வாசனை, மணம், வாடை, நாற்றம்.
அந்தக்காலத்தில் நாற்றம் என்பது நறுமணத்தைக் குறிக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது.
*நாற்றமிலாதமலரினழகின்னாதேற்றமிலாதான் றுணிவின்னா வாங்கின்னா*
கபிலர் எழுதிய, இன்னா நாற்பது பாடலில் வரும். இதில் நாற்றம் என்பது நல்ல வாசனையாகவே கருதப்படுகிறது.
வாடை வாழ்வின் மிக முக்கிய ஒரு அங்கமாக இருப்பதை பலர் உணர்வதில்லை. தன் மனம் சிலாகித்துப் போவதற்கு, பிறரை கவர்வதற்கு, இன்ப உணர்வை பெறுவதற்கு, உடல் ஆரோக்கியத்திற்கு, விருப்பமொடு உணவு உண்பதற்கு, நோயற்று வாழ்வதற்கு இப்படி பல வகையில் நாசி வழியே செல்லக்கூடிய மணம் பயன்படுகிறது.
நாற்றத்தின் பெருமை உணர்ந்தே வள்ளுவரும் இவ்வாறு கூறியுள்ளார்.
*முகைமொக்குள் உள்ளதுநாற்றம்போல்பேதைநகைமொக்குள் உள்ளதுஒன்று உண்டு*
எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நான் எனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு குடும்பத்துடன் வந்து உள்ளேன். சொந்த ஊரின் பெருமையை பற்றி இன்னொரு தளத்தில் காண்போம்.
பத்து வருடம் முன்பு எனக்கு கால் அடிபட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதம் படுக்கையில் இருக்க வேண்டிய நிலைமை அப்போதும் எனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு வந்துவிட்டேன். எனக்கு மகாதான தெருவில்(மயிலாடுதுறையின் முக்கிய வீதி) சொந்த வீடு இருக்கிறது. ஆயினும் தையல்நாயகி என்று ஒருவள் எங்கள் மீது மிகவும் பற்றுக் கொண்டவள். அம்மா நான் சத்துணவு வேலைக்கு போறேன் என்னால அவ்வளவு தூரம் வர முடியாது. ஆனா நிச்சயமா உங்கள நான் நடக்க வைத்து விடுவேன் என்று மருத்துவமனையில் என்னை பார்த்து கண்ணீர் விட்டு அழுதாள்.
அவள் வீடு இருக்கக்கூடிய இடத்திற்கு சற்று அருகில் நல்ல வீடாக வாடகைக்கு பார்த்து அங்கு குடி போனோம் தையல்நாயகி சொன்னதுபோல ஆறுமாதம், ஒரு குழந்தையாய் என்னைப் பார்த்துக்கொண்டாள். நான் நடப்பதற்கு முக்கிய காரணம் மயிலாடுதுறை மருத்துவர் திரு ராஜசேகரன் அவர்கள்.
முக்கிய காரணங்களுள் தையல் நாயகியும் ஒருவளாகத் திகழ்ந்தாள். சொந்த ஊரும், பழகிய மனிதர்களும், வீட்டில் தயார் செய்த உணவும் சேர்த்தே என்னை மீட்டெடுத்தது.
தற்போது கெரானா பெரும் தொற்று நல்ல காற்றோட்டமான வீட்டை சுத்தி வேப்ப மரம் மாமரம் இருப்பின் மிக நல்லது என என் தோழி மருத்துவர் கூறினாள். தற்போது ஒரு வீட்டை மயிலாடுதுறையில் வாடகைக்கு எடுத்து அதில் தங்கி உள்ளோம். வேப்ப மரம், மாமரம், தென்னை மரம் வீட்டில் ஃபேன், ஏசி போட வேண்டியது இல்லை என்னும் அளவிற்கு இயற்கை காற்று. இரவு நேரத்தில் அந்த இயற்கை எழில் கண்ணுறும் போது சிலாகித்துப் போகிறது மனம். சொந்த வீட்டை வைத்துக் கொண்டு வாடகை வீடு எடுத்திருப்பது லூசு என எல்லோரும் கூறுகிறார்கள்.
அன்புத் தோழமைகளே வாழக்கூடிய வாழ்க்கை மிக அதிகமாக எடுத்தாலும் 90 100 வருடம் மட்டுமே. அதிலும் குழந்தை பருவம் முதல்
கிழப்பருவம் வரை ஒதுக்கிவிட்டால் மீதி இருக்கக்கூடிய நாட்களில் பணத்தின் பின் ஓடும் நேரத்தையும் கழித்துவிட்டால், வாழ்க்கையை நாம் கண்ணுற்று வாழ்வது சில வருடங்களே அந்த சில வருடங்களில் உங்கள் தேவைக்கேற்ப அல்லது உங்களுக்கு பிடித்தபடி வாழுங்கள். அதற்காக அத்தியாவசியத்தை தவிர்த்து விடாதீர்கள்.
