இந்த பாடலை எவ்வளவு முறை
கேட்டாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...
அண்ணாதுரை கண்ணதாசன்!
பாடல் எழுதுகின்றபோது சில சமயம் ‘அந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள்?’ என்பதை கேட்பார் அப்பா. வழக்கத்திற்கு மாறாக அவர்களது பெயரைப் பாடலில் சேர்ப்பார். சில சமயம் மக்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் அதை மறைமுகமாக சொல்வார். சில நேரங்களில் நேரடியாகவும் சொல்லிவிடுவார். பாடலுக்குப் பாடல் ஏதாவது புதுமை செய்யவேண்டும் என்று அப்பா நினைப்பார்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த படம் ‘பணத்தோட்டம்.’ அதில் ஒரு பாடலுக்கான சூழல் சொல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர் - சரோஜாதேவி இருவரும் பாடுகின்ற ஒரு காதல் பாடல்.
சரோஜாதேவியை ‘கன்னடத்து பைங்கிளி’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். அதுமட்டும் இல்லை. சரோஜாதேவி பேசுகின்ற கொஞ்சும் தமிழ், அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். அத்துடன் சரோஜாதேவியின் உடல் அமைப்பிற்காகவே பெரும்பாலான படங்களில் அவர் அசைந்து நடந்து செல்வதை (Back Shot) காட்டுவார்கள். அதனால் பாடலின் தொடக்கத்திலேயே எம்.ஜி.ஆர் பாடுவதாக-
“பேசுவது கிளியா - இல்லை பெண்ணரசி மொழியா
கோவில் கொண்ட சிலையா, கொத்து மலர்க் கொடியா”
என்று அப்பா எழுதினார்.
எம்.ஜி.ஆர்., கொடை வள்ளல் என்பது உலகிற்கு தெரியும். அவர் கேரள மேனன் குடும்பத்தைச் சேர்ந்தவர். இன்றைய கேரளம் என்பது அன்றைய சேர நாடு. ஆனால் எம்.ஜி.ஆர். முழுக்க முழுக்க வளர்ந்தது வாழ்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் என்பதும் அனைவருக்கும் தெரியும். அதனால் சரோஜாதேவி பாடுவதாக-
“பாடுவது கவியா - இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவா செந்தமிழர் நிலவா”
என்று எழுதினார்.
இந்த வரிகளை சாதாரணமாகப் பார்த்தால் ஒரு காதல் பாடல் போலத் தோன்றும். ஆழமாகப் பார்த்தால் தான் அனைத்தும் விளங்கும்.
இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டப் பிறகு, எம்.ஜி.ஆர். அந்தப் பாடல் வரிகளைக் கேட்டுவிட்டு புன்னகை செய்தார். அடுத்த சில தினங்களில் அவர், அப்பாவை ஒரு ஸ்டூடியோவில் பார்த்தார்.
என்ன கவிஞர்... சேரனுக்கு உறவா?” என்றார் எம்.ஜி.ஆர்
“ஆமா, பாரிவள்ளல் மகன். அவர்தான் செந்தமிழர் நிலவு” என்றார் அப்பா.
எம்.ஜி.ஆர். சிரித்துவிட்டார்.
இப்படி எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதனை ஏற்றுக்கொள்வதற்கு நல்ல மனமும் வேண்டும். இருவருக்கும் இரண்டும் இருந்ததால் தான் நமக்கு பல நல்ல பாடல்கள் கிடைத்தன
No comments:
Post a Comment