மதுரை நகர் தி.மு.க., செயலர் தேர்தலில் தளபதி எம்.எல்.ஏ., வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதன் மூலம், அமைச்சர் மூர்த்தி கை ஓங்கியுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க., மாவட்ட செயலர் தேர்தலில் மதுரை நகரில் இரண்டாக இருந்த அமைப்பு ஒன்றாக மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு ஏற்கனவே நகர் தெற்கு செயலராக இருந்த தளபதி எம்.எல்.ஏ.,வும், இளைஞரணி மாநில துணை செயலர் அதலை செந்திலும் போட்டியிட்டனர்.
இதில் தளபதிக்கு அமைச்சர் மூர்த்தியும், அதலை செந்திலுக்கு அமைச்சர் தியாகராஜனும் மறைமுக ஆதரவு அளித்தனர்.தி.மு.க.,வின் 72 மாவட்டங்களில் இல்லாத அளவிற்கு இங்கு வட்டம், பகுதி, மாவட்ட பிரதிநிதிகளுக்கு பல லட்சங்கள் வாரியிறைக்கப்பட்டன.இது தவிர ஆதரவாளர்களை தக்க வைக்க அவர்களை சென்னை, புதுச்சேரிக்கு அழைத்து சென்று சொகுசு ஓட்டல்களில் மூன்று நாட்கள் தங்க வைத்தனர்.
சென்னையில் நேற்று நடந்த மனுக்கள் பரிசீலனையில் கடைசி நேரத்தில், அதலை செந்திலுக்கு நிர்வாகிகள் ஆதரவு போதிய எண்ணிக்கையில் இல்லை என தெரிய வந்தது. இதனால் அவர் மனுவை வாபஸ் பெற்றார். தளபதி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: இந்த தேர்தல் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்கு இடையே நடந்தது என்பது தான் எங்கள் கருத்து. மதுரை மேயர் தேர்வில் தியாகராஜன் தன்னிச்சையாக செயல்பட்டு தன் ஆதரவாளரை பதவிக்கு கொண்டு வந்தார். மா.செ., தேர்தலிலும் மறைமுகமாக தலையிட்டார். இதனால் இத்தேர்தலில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து தளபதியை ஜெயிக்க வைக்க களம் இறங்கினர்.
தேர்தலில் சென்னையிலும் மூத்த அமைச்சர்கள் பலர் மறைமுகமாக மூர்த்திக்கு 'சப்போர்ட்' செய்தனர்.தளபதி வெற்றி தியாகராஜனுக்கு பின்னடைவு தான். அமைச்சர் மூர்த்தி கை ஓங்கியுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்கள் கூறுகையில், 'அதலை செந்தில் மனுவை வாபஸ் பெறவில்லை. வெற்றி குறித்து கட்சி அறிவித்த பின் கருத்து தெரிவிப்போம். அதற்குள் எதுவும் நடக்கலாம்' என்றனர்.
No comments:
Post a Comment