உலகிலேயே மிக உயரமான மகா சனீஸ்வர பகவான்!
உலகிலேயே மிக உயரமான மகா சனீஸ்வர பகவான்!
விழுப்புரம் மாவட்டம், வானூரில் உலகிலேயே 27 அடி உயரம் கொண்ட விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது.
திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் வழியில் டோல்கேட் அருகில் இந்த பிரம்மாண்ட சனீஸ்வரன் திருத்தலம் உள்ளது.
கோயிலுக்குள் செல்லும் முன், 80 அடி உயரத்தில் அமைந்துள்ள பிரம்மாண்ட மகா கும்ப கோபுரம் மற்றும் 54 அடி கொண்ட மகா கணபதியின் முதுகு பகுதியைத்தான் நாம் முதலில் தரிசிக்கிறோம்.
விநாயகரின் முதுகில் ‘நாளை வா’ என்ற வாசகம் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கிறது.
கோயில் உள்ளே சென்று இந்த மகா கணபதியை தரிசிக்க 27 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். படிகள் ஏறிய பின் சிவலிங்கம் ஒன்றுள்ளது.
இதற்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து வருகின்றனர். இதனால் தங்களின் தோஷங்கள் நீங்குவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இதன் இடதுபுறம் சண்முக சுப்ரமணிய சுவாமி, வலது புறத்தில் கல்யாண சுந்தரரும், அம்பிகை கோகிலாம்பாளும் எழுந்தருளியுள்ளனர்.
துர்கா, கணபதி, ஷேத்ரபாலகர், அபயங்கரர், வாஸ்து புருஷன் முதலிய தேவதைகளும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
கிரக சாந்தி மகா கணபதிக்கு எதிரில் உலகிலேயே மிக உயரான 27 அடி உயர விஸ்வரூப மகா சனீஸ்வரர் பகவான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட இந்த மகா சனீஸ்வரர் சிலை, பீடத்துடன் 33 அடி கொண்டதாக உள்ளது. தங்க நிறத்தில் ஒளிரும் சனீஸ்வரர், தன் வாகனமான காக்கையுடன் இல்லாமல் கழுகு வாகனத்துடன் உள்ளார்.
நான்கு கரங்களுடன் காட்சி தரும் இவர், மேல் வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் வைத்துள்ளார். கீழ் வலது, இடது கரங்கள் அபயம், வரதம் கொண்டு திகழ்கிறார்.
மகா சனீஸ்வரர் பீடத்தின் பின்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. நவக்கிரகங்கள், தத்தம் வாகனங்களுடன் எழுந்தருளுகின்றனர்.
108 திவ்ய விருட்சங்களுக்கு மத்தியில் இந்த சனீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. 12 ராசிகளுக்கான செடிகள், 27 நட்சத்திரங்களுக்கான செடிகள், 9 கிரகங்களுக்குரிய செடிகள், 60 வருடங்களுக்கான மரங்கள் என மொத்தம் 108 விருட்சங்கள் இங்கு உள்ளன.
வண்ண வண்ண மலர் வகைகள் கொண்ட எழில் மிகு தோட்டம் அமைந்துள்ளது. பல்வேறு வகை மலர்கள் இங்கு பூத்து குலுங்குவது பார்ப்பதற்கு அழகாக உள்ளது.
இந்த எழில் மிகு தோட்டத்தின் நடுவில் சுமார் 40 அடி நீளமுள்ள வாஸ்து பகவான் படுத்த நிலையில் அருள்புரிகிறார். இவரை தரிசித்தால் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
80 அடி உயரம் கொண்ட மகா கும்ப கோபுரத்தில், சனிப்பெயர்ச்சி அன்று 8 ஆயிரம் லிட்டர் எண்ணெய் ஊற்றப்பட்டு விளக்கு ஏற்றப்படுகிறது.
மொரட்டாண்டி சித்தர் தவம் செய்த இடத்தில் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது என்றும், மொரட்டாண்டி சித்தர், தன் கனவில் வந்து கூறியபடியே இந்த ஆலயம் எழுப்பப்பட்டு பக்தர்களின் பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இத்தலத்திற்கு சென்று, இங்குள்ள தெய்வங்களைத் தரிசிப்பதால் திருமணத்தடை, வியபாரத்தடை, குடும்ப பிரச்சனை உள்ளிட்டவை தீருவதாகவும் கூறுகின்றனர். இங்குள்ள கோசாலையில் கோதானம், கோபூஜை செய்து பக்தர்கள் கோமாதா அருளைப் பெறலாம்.
சனிப்பெயர்ச்சியின்போது, இந்த மகா சனீஸ்வரரைத் தரிசிப்பது சிறப்பு என மக்கள் நம்பிக்கைத் தொிவிக்கின்றனா்.
No comments:
Post a Comment