தி.மு.க., அரசு பதவியேற்றது முதல், ஆரவல்லி, சூரவல்லி ஆட்சியைப் போல, மக்களை துன்புறுத்தும் வகையில், ஒவ்வொரு வரியாக உயர்த்தி, கசக்கி பிழிந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில், மக்கள் வெகுண்டெழுந்து போராட்டம் எதுவும் நடத்தி விடக் கூடாது என்பதற்காக, ஸ்டாலின் அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான், ஹிந்து மத எதிர்ப்பு மற்றும் சனாதனம் உள்ளிட்டவை. தமிழகத்தில் திராவிடம் என்ற வார்த்தையானது, அரசியல் கட்சிகளின் பெயர்களில் தவிர, வேறு எங்கும் புழக்கத்தில் இல்லை; கிடையவும் கிடையாது.
அது போன்றதே சனாதனம் என்ற வார்த்தை. ஹிந்து மதத்தில் எங்கும், எதிலும் புழக்கத்தில் இல்லாத வார்த்தையை வைத்து, கம்பு சுத்தி சிலம்பம் ஆடுகிறது கழக அரசு; அதையும் நேரடியாக செய்யாமல், கழக முன்னோடிகள் வாயிலாக செய்து வருகிறது. 'நாங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; ஹிந்து மதத்தின் பெயரால் கூறப்படும் சனாதனத்திற்கு தான் எதிரானவர்கள்' என்று அறைகூவலிடும், தி.மு.க., - எம்.பி., ஆண்டிமுத்து ராஜா அவர்களே...சனாதனம் என்ற வார்த்தையை யார், எங்கே உபயோகிக்கின்றனர்... தகுந்த ஆதாரங்களோடு நிரூபியுங்கள் பார்க்கலாம்.
நீங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை என்றால், அந்த ஹிந்து மதம் பற்றி ஏன் அடிக்கடி விமர்சிக்க வேண்டும்; ஏகடியம் பேசி எள்ளி நகையாட வேண்டும்? ஆக, மக்களின் எதிர்ப்பை திசை திருப்ப, கழகம் தற்போது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான் சனாதனம். 'மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்கு வதில் வல்லவர்' என்பார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
அந்தக் கூற்றை மெய்யாக்கும் வகையில், 'பிராமணீயத்துக்குத் தான் கழகம் எதிரி; பிராமணர்களுக்கு அல்ல' என்பார், கருணாநிதி. இது எப்படி எனில், 'நாங்கள் அரிசிக்கு தான் எதிரி; சோற்றுக்கு அல்ல' என்று சொல்வது போன்றது. அப்படிப்பட்ட ஒரு வாசகத்தை தான், தற்போது ஆ.ராஜாவும், கையில் எடுத்து, 'நாங்கள் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் இல்லை; சனாதனத்திற்கு தான் எதிரானவர்கள்' என்று கூறி வருகிறார்.
புழக்கத்தில் இல்லாத வார்த்தையை வைத்து, வேடிக்கை காட்டுவதில் கழகத்தினர் கைதேர்ந்தவர்கள். எந்த வார்த்தை ஆயுதம் வாயிலாக, தங்களை தற்காத்துக் கொள்ள தி.மு.க.,வினர் முற்படுகின்றனரோ, அந்த ஆயுதமே அவர்களை திருப்பித் தாக்கி, விரட்டும் நாள் வெகு துாரத்தில் இல்லை என்பது மட்டும் நிதர்சனம்.
No comments:
Post a Comment