தமிழகத்தில் கோவையை தொடர்ந்து பல இடங்களில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தீக்கிரையாகி வருகின்றன. பா.ஜ., கட்சி மீது, 'பாசம்' வைத்துள்ள ஒரு பிரிவினர், இந்த பாதகச் செயல்களை செய்து வருகின்றனர்.
பல ஆண்டுகளுக்கு முன், கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அத்வானி வந்த போது, வரலாறு காணாத வகையில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது; பல உயிர்கள் பலியாகின. இந்த குண்டு வெடிப்பு நிகழ்வில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் அத்வானி. அதே போன்ற ஒரு சூழ்நிலை, தற்போதும் உருவாகி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ., காலுான்றுவது, பல அரசியல் கட்சிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. அதையே, தற்போதைய வன்முறை சம்பவங்கள் காட்டுகின்றன.சமீபத்தில் தமிழகம் வந்த பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, 'தமிழகம் புண்ணிய பூமி' என்று புகழாரம் சூட்டினார். அவர் இப்படி சொன்ன சில தினங்களிலேயே, கலவர பூமியாக மாறிக் கொண்டிருக்கிறது. மாநில அரசின் ஆதரவுடன், சில பிரிவினர் செய்யும் இந்த அடாவடிகளையும், சட்ட அத்துமீறல்களையும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அது, தன் கடமையை செய்ய வேண்டிய நிலை உருவானால், தி.மு.க., அரசு பல பிரச்னைகளை
எதிர்கொள்ள நேரிடும். எனவே, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டியது, ஸ்டாலின் அரசின் கடமையாகும். தமிழகம் புண்ணிய பூமியாகவே இருக்க வேண்டும்; கலவர பூமியாக மாற வேண்டாம். அதுவே எல்லாருக்கும் நல்லது.
No comments:
Post a Comment