'வேலைக்காக வெளிநாடு செல்வோர் அங்குள்ள நிறுவனங்கள் மற்றும் 'ஏஜென்ட்'கள் குறித்து விசாரித்து தெரிந்து கொண்ட பின்புதான் செல்ல வேண்டும்' என, வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் மென்பொருள் துறையில்வேலைக்கு, கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டில் கேரளாவின் கொச்சி, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரங்களில் நேர்முகத் தேர்வை தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது.இரு நகரங்களில் இருந்தும் 100 மென்பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தாய்லாந்து அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இறங்கியவுடன், அவர்கள் மியான்மருக்கு கடத்திச் செல்லப்பட்டனர். அங்கு, 'சைபர் கிரைம்' எனப்படும் இணைய வழி குற்றங்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தப்பட்டனர்.
மறுத்தவர்களுக்கு சரமாரி அடி, உதை விழுந்தது. அவர்களுக்கு சரியான உணவும் தராமல் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர்.மியான்மரில் சிக்கித் தவிக்கும் இளைஞர்களை மீட்க நம் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் மியான்மரின் மியாவடி நகரிலிருந்து 30 இளைஞர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:சமூக ஊடகங்களில் வரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்களை நம்ப வேண்டாம். மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்ட்கள் குறித்து, வெளிநாட்டு துாதரகங்களில் விசாரித்து அவற்றின் நம்பகத் தன்மையை உறுதி செய்த பிறகே வெளிநாட்டு வேலைக்கு செல்ல வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான மாநில மற்றும் மத்திய அரசின் துறைகளிலும் விசாரித்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment