தமிழக முதலமைச்சருக்கு
மீண்டும் ஒரு வேண்டுகோள் பதிவு!
இளைய தலைமுறையினருக்கு, திராவிட இயக்கத் தலைவர்களின் வரலாற்றைச் சொல்லும் பயிலரங்குகளை நடத்துகிறது திமுக தலைமை. கூடவே அமைச்சர்கள் முதலாக கட்சியின் வட்டச் செயலர் வரையிலான நிர்வாகிகளுக்கு திராவிட இயக்க முன்னோடிகளின் பண்பாட்டைச் சொல்லும் பயிலரங்குகளையும் நடத்துவது காலக் கட்டாயம் என்பதையே தமிழக அமைச்சர்கள் / மக்கள் பிரதிநிதிகள் சிலருடைய நடத்தைகள் உணர்த்துகின்றன.
தான் டாம்பீகமாக அமர்ந்தபடி தன்னைச் சந்திக்க வந்த பழங்குடி சமூக பிரதிநிதி பிரதிநிதியை நிற்க வைத்துப் பேசும் அமைச்சர் ஒருவரின் புகைப்படமும், அரசு அளிக்கும் மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை 'ஓசி' என்று விவரிக்கும் அமைச்சர் ஒருவரின் காணொளியும் அப்பட்டமான ஆண்டைத்தனம்தான். சென்னை மேயரை பலர் முன்னிலையில் ஓர் அமைச்சர் அதட்டியதையும் இதில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
எங்கோ ஒருவர், ஏதோ ஒரு முறை என்று இப்படி வெளிப்படவில்லை என்பதைத் திமுக தலைமை கவனிக்க வேண்டும். மேற்படி விஷயங்களிலேயே அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., பொன்முடி, நேரு ஆகியோர் இப்படி சர்ச்சையில் அடிபடுவது முதல் முறையாக அல்ல. அப்படியென்றால், இது எதை வெளிப்படுத்துகிறது?
கட்சிக்குள்ளேயே இது புரையோடிவிட்டிருக்கும் ஒரு பகுதியாக இருக்கிறது. அதிலும், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, கல்வித் துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். சித்தாந்த அடிப்படைகள் அறிந்தவர். திராவிட இயக்கத்தைப் பற்றி ஆய்வு செய்தவர். இன்றைக்கு ஆளுநருடன் கல்வித் துறை சார்ந்து முக்கியமான அரசியல் மோதலில் ஈடுபட்டிருப்பவர். அப்படிப்பட்டவரிடமே ஒரு பொதுக்கூட்டத்தில் இத்தகு சொல்மொழியும், உடல்மொழியும் வெளிப்படுகிறது என்றால், கீழே இத்தகு பின்னணி எல்லாம் இல்லாத ஒருவர் எப்படியெல்லாம் நடந்துகொள்ளலாம் என்பதைத் திமுக தலைமை எண்ணிப் பார்க்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட வேண்டும்; வெளிப்படையாக கட்சியினருக்கு இது தொடர்பிலான அறிவுறுத்தல்களைக் கொடுக்க வேண்டும். தொடர்ந்தும் மாறாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுயமரியாதை என்பது சக மனிதருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் மூலமாகவே பிறக்கிறது!
No comments:
Post a Comment