Tuesday, September 27, 2022

சன்மானம்.

 அன்பானவார்த்தைகளே பெரிய சன்மானம்!


அமெரிக்காவில், ஓரிகன் மாகாணத்தில் உள்ள கல்லுாரியில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு, குறைந்த விலையில் உணவு சமைத்து கொடுக்கும் கவிதா:


என் இரண்டு மகள்களும், மேல் படிப்புக்காக சென்னையில் இருந்து அமெரிக்கா சென்றனர். அதை தொடர்ந்து, 2017ல் நானும், கணவரும் அமெரிக்காவில் குடியேறினோம். இங்கு, ஓரிகன் மாகாணத்தில், கார்வல்லிஸ் நகரத்தில் வசிக்கிறோம். இங்கிருக்கிற ஓரிகன் ஸ்டேட் யுனிவர்சிட்டி என்ற, பிரபலமான பல்கலையில், இந்திய மாணவர்களும் அதிகமாக படிக்கின்றனர். பல்கலையை சுற்றியுள்ள உணவகங்களில், இரண்டே இரண்டு தான் இந்திய உணவகங்கள். அங்குள்ள விலை, சுவை என, பல விஷயங்கள் இந்திய மாணவர்களுக்கு ஒத்து வரவில்லை. அமெரிக்காவில் எங்களுக்கு பழக்கமான இந்திய மாணவி ஒருவர், 'என்னை மாதிரியே, இங்கு தங்கி படிக்கிற இந்தியர்களுக்கு, நீங்க சமைத்து கொடுக்கலாமே' என்று கேட்டாங்க. சமையற் கலையை யும், ஓய்வு நேரத்தை யும் பயன்படுத்தி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையுமே என்று, புது முயற்சியை ஆரம்பித்தேன்.தினமும் அதிகாலை 3:30க்கு சமையல் வேலைகளை துவங்கி, கணவரின் உதவியுடன், 20க்கும் அதிகமான மாணவர்களின் இல்லத்துக்கே உணவுகளை கொண்டு சேர்க்கிறேன். சப்பாத்தி, குருமா, சாதம், சாம்பார், கூட்டு, பொரியல் என்று சமைப்பேன். என்னிடம் சாப்பாடு வாங்குபவர்களில், குஜராத்தி சைவ உணவு சாப்பிடும் மாணவர்கள் தான் அதிகம்.


அமெரிக்கா மற்றும் இத்தாலி மாணவர்கள் சிலருக்கும் அவ்வப்போது சமைத்து கொடுப்பேன். படிப்புக்காக பிள்ளைகளை வெளியூருக்கு அனுப்பி வைத்து விட்டு, 'சரியா சாப்பிட்டாங்களா, நல்ல சாப்பாடு கிடைக்குமா'ன்னு புலம்புற பெற்றோரின் மனநிலையை நானும் எதிர் கொண்டிருக்கிறேன். அதனால் தான், என்னிடம் சாப்பிடும் பசங்க, வீட்டு சாப்பாட்டை மிஸ் பண்ணாம, உணவு விஷயத்தில் உடல் நிலையை கெடுத்துக்க கூடாது என்று தான், லாப நோக்கத்துக்கு அப்பாற்பட்ட சேவையாக, இதைச் செய்கிறேன்.


இங்கிருக்கிற சுற்று வட்டார உணவகங்களில், ஒரு வேளை உணவுக்கு, 25 - 30 டாலர் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், நான் இரண்டு வேளைக்கு சேர்த்து, 10 டாலர் மட்டுமே வாங்குகிறேன். இந்தத் தொகை, சமையல் பொருட்கள் வாங்குவதற்கு போதுமானதாக இருக்கும். மற்றபடி என் உழைப்பு, லாபம் என்று, எதையும் கணக்கு பார்ப்பதுஇல்லை. 'எங்கம்மாவின் கைப்பக்குவத்தை மிஸ் பண்றதில்லை'ன்னு, பசங்க அன்போடு சொல்லும் வார்த்தைகள் தான், எனக்கான பெரிய சன்மானம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...