தற்போது உடல்நிலை சரியில்லாதபோது ராமச்சந்திர பிரபுவை தமது அண்ணனாக ஏற்றுக்கொண்ட குகனை போல் என்னை அக்காவாக ஏற்றுக்கொண்டு மிக சரியாக பசி நேரத் திற்கு மதிய உணவை விதவிதமாக அனுப்பி வைத்தார் தங்கை உஷா. அவர் விதவிதமாக சமைத்து அனுப்பிய போதும் சிறிது நாட்களில் ஏனோ உணவு வீட்டில் இருப்பவர்களுக்கு ஈடுபாடு இல்லாமல் போனது. ஹோட்டல் உணவு என்றால் பிடிக்கவில்லை என்று கூறலாம். என்னைவிட நன்றாக ருசியாக சமைத்து அனுப்பினார் உஷா.
ஏன் மற்றவர்களுக்கு உணவின் மீது ஈடுபாடு இல்லை மிகவும் யோசித்து இவ்வாறாக இருக்கலாம் என யூகித்தேன். அதேவேளையில் எனக்கும் உடல் சற்று நன்றாக ஆனது. வீட்டில் சமயலை செய்ய ஆரம்பித்தேன்.
வீட்டில் சமையல் செய்யக் கூடிய போது மூக்கின் வழியே சென்று உணர்ச்சிகளை தூண்டி பசி உணர்வை மென்மையாக தட்டி எழுப்பும். அவை வீடுகளில் கிடைப்பதால் தான் வீட்டில் சமைக்க கூடிய உணவு ருசியாகவும், ஆரோக்கியமாகவும், சுவை கூடியதாகவும் இருக்கிறது என்பதை சர்வநிச்சயமாக கண்டறிந்த தருணம் இது. தற்போது உணவுகள் யாருக்கும் போரடிக்கவில்லை பிடித்து சாப்பிடுகிறார்கள்.
ஆகவே எனது அருமை தோழமைகளே இதன் மூலம் கூறுவது என்னவென்றால் வீட்டில் சமைக்கும் போது அதன் வாடை அந்த வீட்டுக்குள் இருக்கிறது. வெளியிலிருந்து வரும் மனிதர்களையும் அந்த வாடை மென்மையாக கட்டி தழுவுகிறது. சாப்பாட்டை நோக்கி கட்டி இழுக்கிறது.
பெரும் நகரங்களில் தற்போது கட்டப்படும் வீடுகளில் சமையல் அறையை இல்லாமல் கட்டுவது ஃபேஷன் ஆகிறது.(non kitchen house) இவை கூறுவதில் பெருமை கொள்கிறார்கள்.
சர்வ நிச்சயமாக சொல்கிறேன் அவர்கள் வெகு விரைவாக மருத்துவமனைக்கு நடத்தப்படுவார்கள் அல்லது குடியேற்ற படுவார்கள்.
வீட்டில் மிக முக்கிய இடம் சமையலறை. சமையலை அன்போடும், மகிழ்ச்சியோடும் செய்பவர்களிடம் மனிதர்கள் இணக்கமாக நடந்து கொள்வார்கள். அன்பாக பழகுவார்கள். சமையல் செய்யக் கூடிய ஒருவர் ஹவுஸ் வைஃப் என்று மொத்தமாக கூற வேண்டியவர் அல்ல வீட்டு நிர்வாகி என்று பேங்க் மேனேஜருக்கு இணையாக, பள்ளி தலைமையாசிரியர் இனையாக, நாடாளும் மன்னனுக்கு இணையாக கொண்டாடப்பட வேண்டியவர். சுற்றியிருப்பவர்கள் கொண்டாடாமல் போகட்டும். உங்களை நீங்களே கொண்டாடி மகிழுங்கள்.
எனது அருமை சகோ தோழமைகளே நான் உங்களைப் பற்றி கூறுங்கள் என்று என் விபரத்தை கேட்கும்போது
கவிஞர் பேச்சாளர் எழுத்தாளர் தொழிலதிபர் இவற்றையெல்லாம் விட என் வீட்டின் சமையலை நானே செய்வேன் என்பதில் மிகப் பெருமையாக பல இடங்களில் கூறுவேன்.
சமையலறைக்குள் மட்டும் வாழும் பெண்களின் நிலை கண்டு பெண் விடுதலைக்காக பாரதியும், பெரியாரும் போராடினார்கள். சமையலறையை வீட்டை விட்டு வெளியேற்றுங்கள் என்று அவர்கள் கூறவில்லை.
சமையல் என்பது ஒரு கலை அந்த கலையில் சிறந்து விளங்குபவர் சிறந்த நிர்வாகியாக அவர் தன்னைத்தானே பெருமையோடு கருதவேண்டும்.
ஒரு மனிதனின் நாக்கைக் கட்டி போட தெரிந்தவர் உலகையே கட்டியாளாம் உணருங்கள். சமையலறையில் ஆரோக்கிய உணவு தயாரிப்பதை பற்றி விரைவில் காண்போம். *சமையலறையின் நறுமணமே நல்வாழ்வின் திறவுகோல்* பெண்களின் கைகளில் அந்த திறவுகோல் உள்ளது. பெண் விடுதலை என்பது சமையலறையை துறப்பது அல்ல. Non kitchen house உருவாக்குவது அல்ல.
விடுதலை என்பதையும் பெண்ணியம் என்பதையும் தெளிவாக புரிந்து கொள்ளும் ஒரு பெண்ணால்தான் சாதனைப் பெண்ணாக திகழ இயலும்.
No comments:
Post a Comment