Saturday, September 24, 2022

தி.,மு.க., மாவட்ட செயலாளர்கள் பதவிக்கான தேர்தலில்...மல்லுக்கட்டு!

தி.மு.க.,வில் அமைப்பு ரீதியாக உள்ள 72 மாவட்ட செயலர்கள் பதவிக்கு, அமைச்சர்களின் மாவட்டங்களை தவிர, மற்ற மாவட்டங்களில் கட்சியினர் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மேற்கு மாவட்டத்தில், மும்முனை போட்டிக்கு இடையேசுவாரஸ்யமும் காணப்படுகிறது. அதனால், தேர்தல் நடத்தி கோஷ்டி மோதலை பூதாகரமாக வெடிக்கச் செய்யாமல், மனுத்தாக்கல் செய்தவர்களை தனித்தனியாக அழைத்து சமரச பேச்சு நடத்தி, மாவட்ட செயலர்களை தேர்வு செய்ய, முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

தி.,மு.க., மாவட்ட செயலாளர்கள்  பதவிக்கான தேர்தலில்...மல்லுக்கட்டு!

தி.மு.க.,வில், அமைச்சருக்கு இணையாக, மாவட்ட செயலர் பதவி கருதப்படுகிறது.தேர்தல் நேரத்தில் போட்டியிட யாருக்கு 'சீட்' கொடுக்க வேண்டும்; யார் தலைமையில் விழா, பொதுக்கூட்டம் நடத்த வேண்டும்; யாருக்கு எந்தெந்த பதவி வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் அதிகாரம், மாவட்ட செயலர்களுக்கு தான் உண்டு.அவர்கள் தரும் பரிந்துரையை ஏற்று தான் கட்சி தலைமையும், இவ்விவகாரங்களில் முடிவு எடுக்கும்.


'பவர்புல்' பொறுப்பு


மேலும், மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் அரசு பணிகள், அதற்கான ஒப்பந்ததாரர்கள் நியமனம், கட்சி நிதி வசூல் என, உள்விவகாரங்களிலும் அவர்களின் அதிகார கொடியே பறக்கும். அந்தளவுக்கு, 'பவர்புல்' பொறுப்பாக கருதப்படுகிற, மாவட்ட செயலர் பதவிக்கான மனுத்தாக்கல், இம்மாதம் 22ம் தேதி துவங்கியது; இன்றுடன் முடிவடைகிற
முதல் நாளில், 19 மாவட்டங்களுக்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.அதில், துாத்துக்குடி வடக்கு, தெற்கு - கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி - மனோ தங்கராஜ், திண்டுக்கல் - சக்கரபாணி, விருதுநகர் வடக்கு, தெற்கு - சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்கள் மனுத்தாக்கல் செய்தனர். அவர்களுக்கு எதிராக யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

மதுரை மாநகர் - எம்.எல்.ஏ., தளபதி, அதலை செந்தில்; தேனி தெற்கு - கம்பம் ராமகிருஷ்ணன், ஜெயகுமார்; ராமநாதபுரம் - திவாகரன், முத்துராமலிங்கம் ஆகியோர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மாவட்டங்களில் இருமுனை போட்டி உருவாகி உள்ளது. இரண்டாவது நாளில், 21 மாவட்டங்களுக்கு மனுத் தாக்கல் நடந்தது. அதில், கரூர் - அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி, திருச்சி தெற்கு - அமைச்சர் மகேஷ் ஆகியோருக்கு எதிராக யாரும் போட்டியிட முன்வரவில்லை
நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் பதவிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.அதில் ஒரு சுவாரஸ்யமும்உள்ளது. அதாவது முதல்வர் ஸ்டாலின் தரப்பு ஆதரவுடன் வெப்படை செல்வராஜ், துர்கா தரப்பு ஆதரவுடன் எம்.எல்.ஏ., ராமலிங்கம், உதயநிதி தரப்பு ஆதரவுடன் மதுரா செந்தில் மல்லுக்கட்டுகின்றனர். இதில், யாருக்கு பதவி என்பதில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வடக்கு - அமைச்சர் ரகுபதி, கடலுார் கிழக்கு - அமைச்சர் பன்னீர்செல்வம், கடலுார் மேற்கு - அமைச்சர் கணேசன், அரியலுார் - அமைச்சர் சிவசங்கர், விழுப்புரம் வடக்கு - அமைச்சர் மஸ்தான், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலர் பதவிக்கு, எம்.எல்.ஏ., புகழேந்தி ஆகியோர் மட்டும் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.அதனால், இம்மாவட்டங்களில் போட்டி இல்லை.
அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டத்திற்கு, எம்.எல்.ஏ., வசந்த கார்த்திகேயனும், முன்னாள் எம்.எல்.ஏ., மூக்கப்பனும் மோதுகின்றனர்.அதேபோல, புதுக்கோட்டை வடக்கு மாவட்டத்தில், அமைச்சர் ரகுபதிக்கு எதிராக போட்டியிட அமைச்சர் மெய்யநாதன் விரும்புகிறார். அவர் களமிறங்கினால், ரகுபதிக்கு சிக்கல் என்பதால், மெய்யநாதன் தரப்பில் சமரச பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.இதுபோல, தேர்தலில் போட்டி நிலவும் மாவட்டங்களில் மனுத் தாக்கல் செய்தவர்களிடம், தேர்தல் பணிக் குழுவினரான அமைச்சர் நேரு, ஆ.ராஜா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சமரச பேச்சு நடத்தி வருகின்றனர்.


வாபஸ்

சிலர் மனுவை வாபஸ் பெறுவதாக, வாய்மொழியாக உத்தரவாதம் அளித்துள்ளனர்; சிலர் வாபஸ் பெற்றுள்ளனர்.

மொத்த முள்ள 72 மாவட்ட செயலர் பதவிக்கும் மனுத் தாக்கல் இன்று முடிகிறது.வாபஸ் பெறாதவர்களை தனித்தனியாக அழைத்து, முதல்வர் ஸ்டாலின் சமரசம் பேச முடிவு செய்துள்ளார். அதன்பின், புதிய மாவட்ட செயலர்கள் பட்டியல் வெளியிடப்படும் என, கட்சி வட்டாரங்கள் கூறின.இச்சூழலில், இறுதி நாளான இன்று, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கான மனுத் தாக்கல் நடக்கிறது.

மா.செ.,க்கள் மாற்றம்?


லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், தகுதியான நபர்களுக்கு மாவட்ட செயலர் பதவி வழங்க, தலைமை முடிவு செய்துள்ளது. அதனால், குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள ஏழெட்டு மாவட்ட செயலர்கள் மாற்றப்பட உள்ளனர்.சென்னையில் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக சிற்றரசு நியமிக்கப்பட்ட பின், அவரது செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சிகளில் அவரை புறக்கணித்தார். சிற்றரசுக்கு மாற்றாக, பகுதி செயலர் ஒருவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
தர்மபுரி மேற்கு மாவட்ட செயலராக உள்ள இன்பசேகரனுக்கு பதிலாக, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலராக உள்ள செங்குட்டுவனுக்கு பதிலாக, பர்கூர் தொகுதி எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் மாவட்ட செயலராகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. சேலம் மேற்கு மாவட்ட செயலர் செல்வ கணபதிக்கு போட்டியாக, ஒன்றிய செயலர் ரவிச்சந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் வேகமாக செயல்பட வேண்டும் என்பதால், ரவிச்சந்திரனுக்கு மாவட்ட செயலர் பதவி வழங்கவும், மாநில நிர்வாகியாக செல்வகணபதியை நியமிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...