Friday, May 8, 2020

மக்களா? மதுவா? மாநில அரசே முடிவெடு!

டாஸ்மாக் கடைகள் கொரோனா உற்பத்தி தளங்களாக மாறும்.
ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக தமிழ்நாட்டில் வரும் ஏழாம் தேதி முதல் மதுபான கடைகள் திறந்திருக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது; ஏமாற்றம் அளிக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து கடந்த 45 நாட்களாக அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன. முழு முடக்க நடவடிக்கைகள் (ஊரடங்கு) மிகப்பெரிய சிரமங்களை கொடுத்தாலும் கூட, டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழக பெண்கள் மத்தியில் மட்டுமல்ல, பெரும்பாலானோர் மத்தியிலும் ”கெட்டதிலும் நல்லது நடந்திருக்கிறது” என்ற நல்ல நம்பிக்கை ஏற்பட்டது.
இனிமேல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறக்காது என்றே அனைத்து மக்களும் எதிர்பார்த்தார்கள். குறிப்பாக, கொரோனா அழிக்கப்படும் வரை மதுபான கடைகள் திறக்கப்பட வாய்ப்பே இல்லை என உளம் மகிழ்ந்தார்கள். ஆனால் தமிழக மக்களுடைய எதிர்பார்ப்பிற்கு மாறாக, வரும் ஏழாம் தேதி முதல் மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு செய்திருப்பது முற்றிலும் தவறானதாகவே நாம் கருதுகிறோம்.
முழு முடக்கம் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனவர்களையும் ஒரு புதிய சூழலுக்கு தயார் படுத்தியிருந்தது. குடிக்காமல் இருக்க முடியும் என மனோ ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். தமிழகத்தில் மதுபானக்கடைகள் முற்றாக ஒழிக்கப்பட்டிருக்குமேயானால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான லட்சகணக்கான இளைஞர்களும், நடுத்தர வயதினரும் அதிலிருந்து முற்றாக விடுதலை பெற்றிருப்பார்கள்.
ஏறக்குறைய, ஐம்பது வருடங்களுக்கு பிறகு குடிப்பழக்கம் அற்ற தமிழ் சமுதாயத்தை கண்ணில் காண்பதற்கான அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த அரிய வாய்ப்பை எடப்பாடி அரசு நழுவ விட்டுவிட்டதாகவே கருதுகிறேன். மேலும், படிப்படியாக மதுபானம் தமிழகத்தில் இருந்து முற்றாக ஒழிக்கப்படும் என்று மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும் இவர்கள் சொல்லி வந்ததும் பச்சைப் பொய் என தெரிகிறது.
கொரோனா கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முற்றாக ஒழிக்கப்பட பல மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். இந்நிலையில் டாஸ்மாக் திறக்கப்படும் என்ற தமிழக அரசின் முடிவால் பல்வேறு புதிய தீமைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்படும். மளிகை கடைகளிலும், காய்கறி கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள், மதுக்கடைகளில் எப்படி சமூக இடைவெளியை கடைபிடிப்பார்கள்?
எனவே, கொரோனாவை ஒழிப்பதற்கான முதல் கட்டுப்பாடு ஏழாம் தேதியோடு காற்றில் பறக்கவிடப்படும். கோயம்பேடு காய்கறி மார்க்கெட் எப்படி கொரோனா தீவிரமடைவதற்கு காரணமாக அமைந்ததோ? அதுபோல, இனிமேல் டாஸ்மாக் கடைகளும் கொரோனா உற்பத்தி தளங்களாக மாறலாம்.
கொரோனாவை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும் என்பது மருத்துவ விதி! மதுபானம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் என்பதும் மதுபான விதி!! எனவே, டாஸ்மாக்கால் கொரோனா புத்துயிர் பெறும் என்பது புது விதி ஆகும்.
மது குடிக்க பார்கள் திறக்கப்படாது. அவர்கள் எங்கே குடிப்பார்கள்? வீதியிலா? அல்லது வீட்டிலா? வீட்டில் குடிக்க குடும்பம் அனுமதிக்குமா? குடித்த பின் அங்கு அமைதி நிலவுமா?
