவில்லை …பிழைத்துக்கொள்வான்..
எனது நக்கல் மன்னிக்கப்பட்டது (அ) அலட்சியப்படுத்தப்பட்டது….தெய்வ சங்கல்பம்…
பாதி பிட்ச்ச்சுக்கு ஓடி வந்து திருப்பி விரட்டப்பட்ட பேட்ஸ்மேன் போல பிள்ளை முறைத்தேன்.. அவன் அசரவில்லை ..
“மேல சொல்லுப்பா..எந்த வீட்ல, நீ ஸ்கூல் படிச்ச மயிலாப்பூர் வீடா”.. எலி வேட்டையை பற்றி ஆர்வம் அதிகரித்திருந்தான்
“ஆமாண்டா ..” வாட்ஸாப்ப்ல் ஏதாவது வந்திருக்கான்னு பார்க்க போனை எடுத்தேன்…
உடனே பறிக்கப்பட்டது.. “ஒரு நாள் குழந்தையோட பேசறது. போன் எங்கயும் ஓடி போகாது”…
“குழந்தை ஓடிப்போயிடுவானா” …கேட்கவில்லை ..
மனைவி போனை நோண்ட ஆரம்பித்துவிட்டாள்..ஏதும் விவகாரமாக வந்திருக்க கூடாது…முழுசா படிச்சுட்டு …சீய் என்ன மாதிரி உருப்படாத பிரண்ட்ஸுன்னு தனியா ஒரு பாட்டு கிடைக்கும்..
“சொல்லுப்பா. எப்படி எலிய வேட்டையாடணும். என்ன வெப்பன்ஸ் தேவை?” அவன் ஜோலி அவனுக்கு..
“தொடப்பக்கட்டை”.. நான் சொல்லவில்லை.. அசரீரி…போனுல ஒரு கண்ணு என் மேல ஒண்ணு..உதட்டில் ஒரு புன்னகை…
“அப்படியாப்பா”..
“ஆமாண்டா” உண்மையில் அதுதான் என் ஆயுதம்..
“நீ இப்படி பிட்டு பிட்டா சொன்ன எனக்கு கோவம் வரும்.புல்லா சொல்லு..”
“ப்ளீஸ் சொல்லுப்பா.. எனக்கும் கேக்க ஆசையா இருக்கு”…பெண்ணும் சேர்ந்து கொண்டுவிட்டாள்..குரூப் சாட் முடிந்துவிட்டது போலும் ..
“சரி சொல்றேன். அப்போல்லாம் நாங்க இருந்த அந்த சின்ன வீட்ல ஒரு 15 -20 எலியும் இருக்கும்.”
“டெய்லி அட்டெண்டன்ஸ் எடுப்பியா..எப்படி கரெக்டா சொல்ற?”
முறைத்தேன்.. “மீதி கதை வேணுமா வேணாமா?”
“சரி சரி கோச்சுக்காத சொல்லுப்பா. எங்கெல்லாம் எலி இருக்கும்”..
“இது கேள்வி..பழைய பெட்டி, பீரோ பின்னாடி, அட்ட டப்பா, அலமாரி, அட்டாலி ன்னு எல்லா இடத்துலயும் இருக்கும்.”
“ஓஹோ. அப்போ இடம் தான் தெரியுமே, ஈஸியா பிடிச்சுடுவியா?”
“அதான் சிக்கல். நாம போய் தேடும் போது எலி மாட்டாது..”
“அப்புறம் எப்படி எலிய பிடிக்கறது..”
“பிடிக்கறது இல்ல அடிக்கறது..”
“அதான் எப்படி”..
“அதுக்குதான் எப்பவும் அலெர்ட்டா இருக்கணும்”
“அம்மா மாதிரியா”..
“சும்மார்ரா, நீ சொல்லுப்பா..”இது பெண்..
“நாங்க லைட்டை அணைச்சுட்டு டிவி பாக்கறச்சயோ, தூங்கறச்சேயோ கரக் கரக் னு சத்தம் கேட்கும். எலி எதையோ கடிச்சிண்டிருக்குன்னு அர்த்தம். உடனே நான் என்ன பண்ணுவேன், டக்குனு ரூம் கதவை சாத்திட்டு லைட்ட போட்டுட்டு ஆயுதத்தை எடுப்பேன்.. ”
“தொடப்பம் தானே ”
“ஆமாண்டா, மேல கேளு…ஒரு கைல தொடப்பம், இன்னொரு கையில ஒரு கொம்பு வெச்சு டிவி பின்னாடி, பீரோ பின்னாடி எல்லாம் தட்டுவேன். எலி பயந்து ஓடும். அப்போ அதை கார்னர் பண்ணனும்”…
“கார்னர்னா ”
“அதாண்டா அப்பா பிரண்ட்ஸ் வர்ற அன்னைக்கு அம்மா பட்டுப்புடவை வாங்கி தந்தாதான் டிபன் பண்ணுவேன்னு மெரட்டுவாளே” பெண் வளர்ந்துவிட்டாள்..லைவ் எக்ஸாம்பிள்..
