''தி.மு.க., கூட்டணி குறித்து, விரைவில் அறிவிக்கப்படும்,'' என, சென்னையில் நடந்த திருமண விழாவில், அக்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசினார்.
திருவள்ளூர் தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., - வி.ஜி.ராஜேந்திரன் மகள் பிரியதர்ஷினி - தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் வருண் ஆகியோரின் திருமணம், ஸ்டாலின் தலைமையில், நேற்று திருவான்மியூரில் நடந்தது.
விழாவில், ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., கூட்டணி குறித்து, விரைவில் அறிவிக்க உள்ளோம். ஆனால், இன்னொரு கூட்டணி அமைய உள்ளதையும், நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க., யாருடன் கூட்டணி அமைக்கவுள்ளது என்பது குறித்து, நாள்தோறும் பத்திரிகைகளில் செய்தி வருகிறது.
லோக்சபா தேர்தலுடன், 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரவுள்ளது. ஆறு மாதத்திற்கு மேல், எந்த சட்டசபை தொகுதியும் காலியாக இருக்கக் கூடாது என்பதால், தேர்தல் நடத்தியே தீர வேண்டும். ஆனால், இடைத்தேர்தல் வராமல் தடுக்கும் சூழ்ச்சிகளை, மத்திய அரசு செய்கிறது.
அரசு விழா என்றால், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட வேண்டும். ஆனால், பிரதமர் மோடி பங்கேற்ற, மதுரை நிகழ்ச்சியிலும், திருப்பூர் நிகழ்ச்சியிலும், இது, பின்பற்றப்படவில்லை. ஆனால், பிரசாரத்தில் மட்டும் தமிழிலும், திருக்குறளை மேற்கோள் காட்டியும் பேசுகிறார் என்றால், அவர், மக்களை ஏமாற்றுகிறார் என்று தானே அர்த்தம். எனவே, வரும் தேர்தல் வாயிலாக, மத்தியிலும், மாநிலத்திலும், நல்ல விடிவு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் பேசினார்.
No comments:
Post a Comment