தமிழ்த் திரையுலகின் தனித்துவமான நடிகர்களில் மிக முக்கியமானவர் கேப்டன் விஜயகாந்த்.
நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனிதனாகவும் பலரது மனங்களை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் கேப்டன் விஜயகாந்த் குறித்து நெகிழ்ச்சியாக பேசியது வைரலாகி வருகிறது.
மூட்டையில் சம்பளத்தை கட்டிக் கொடுத்த கேப்டன்
கே பாக்யராஜ் இயக்கி அவரே ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் டார்லிங் டார்லிங் டார்லிங். 1982ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ஸ்டேஷன் மாஸ்டராக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார் லிவிங்ஸ்டன். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக தமிழ் திரையுலகில் அறிமுகமான லிவிங்ஸ்டன், 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
1990களுக்குப் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய அவர், அதன்பின் காமெடி, குணச்சித்திரம் என வெரைட்டியாக நடித்து கவனம் ஈர்த்தார். விஜயகாந்தின் 100வது படமாக கேப்டன் பிரபாகரனில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். அதேபோல், வல்லரசு, வானத்தைப்போல படங்களிலும் விஜயகாந்துடன் லிவிங்ஸ்டன் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜயகாந்த் குறித்து ஒரு பேட்டியில் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் லிவிங்ஸ்டன். அதாவது முதன் முதலில் தனக்கு லட்சங்களில் சம்பளம் கொடுத்தது கேப்டன் விஜயகாந்த் தான் எனக் கூறியுள்ளார். லிவிங்ஸ்டன் ஹீரோவாக நடித்த சுந்தர புருஷன் திரைப்படம் 1996ம் ஆண்டு வெளியானது. லிவிங்ஸ்டனுடன் ரம்பா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் 100 நாட்கள் வரை ஓடியது.
அப்போது லிவிங்ஸ்டனை அழைத்து தனது கம்பெனிக்கு ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் விஜயகாந்த். 'உனக்கும் எனக்கும் கல்யாணம்' என்ற டைட்டிலில் உருவான அந்தப் படம் வெளியாகவில்லை. ஆனால், லிவிங்ஸ்டனுக்காக அந்தப் படத்தில் விஜயகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் இனி பைக்கில் செல்ல வேண்டாம் என சொன்ன விஜயகாந்த், ராவுத்தர் ஃபிலிம்ஸ் சார்பில் லிவிங்ஸ்டனுக்கு புதிய கார் வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும், அதுவரை பதினைந்தாயிரம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த லிவிங்ஸ்டனுக்கு, 7.5 லட்சம் சம்பளம் கொடுத்து அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.
அப்போது 7.5 லட்சம் பணத்தை 100 ரூபாய் நோட்டுகளாக கேட்டாராம் லிவிங்ஸ்டன். தனது அம்மாவிடம் நிறைய பணம் சம்பாதிப்பேன் என சொல்லியிருந்தேன். அதனால், அவர்களிடம் 100 ரூபாய் நோட்டாக காட்டினால் சந்தோஷப்படுவார்கள் எனக் கூறியுள்ளார். இதனைக் கேட்டு சிரித்த விஜயகாந்த், 7.5 லட்சம் ரூபாய் பணத்தையும் 100 ரூபாயாக மாற்றி, ஒரு மூட்டையில் கட்டி லிவிங்ஸ்டனிடம் கொடுத்துள்ளார். இந்தச் சம்பவத்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் லிவிங்ஸ்டன்.
No comments:
Post a Comment