♦உணவகங்களை மாத்திரமே அதிகம் நம்பியிருக்கும் அமொிக்காவில், உணவகங்கள் முழுவதுமாய் மூடப்பட்டிருக்கின்றன.
♦வாடிக்கையாளர்கள், அவர்களுக்குத் தேவைப்படும் உணவுப் பண்டங்களை இணையத்தின் வாயிலாகக் கோருகிறார்கள்.
♦பிறகு தேவையான உணவுப் பண்டங்கள் அவர்களின் இல்லங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.
♦சமையலறைகளில் சமைப்பவர்கள் தவிர, பரிமாறுபவர்கள் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
♦காரணம், நம் நாடுபோல் பரிமாறுபவர்களுக்கு இங்கே வரையறுக்கப்பட்ட ஊதியம் கிடையாது.
♦வாடிக்கையாளர்களின் மூலம் வரும் ‘டிப்ஸ்’ எனப்படும் குறைந்தபட்ச ஊக்கத்தொகை மாத்திரமே அவர்களின் மாத வருமானம்.
♦ஆனால், தற்போது உணவகங்களில் உணவு பரிமாற முழுவதுமாகத் தடை. பிறகெங்கே பரிமாறுபவர்கள் பிழைப்பது?
♦வணிக வளாகங்கள் மூடப்பட்டு விட்டன.
♦உணவுப்பொருட்கள் அல்லாத பிற அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் சில கடைகள் வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்காமல்,
♦அவர்களுக்கு வேண்டிய பொருட்களை இணையத்தின் வாயிலாகக் கோரச் செய்து,
♦அவைகளை கடைகளின் பணியாளர்கள் மூலம் வாசலிலேயே வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.
♦ பால், ரொட்டி, முட்டை, தண்ணீர், சோடா போன்றவைகள் ஒரு குடும்பத்திற்கு இவ்வளவுதான் என்ற நிலை.
♦மீன், கோழி, ஆடு, மாடு, பன்றி இறைச்சிகள் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டன.
♦பொதுவாக வருட இறுதியில் வரும் “தேங்க்ஸ் கிவிங்” என்று சொல்லப்படுகிற பண்டிகைக் காலங்களில் விற்கப்படும் வான் கோழி இறைச்சி இப்போதே விற்பனைக்கு வந்து விட்டன.
♦இறைச்சி இறக்குமதியும், இன்ன பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
♦உணவுப்பொருட்கள் விற்பனை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்படும் வகையில் கூடுதலாக வாங்கி, சேமித்து வைப்பது கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
♦கழிவறைப் பொருட்கள், கிருமி நாசினிகள் போன்றவற்றைக் கடைகளில் பார்த்து பல நாட்களாகிவிட்டது.
♦குழந்தைகளுக்கான உணவுப்பொருட்கள் குறைந்துகொண்டே வருகிறது.
♦பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு வீட்டிலிருந்தே இயங்கப் பணிக்கப்பட்டிருக்கின்றனர்.
♦சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
♦ஆயிரமாயிரம் கார்கள் பறக்கும் அதிவேக சாலைகளில் ஐம்பதுக்கும் குறைந்த கார்களேயே பார்க்க முடிகிறது.
♦அனைவர் கண்களிலும் மரணபயம் தொிகிறது.
♦ செல்லப் பிராணிகளை, வெளியில் அழைத்துச் சென்று காலாரக்கூட முடியாமல் கதி கலங்கிக் கிடக்கின்றனர்.
♦தவிர்க்க இயலாமல் கடைகளுக்குச் சென்றாலும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஆறு அல்லது ஏழு அடி இடைவெளியில் நிற்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
♦ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளும் பரிதாபத்தை நினைக்கையில்,
♦அவர்கள் எண்ண ஓட்டத்தில் இப்படித்தான் சிந்தனை ஓடுமோ எனத் தோன்றுகிறது.
♦அது “சாகப்போவது முதலில் நீயா அல்லது நானா” என்பதுதான்.
♦யாரைப் பார்த்தாலும் இவருக்குக் “கரோனா இருக்குமோ” என்ற சந்தேகமே தோன்றுகிறது.
♦இப்படியே போனால் இன்னும் எத்தனை நாட்கள் நாம் உயிரோடிருக்கப் போகிறோம் என்ற மரண பயம் ஒரு புறம்.
♦பெற்றோர்கள் தன் குழந்தைகளைப் பார்க்கும் போதெல்லாம்,
♦ நமக்கு ஏதாவது ஆகி விட்டால் நம் குழந்தைகளை யார் காப்பாற்றுவார் என்ற ஏக்கத்தை ஒவ்வொருவர் கண்களிலும் காண முடிகிறது.
♦காரணம் நாளுக்கு நாள் வேகமாய்ப் பரவி வரும் கரோனா புள்ளி விவரங்களே!
♦இதற்கெல்லாம் என்ன காரணம்? ஏன் இந்த நிலை?
♦யார் ஒருவர் இயற்கைக்கு புறம்பான ஒன்றைச் செய்தாலும் ஒட்டு மொத்த உலகமும் அதற்கான தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி.
♦அந்தப் பொறுப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. ஏனெனில் மனிதனைத் தவிர வேறெந்த ஜீவராசியும் இயற்கைக்குப் புறம்பானவற்றைச் செய்வதில்லை.
♦இந்தப் பிரபஞ்சத்தில், அனைத்து ஜீவராசிகளுக்கும் ஏன் இயந்திரங்களுக்கும்கூட ஓய்வு என்பது மிக மிக அவசியம்.
♦இப்படி பிரபஞ்சம் தொடங்கி இயந்திரம், செடி, கொடி, மரம், மனிதர்கள் என அனைத்து ஜீவன்களுக்கும் இயற்கை கொடுத்த தற்காலிகக் கட்டாய ஓய்வுதான் இந்தக் கரோனா தந்த ஓய்வு.
♦யாரோ, எங்கோ ஒரு மூலையில் செய்த தவற்றின் காரணமாக இன்றைக்கு ஒட்டு மொத்த உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. பீதியில் கிடக்கிறது.
♦வரலாறு காணாத இழப்பு. ஒவ்வொரு வினாடியும் யார் பிழைக்கப்போகிறோம், யார் உயிரோடு இருக்கப்போகிறோம் என்று
♦மரணத்தை நோக்கி நிற்கும் மனிதக்கூட்டத்தின் வரிசையில் எப்படியும் நாம் பிழைத்து விடுவோம் என்ற அசட்டு நம்பிக்கையில் காத்துக்கிடக்கிறோம்.
♦பிழைப்போமா அல்லது இருப்போமா?
♦போராடினாலும் சாவோம், போராடா விட்டாலும் சாவோம் ஆனால், போராடினால் பிழைத்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது.
♦அதனால் நாம் போராடத் தயாராவோம் !
No comments:
Post a Comment