இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன்,
சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம்
நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா
தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,
என்னடா இது? நமக்கு முன்னே இங்கே
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே
இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே
காணோமே!
வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய்
மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும்
சுழலும்போதுதான் தென்படுகிறது. அட....
இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில்
எள்விழ இடமில்லை!
ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை
கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய்
தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா!
நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு
அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள்
எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்!
ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….?
சுத்தம்! ஒரு ஈ, காக்கா கூட இல்லை!
என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்?
நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக
இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?
நீங்களெல்லாம் சைவர்கள்! ச்சீ….. வெட்கமாக
இல்லை உங்களுக்கு?
"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய
நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு…
“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே” என்று
உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில்
தோன்றிவிட்டு, சில்லாண்டிற் சிதையும்
சிலதேவர்களை நாடிப் போய் வீழ்ந்து
கிடக்கிறீர்களே! உங்களையெல்லாம்
என்னென்று சொல்வது ?
உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!
நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி,
தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும்
இது செய்யணும் என்று வற்புறுத்தி,
உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில
சோதிடர்கள், சில சிவாச்சாரியார்கள், பிரபல
ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக
வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!
ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!
இறைநம்பிக்கை
கொண்ட எவரையுமே, நாளும் கோளும்
எதுவுமே செய்யாது என்று……….. பின்னே?
எதற்காக இத்தனை அச்சம்?
ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும்
தெளிவாகிறது. இப்படி தோச பரிகாரம்,
கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும்
எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்!
எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!
உங்களைக் ஏளனம் செய்வதற்காக
இதைக்கூறவில்லை!
தயவு செய்து உண்மையை உணர்ந்து
கொள்ளுங்கள்.
இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம்
சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்)
இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்!
மிகப்பழைய ஆலயங்களுக்குச்
சென்றீர்களானால், அங்கே நவக்கிரக
திருமுன்களே இருக்காது! அப்படியும்
இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில்
கட்டப்பட்டதாகவே இருக்கும்! 500
வருடங்களிட்கு முன்பு எந்த
சிவாலயங்களிலுமே நவக்கிரக சன்னிதானங்கள்
இருந்ததில்லை.
அந்தந்த சிவாலயங்கள் யாரால்
வழிபடப்பட்டதோ அந்த மூர்த்தி மட்டும்
தனியாக பிரதிஸ்டை செய்யப்படிருந்தது.
உதாரணமாக சனி, திருநள்ளாறில்
சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால்
அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக
பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் . இது நம்
நாயன்மார்கள் தோன்றிய தலங்களில்
அவர்களின் விசேட சந்நிதிகள் அமைவது
போல..
திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை!
அது சனி பகவான் கோயில், திங்களூர்
சிவன்கோயில் இல்லை, அது சந்திரன்
கோயில்! வைத்தீசுவரன் கோவில்
சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய்
கோயில்! இப்படித்தான் இன்று அவை பிரபலம்
பெற்று விளங்குகின்றன.
நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக்
கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற
வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரி
யவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து
இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!
உண்மைதான்!
ஆனால், ஆணை செலுத்துபவனிடமே
அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்ன
தான் செய்யமுடியும்? அதை விடுத்து,
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது,
நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும்
இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??
கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம்,
திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம்
எத்தகைய ஆபத்துக்களையும்,
துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை
சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே
நடக்கும்.
மேற்படி பதிகங்களையும், அந்தந்த
நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில்
நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார
திருபதிகங்களையும் பாடி மூலவரான
சிவபெருமானை வழிபடுவதை விட நம் இடர்
களைவதற்கான உபாயமே வேறு இல்லை
என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.
மூலமூர்த்தியை வழிபட்ட பின்
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.
மூலமூர்த்தியாகிய சிவபெருமானை
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால்
யாதொரு பலனும் இல்லை.
No comments:
Post a Comment