ஒன்றரை மாத காலம் யாருக்கும் வேலை இல்லை. பெரும்பாலான மக்கள் பசியோடும், பட்டினியோடும் இருக்கிறார்கள். தொழிலும் இல்லை; வருமானமும் இல்லை. மதுபானம் வாங்க வழி என்ன? ஒன்று கடனாளியாக வேண்டும். இல்லையென்றால், குடும்ப உண்டியலில் கை வைக்க வேண்டும். இது போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் குடும்பத்திற்குள் எழ வாய்ப்பு உண்டு.
மேலும், குடித்தவர்களுடைய உடலின் பல உறுப்புகள் பழுதுபடக்கூடிய வாய்ப்பு உள்ளதால் கொரோனா இவர்களை எளிதாக தாக்கும். குடித்தவர்கள் அறிகுறிகளே இல்லாமல் எளிதில் நோய்களை (Carrier’s) பரப்பக் கூடியவர்களாக வலம் வருவார்கள்.
அதுமட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும், சமுதாயத்திலும், சண்டைகளும்; சச்சரவுகளும் மேலோங்கும். மேலும் காவல்துறை ஊரடங்கு உத்தரவை அமலாக்குமா? அல்லது இதுபோன்ற குடிகாரர்களால் ஏற்படும் பிரச்சனைகளை தீர்த்து வைக்குமா?
அரசு ஒரே ஒரு காரணத்தை சொல்லக்கூடும். டாஸ்மாக்கில் கிடைக்கக்கூடிய வருமானம் குறைகிறது என்பதே அரசின் கருத்தாக இருக்கும். அரசினுடைய பக்கம் நியாயம் கூட இருப்பதாக கூட வைத்துக் கொள்வோம். ஆனால், கடந்த 45 நாளில் முழு முடக்கத்தால் இலட்சக்கணக்கான கோடி ரூபாய் இந்திய நாட்டுக்கும், தமிழகத்திற்கும் இழப்பு ஏற்பட்டிருப்பினும் கொரோனா என்ற அந்த கொள்ளை நோயை தடுப்பதற்காகத் தான் இத்தனை கஷ்டங்களையும், இந்திய மக்கள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் இந்த கொள்ளை நோயில் இருந்து விடுபடுவதற்கான வெளிச்சம் கண்களுக்கு தென்படவில்லை. தமிழக அரசு மதுக்கடைகளை தமிழகத்தில் திறக்கும் பட்சத்தில் அதுவும் கொரோனா நோயை அதிகரிப்பதற்கு முக்கிய காரணியாக விளங்கும். மற்ற மாநிலங்களில், செய்த தவறை தமிழ்நாடும் செய்ய வேண்டிய அவசியமில்லை.
டாஸ்மாக் இழப்பை சரிகட்ட பல வழிகள் அரசுக்கு உண்டு. அரசின் ஊதாரித்தனமான பல செலவுகளை குறையுங்கள். இம்மியளவும் ஊழல் இல்லாத அளவில் அனைத்து துறைகளிலும் டெண்டர்களை வெளிப்படையாக்குங்கள். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும், பலன் அளிக்காத அனைத்து இலவச திட்டங்களையும் முற்றாக நிறுத்தி வையுங்கள்.
இப்பொழுது அரசுக்கு தேவையானது, ஒரே குறிக்கோள் தான்.
டாஸ்மாக்கை முற்றாக ஒழித்து, கொரோனாவையும் முற்றாக ஒழித்து தமிழக மக்களை காப்பாற்றுவதா? அல்லது மீண்டும் தமிழக மக்களை மதுவாலும், இலவசங்களாலும் மூழ்கடித்து, கொரோனாவை தமிழக மக்களோடு இரண்டற கலக்க வைப்பதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
இப்படிபட்ட சூழலில் தமிழக அரசிற்கு ஒரு வழிதான் உண்டு. மக்களா? மதுவா? என்று முடிவெடுக்க வேண்டும். மக்களுக்காக மதுவை இழக்கலாம். மதுவுக்காக மக்களை இழக்க கூடாது; இயலாது; முடியாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...