”திரும்பத் திரும்ப பிக் பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்ரியே, நீ திருந்தவே மாட்டியா?” என்றார் ஜட்ஜ் .
“எவ்வளவு தரம் பிக் பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டனையே தர்ரீங்களே, நீங்க சட்டத்தைத் திருத்த மாட்டீங்களா?” என்றான் பிக் பாக்கெட் பக்கிரி.
ஜட்ஜூக்கு சுருக்கென்றது.
ஜெயிலர், பிக் பாக்கெட் அடித்த பத்துப் பேரை ஒரு பிளாக்கில் வைத்தார். பக்கிரியைத் தனியாக அழைத்து சொன்னார்,
“இந்த பிளாக்கில் உனக்கு நேரப்படி சோறு கிடையாது. இந்த பிளாக்குக்கு ஒரு கேண்டீன் இருக்கிறது. செய்கிற வேலைக்கு தினமும் இருநூறு ரூபாய் கூலி. அதைக் கொண்டு போய் காசு கொடுத்துச் சாப்பிட வேண்டும். ஒரு டிஃபன் ஐம்பது ரூபாய். ஒரு சாப்பாடு நூறு ரூபாய். மிச்சம் பிடிக்கிற காசு உனக்கு”
பக்கிரி சந்தோஷமாக ஒப்புக் கொண்டான்.
ஜெயிலர் மற்ற ஒன்பது பேரைத் தனியாக அழைத்தார்.
“பக்கிரி கூலியை வாங்கிக்கிட்டு செல்லுக்குப் போகிற வழியில அவனை பிக் பாக்கெட் அடிக்கிறது உங்க வேலை. அவனுக்குத் தெரியவே கூடாது. தினம் ஒருத்தரா இந்த வேலையைச் செய்யணும், யார் எப்ப பண்றீங்கன்னு தெரியக் கூடாது. தெரிஞ்சா உங்க யாருக்கும் சோறு கிடையாது” என்றார்.
அவர்கள் இந்த தொழில் சவாலை ஏற்றார்கள்.
முதல் நாளே பக்கிரி பிக்பாக்கெட்டில் காசை விட்டான். எவ்வளவு கெஞ்சியும் அவனுக்கு இலவசமாய் டிஃபன் தரவில்லை. பசியில் அவனைத் துடிக்க விட்டு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச விட்டு அப்புறம் துளியூண்டு சாப்பிடத் தந்தார்கள்.
அவன் சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதை மற்ற ஒன்பது பேரும் பார்த்துக் கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை. ஆட்டத்துக்கு ஒப்புக் கொள்ளா விட்டால் ஒன்பது பேர் பட்டினி! அதை விட ஒருத்தன் பட்டினி பரவாயில்லையே!
எல்லோரும் விடுதலை ஆகும் அன்று ஜட்ஜ் வந்தார்.
“சட்டத்தையோ, தண்டனையையோ கடுமையாக மாற்றுகிற அதிகாரம் எனக்கில்லை. ஆனால் ஜெயில் வழக்கங்களை முன் அனுமதியோடு பரிட்சார்த்தமாக மாற்றும் அதிகாரம் ஜெயிலருக்கு உண்டு. உங்கள் மனப்பாங்கு இப்போது எப்படி இருக்கிறது?” என்றார்.
“ஒரு நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதிச்சதை ஒரு செக்கண்டில தட்டிக்கிட்டு போறது எவ்வளவு அக்கிரமம்ன்னு இப்போ புரியுது, இனி பிக்பாக்கெட் அடிக்க எனக்கு மனசு வராது” என்றான் பக்கிரி.
“பிக் பாக்கெட் கொடுத்தவன் பசியில துடிக்கிறதைப் பார்க்க சகிக்கல்லை. செத்தாலும் இனிமே பிக்பாக்கெட் அடிக்க மாட்டோம்” என்றார்கள் மற்ற ஒன்பது பேரும்.
ஜட்ஜ் ஒரு திருக்குறள் அபிமானி. வள்ளுவர் சொன்னதைத்தான் அவர் செய்தார்.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து
குற்றம் செய்யப்பட்ட சூழ்நிலையை ஆராய்ந்து, குற்றவாளி மீண்டும் அத்தகைய குற்றத்தைச் செய்யாத வண்ணம் தண்டனை வழங்குகிறவன்தான் சிறந்த அரசன் ஆவான்.
No comments:
Post a Comment