அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட வழக்கில் அவர் மனைவி ஆட்கொணர்வு மனு செய்ததை சிலர் கேலி செய்து பதிவு போடுகிறார்கள்.
ஆட்கொணர்வு மனு என்பது காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவது என்று பொதுவாக நினைக்கிறார்கள். அது இல்லை.
இம்மனுவினை சமர்ப்பிப்பதன் மூலம், அந்நபரின் தனி மனித உரிமை காக்கப்படுகிறது.
தனி மனித உரிமை பாதிக்கப்படும் போது, அக்குறையை நீக்குவதற்கும், பாதுகாப்பதற்கும், ஆட்கொணர்வு நீதிப் பேராணை பெரும்பங்கு வகிக்கிறது.
ஒரு தனிமனிதனின் சுதந்திரம் தடை செய்யப்படும் போது, நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிப்பதன் மூலம், அந்தத் தடை பற்றி விசாரித்து தக்க தீர்வு கோர உரிமை உள்ளது.
இந்த மனு தனிமனித உரிமைக்கு ஒரு சட்டப் பாதுகாப்பு அளிக்கிறது.
ஒருவரை வேண்டுமென்றோ அல்லது தவறாக காவல் துறையால் கைது செய்யப்பட்டு, சுதந்திரமற்று இருக்கும்போது, ஆட்கொணர்வு மனு மூலம் நீதிமன்றத்தை அணுகினால், அந்த நபரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் அரசு உயர் அதிகாரியாக இருந்தாலும் நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்து நிறுத்துவது காவல் துறையின் கடமையாகும்.
அந்த சுதந்திரத் தடை சட்டத்துக்குப் புறம்பாக இருப்பின், அவர் உடனடியாக விடுவிக்கப்படலாம்.
தகுந்த காரணமோ, ஆதாரமோ இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது சமூக ஆர்வலர்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு சமர்ப்பித்து, அவர்களின் தனி மனித உரிமைகளை காக்க இயலும்.
இது ரிட் மனு என்பதால் விரைவாக விசாரணையில் எடுக்கப்படும்.
அமைச்சரின் மனைவி ஆட்கொணர்வு மனு போட்டது சட்டப்படி சரியானது.
விசாரணையில் இருக்கும் ஆட்கொணர்வு மனுவை கேலி செய்து சமூகவலைதளங்களில் பதிவு போடுவது நீதிமன்ற அவமதிப்பில் வரும்.
கேலி அல்லது கிண்டல் செய்வதற்கும் அவமானம் செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
பணபலம் மற்றும் அதிகார பலம் உள்ளவர்களை கேலி செய்யும் முன் அதன் பின் விளைவுகளையும் கவனத்தில் கொள்ளவும். சில சமயம் பெரிய விலை தர வேண்டி இருக்கும்.
ஒரு ஃபேஸ்புக் பதிவால் எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்கு வேலை போனது. அவருடைய புரோபைலில் பணியில் இருக்கும் அலுவலக விபரங்கள் பார்த்து பாதிக்கப்பட்டவர் புகார் அளித்து விட்டார்.
ஃபேஸ்புக் புரோபைலில் அதிக விபரங்கள் முக்கியமாக செல் நம்பர் மற்றும் தற்போதய வேலை விபரங்கள் அடுத்தவர் பார்வைக்கு போகும்.
பெரிய அரசியல் கட்சிகள் ஐடி விங், வக்கீல் அணி என்று பலமான கட்டமைப்புடன் இருக்கும். சமூகவலைதள பதிவு மற்றும் ஈமெயில் விபரங்கள் எங்கேயிருந்து யார் அனுப்பியது என்று அதிகார பலத்தில் இருப்பவர்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
முக்கியமாக தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் அரசியல்வாதிகள் மற்றும் பதவியில் இருப்பவர்களை கேலி செய்து பதிவுகள் போடாதீர்கள்.
பிரச்சினை வந்தால் குழு உதவிக்கு வருவது கடினம்.
எச்சரிக்கையாக இருங்கள். எதையும் எளிதாக நினைக்காதீர்கள். நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்து நாம் சிரிப்பாய் சிரித்துவிடக் கூடாது.
நன்றி.
No comments:
Post a Comment