ஏழு வயது குழந்தைக்கு புரியவில்லை முப்பத்தி நாலு வயது (…மூணு தான், எங்கம்மா ஸ்கூலை சேக்க தேதிய மாத்தி குடுத்தான்னு எத்தனை வாட்டி சொல்றது..) குழந்தைக்கு கொஞ்சம் புரிந்திருக்கும் ..அப்பாடி, எல்லாம் நன்மைக்கே..
“டாம் அண்ட் ஜெர்ரில அந்த டாம் ஜெர்ரிய தொரத்தி மூணு பக்கமும் செவுரா இருக்கற இடத்துல ஓட முடியாம நிறுத்துமே, அந்த மாதிரி பண்றதுக்கு பேர்தான் கார்னர் பண்றது..அப்போ விளக்குமாறால ஓங்கி அடிக்கணும்..நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா எலி மேல விழும், இல்லாட்டி எஸ்கேப் ஆகிடும்..”
“அப்போ நீ அடிச்சது ஜெர்ரி யோட அப்பாவையா?” குரலில் உஷ்ணம்..
ரூட் மாற ஆரம்பித்துவிட்டது..
“இல்லடா, அது அமெரிக்கால இல்ல இருக்கு. இது வேற எலி” உடனே சமாதானமானான்…
“இது மாதிரி எத்தனை எலிய அடிச்சேப்பா”
“ஒரு 50 -60 எலி இருக்கும்..”
“எப்படிப்பா மொத்தமே 15 -20 தானே இருக்கும்னு சொன்ன, இப்போ அம்பதுன்னு சொல்ற”..
“டூப் மாஸ்டர், அப்படிதான் சொல்லும்..” மீண்டும் அசரீரி..
“நீ சும்மாரும்மா.. எப்பப்பாரு தொண தொணன்னு.. நீ சொல்லுப்பா..”..கொடுத்து வைத்தவர்கள் ..எதுவும் சொல்லலாம், விபரீதமாகாது.. .நமக்குத்தான் பாக்கியமில்லை..
“நீ வேணா உங்க அத்தைக்கு போன் போட்டு கேளு..நிஜமா பொய்யான்னு”
“நான் நம்பறேன்பா, ஆனா 20 எலி எப்படி 50 ஆகும்?”
“ரெண்டு பேரா இருந்த நம்ம குடும்பம் நாலு பேரா ஆகலையா, அப்படிதான்..”
பெண்ணுக்கு புரிந்து விட்டது..பையன் குழம்பிக்கொண்டிருந்தான்..
“எப்படிப்பா” ..
வீட்டின் சூப்பர்ஸ்டார் வரவேண்டிய நேரத்துக்கு சரியாக வந்தாள்..
“டேய் ஹரி, மேத்ஸ் ஹோம் ஒர்க் பாதிதான் செஞ்சிருக்க. போய் மீதியை முடி, அப்பாவுக்கு சண்டே ஒரு நாள்தான் லீவு, ரெஸ்ட் எடுக்கட்டும். நொய் நொய்னு தொந்தரவு பண்ணாதே..”
“லலிதா.. உனக்கு தனியா சொல்லணுமா, போ அடுத்த வாரம் மிட் டேர்ம் டெஸ்ட் வர்றதோன்னோ, போய் படி”.. ரெண்டு பேரையும் பெயர்த்துவிட்டாள்..
ஐயையோ..எலி அம்மணமா ஓடுதே… மனசுக்குள் பகீர்..புது வளையலா..தோடா…முருகா காப்பாத்து..
பக்கத்தில் வந்து சோபாவில் அமர்ந்தாள், மெல்ல மேலே சாய்ந்து..”நீங்க நெஜமாவே இப்படி எலிய வெரட்டிருக்கீங்களா?”
மண்டையில் பல்பு எரிய ஆரம்பித்தது…இனி பின் வாங்க முடியுமா..”ஆமாண்டி (இப்போ டி போடலாம், ஆபத்தில்லை), நிஜம்தான்”..
“வந்து ஒண்ணு கேப்பேன் ..நீங்க கோவிச்சுக்கக்கூடாது..”
பல்புடன் சேர்ந்து மணியும் அடிக்க ஆரம்பித்தது..
“என்ன சொல்லு ”
“எங்க அக்கா ரம்யா ஆத்துல நிறைய எலி தொல்லையா இருக்காம். அடுத்த வாரம் உங்களுக்கு ரெண்டு நாள் லீவு வருதோன்னோ? நாம அங்க போவோமா?”
“அப்பா இப்போ நீ கார்னர்” ..ரூமிலிருந்து எட்டி பார்த்து லலிதா சிரித்தாள்......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...