மக்கள் மது குடித்தாக வேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது. கட்டாயப்படுத்துகிறது என்று சொல்வதே சரி. டீக்கடைகளைத் திறக்கக்கூட தாமதம் செய்த அரசு மதுக்கடைகளைத் திறந்தது. தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் வரை செல்கிறது. மதுவுக்கு அப்படி என்ன அவசரம், அவசியம்? என்ன அவசரமோ, அவசியமோ அது மக்களுக்கு இருப்பதை விட அரசாங்கத்திற்கு அதிகமாக இருக்கிறது. அரசாங்கம் என்பது என்ன? அரசியல்வாதி கும்பல், அதற்கு வளைந்து கொடுக்கும் அதிகார வர்கம். மதுவில் இருக்கிறது ஒரு கூட்டுக்கொள்ளை. மது தொழிற்சாலைகள், மது விநியோகம், மது விற்பனைக் கூடங்கள் எல்லாமே பினாமி அரசியல் வளையத்துக்குள் தான் வருகின்றன.
நாற்பது நாட்களுக்கு மேல் விடுமுறை என்றால் இந்த பினாமிகளால் நஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. யார் எக்கேடு கெட்டுப் போனால் என்ன என்று இவர்கள் மதுக்கடைகளைத் திறந்தார்கள். பத்து அல்லது பதினைந்து நாட்களுக்கு முன்பு மது கடைகள் மூடப்பட்டதனால் நாங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம் என்று அடித்தட்டுப் பெண்மணிகள் பேட்டி கொடுத்தார்கள். அதை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. மதுக் கடைகளைத் திறந்ததும் பெண்கள் போராடினார்கள். குடியர்கள் தெருவில் கூத்தாடினார்கள். அரசாங்கம் அதைப் பொருட்படுத்தவில்லை. உயர்நீதிமன்றம் தடை விதித்தால் உச்சநீதிமன்றம் வரை செல்கிறது அரசாங்கம். இனி சர்வதேச நீதிமன்றத்திற்கும் செல்லுமோ, என்னவோ?
தள்ளாடும் அரசாங்கத்தின் நிதி நிலையை மது தூக்கி நிறுத்துகிறது என்பது உண்மையானால் ஆவின் கடைகளை மது கடைகளாக மாற்றிவிடலாமே. வீட்டுக்கு வீடு பாலுக்கு பதிலாக மதுபானம் விநியோகித்துக் கட்டாய வசூல் செய்யலாமே. அரசாங்க கஜானாவுக்கு வரவு ஆயிரம் ஆயிரம் கோடிகள் சேரும் என்றால் அரசியல்வாதிகளின் கஜானாவுக்கு நூற்றுக்கணக்கான கோடிகள் சேராதா? இப்போது புரிகிறதா பொருளாதாரம் என்னவென்று? ஆக, மது யாருக்கு?
No comments:
Post a Comment