அ.தி.மு,க., பொதுச் செயலர் பதவிக்கு தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பொதுக் குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தொடர்ந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலர் பழனிசாமிக்கு 'நோட்டீஸ்' அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னையில், கடந்த ஜூலை 11ல் நடந்த அ.தி.மு.க., பொதுக் குழுவில், கட்சியின் இடைக்கால பொதுச் செயலராக முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அமர்வு, ஜூலை 11ல் நடந்த பொதுக் குழு செல்லாது என உத்தரவிட்டது.
இதையடுத்து, பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச், பொதுக் குழு செல்லும் என்றும், பழனிசாமி இடைக்கால பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் உத்தரவிட்டது.
விசாரணை
இதை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ரஞ்சித் குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் வாதிட்டதாவது:எங்கள் கட்சிக்காரர், அ.தி.மு.க.,வின் ஒருங்கிணைப்பாளராக தொடர்கிறார். அவரது ஐந்துஆண்டு பதவிக் காலம் 2026 டிசம்பரில் தான் முடிவடைகிறது. அதற்கு மாறாக பொதுச் செயலர் தேர்வு செய்யப்படுவது செல்லாது.
நோட்டீஸ்
கட்சியின் பொதுக் குழுவைக் கூட்ட, ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவை. ஆனால், சில காரணங்களை கூறி, இந்த விதிமுறையை டிவிஷன் பெஞ்ச் மாற்ற முடியாது. வழக்கு நிலுவையில் உள்ளபோது, நிரந்தர பொதுச் செயலரை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதற்கு தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.
இதையடுத்து, 'இந்த வழக்கை விசாரிக்கும் வரை, பொதுச் செயலருக்கான தேர்தலை நடத்த இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை, நவ., 21ல் நடக்கும்' என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்தி வைத்தனர். இதைத் தொடர்ந்து, 'பொதுச் செயலர் தேர்தலை நடத்த மாட்டோம்' என, பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இதைப் பதிவு செய்த நீதிபதிகள், பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்துள்ள வழக்கிற்கு பதில் அளிக்கும்படி, பழனிசாமி தரப்புக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment