கோயிலில் நந்தியின் காதில் வேண்டுகோளைச் சொல்கிறார்களே, சரியா..?
சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று...
அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு முன்னால் நந்திக்குப் பின்னால் நின்று கொம்புகள் வழியாக இறைவனை தரிசிக்க வேண்டும்.
எக்காரணத்தைக் கொண்டும் இறைவனுக்கும், நந்திக்கும் இடையே இறைவனை மறைக்கும் விதமாகச் சென்று நிற்கக்கூடாது. உங்களது வேண்டுகோளையும், பிரார்த்தனைகளையும் நேரடியாக இறைவனிடமே முறையிடலாம்.
அதனை விடுத்து இறைவனை நோக்கித் தியானத்தில் அமர்ந்திருக்கும் நந்தியினைத் தொந்தரவு செய்யும் விதமாக அவரைத் தொடுவதும், அவரது காதுகளில் ரகசியமான முறையில் வேண்டு கோளைச் சொல்கிறேன் பேர்வழி என்று நம் எச்சில் படும் விதமாக குறைகளைச் சொல்வதும் முற்றிலும் தவறான ஒன்று.
பிரதோஷ காலத்தில் நந்தியின் சிரசில் இறைவனின் திருநடனக் காட்சி தென்படுவதால் அந்த நேரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளைச் செய்கிறோம். அந்த நேரத்தில் சிவனடியார்களின் தலைவனாகிய நந்திக்குச் செய்யப்படும் ஆராதனை அந்த ஆண்டவனுக்கே செய்யும் ஆராதனை என்பதால் தனிச் சிறப்பு பெறுகிறது. அதனைத் தவறாகப் புரிந்துகொண்டு நந்தியின் காதுகளில் வேண்டுகோளைச் சொல்வது என்பது வீணான செயல்.
ஓம் நமசிவாய வாழ்க
No comments:
Post a Comment