1977. எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராகி ஆறு மாதம் ஆகியிருந்தது. தலைவர் கருணாநிதி அவர்கள் பட்டென்று ஒரு கடிதம், முரசொலியில் எழுதினார். ‘உடன் பிறப்பே...பார்த்தீரா. நடிகரின் ஆட்சியை. நாடெல்லாம் ஊழல். நாளெல்லாம் ஊழல்’ என்று கடிதம் தீட்டியிருந்தார்.
அடுத்த நாள் எம்.ஜி.ஆர் அவர்களின் அமைச்சரவையில் இருந்த நாஞ்சில் மனோகரன் ‘தென்னகம்’ பத்திரிகையில் ‘ஏய் கருணாநிதி என்று தொடங்கி புரட்சி தலைவர் ஆட்சியிலா ஊழல் என்று கேள்விக்கணைகளை வீசி, “அரசியலின் அசிங்கமே. தமிழகத்தின் களங்கமே” என்று பதிலடி கொடுத்திருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் அனல் தகித்தது. ‘உடன் பிறப்பே. பார்த்தாயா. நடிகர் கட்சியின் நாளேட்டை படித்தாயா. மந்திரக்கோல் எழுதியதை பார்த்தாயா. யார் இந்த மந்திரக்கோல் (நாஞ்சில் மனோகரன்) ? இருக்க இடமில்லாமல் படுக்க பாயில்லாமல் சத்தியவாணிமுத்துவின் வீட்டு தாழ்வாரத்தில் இருந்துகொண்டு மிஞ்சியதை வாங்கி உண்டு கழித்த மந்திரக்கோல் என்று தொடங்கி ‘நேற்று அப்படி இருந்த மந்திரக்கோலுக்கு இன்று அண்ணா நகரில் பத்து லட்சரூபாயில் பங்களா எப்படி வந்தது’ என்று போட்டு தாக்கியிருந்தார். இல்லை தீட்டியிருந்தார் கலைஞர்.
மீண்டும் அடுத்த நாள் ‘தென்னகம்’ பத்திரிகையில் “ஏ கருணாநிதி என்று தொடங்கி ‘அண்ணாநகர் வீடு பத்து லட்சமா? விற்பதுக்கு நான் தயார். வாங்குவதற்கு நீர் தயாரா’ என்று கேட்டு எழுதி கலைஞர் சொல்வதை அபாண்டம் என எழுதியிருந்தார்.
அடுத்த நாள் முரசொலியில் ‘உடன் பிறப்பே பார்த்தாயா. நடிகர் ஆட்சியின் மந்திரக்கோல் என்ன எழுதியிருக்கிறது. வீட்டை வாங்க தயாரா? என்று. கேட்கும் போதே உதிரம் கொதிக்கவில்லையா. தோள்கள் துடிக்கவில்லையா. அனுப்பு பணத்தை. வாங்கு வீட்டை’ என்று எழுதி முடிக்கிறார்.
அடுத்த நாளில் இருந்து தொண்டர்கள் அனுப்பும் பணம் வந்தபடியே இருக்கிறது. தினசரி இன்னார் இவ்வளவு தொகை என்றும் எழுதுகிறார். பதிமூன்று லட்சம் ரூபாய் வரை வந்து சேர்ந்தது. ஆனால் வீடு வாங்குவது பற்றி பேச்சு மூச்சில்லை.
கொஞ்ச காலத்தில் நிலை மாறுகிறது. எம்.ஜி.ஆரிடம் இருந்த நாஞ்சில் மனோகரன் திமுக பக்கம் வந்துவிடுகறார். அதே அண்ணா நகரில் கூட்டம். கலைஞரும் நாஞ்சில் மனோகரனும் ஒரே மேடையில் இருக்கிறார்கள். மைக்கை பிடித்த கலைஞர் ‘நாஞ்சில் மனோகரனை ஏகத்திற்கு புகழ்ந்து, இவரைப்போல உண்டா’ என்கிறார். கீழே உட்கார்ந்திருந்த தொண்டன் வழக்கம்போல உய்...உய்...என்று விசிலடித்தார்களே ஒழிய, ‘ஏன்யா...கொஞ்ச நாளைக்கு முன்னதான இவரை கஞ்சிக்கு வழியில்லாம, தாழ்வாரத்தில் படுத்துக்கிடந்தவன், இப்ப பத்து லட்ச ரூபாய் மதிப்பில் பங்களா வீடு கட்டியிருக்கான்னு சொன்னே. சொல்லி பணத்தை வசூலிச்சே. இப்ப என்னடான்னா இப்படி சொல்றீங்களே’ என்று ஒரு வார்த்தை கேட்கவில்லை.
தொண்டன் தொண்டன் ஆகவே இருக்கின்றான். தலைவன் தலைவனாகவே இருக்கிறான். படுக்க பாயுமில்லாமல் குடிக்க கஞ்சியுமில்லாமல் இருந்து, பத்து லட்ச ரூபாயில் பங்களா வீடு கட்டிய நாஞ்சிலாரை விமர்சித்த அதே தலைவர் தலைமுறை சொத்துக்களை குவித்துக்கொண்டிருக்கிறார் என்ற உண்மையை எந்த தொண்டனும் கேட்கவில்லை.
No comments:
Post a Comment